Tuesday, November 10, 2015

உரிமை பெறும் திருநங்கையர்! ------ இரா.உமா


illakiya 350தி.மு.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் சட்ட முன்வரைவு (மசோதா) ஒன்று, ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை, அந்த அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேறியிருக்கிறது.
1970க்குப் பிறகு, 45 ஆண்டுகள் கழித்து இந்த தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப் பட்டுள்ளது, அதுவும் இன்றைய அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க நிகழ்வுதான். ஆனாலும், அது திருநங்கை களுக்கான சட்ட முன்வரைவு என்பது தான் கூடுதல் சிறப்பு.
குடும்பத்தாலும், சமூகத்தாலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு வரும் திருநங்கைகளின் முன்னேற்றத் திற்காக, “திருநங்கைகள் உரிமை மசோதா - 2014” என்பதே அந்த சட்ட முன்வரைவு.
உலகில் 29க்கும் மேற்பட்ட நாடு களில் திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அந்த நிலைமை இல்லை. இதை மாற்றுவதற்கு இந்த சட்ட முன்வரைவு வழிசெய்யும் என்று கூறியிருக்கிறார் திருச்சி சிவா.
இந்தியாவிலேயே முதன் முறையாகத் திருநங்கைகளுக்கென தனி வாரியம், கடந்த திமுக ஆட்சியில்தான் கலைஞர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது-. இந்த ஆட்சியில் அது முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கொண்டு வந்த இந்த சட்ட முன்வரைவு, மாநில அளவிலும், தேசிய அளவிலும் திருநங்கை களுக்கான ஆணையம் அமைக்க வகை செய்யும்.
குரலற்றவர்களின் குரலாக மாநிலங்களவையில் எதிரொலித்துள்ள, திருச்சி சிவாவுக்கும், திமுக தலைவர் கலைஞர் மற்றும் பொருளாளர் தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கும், திருநங்கைகள் நேரிலும், ஊடகங்களிலும் நன்றி தெரிவித்துள்ளனர்.
நிகழ்த்துக் கலைஞரான திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா, இச் சட்டமுன்வரைவு சட்ட வடிவம் பெறும்போது, கவனத்தில் கொள்ள வேண்டியவை என்று சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்:
transgenders 600
“நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இந்த மசோதாவின் மூலம் எங்களுக்குக் கிடைக்கும். இதுவே நாங்கள் கண்ணியமாக வாழ உதவும். 2 கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டுகிறேன்.
ஒன்று, திருநங்கைகளோடு சேர்த்து, திருநம்பிகளின் உரிமைகளையும் பேணும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும். அவர்களும் எங்களைப் போலவே பாலின் மாற்றுத் திறனாளிகள்தான்.
இரண்டாவது, எங்களை மூன்றாம் பாலினம் என்று குறிப்பிடுவதைத் தவிர்த்து, ‘பாலின மாற்றுத் திறனாளிகள்’ என்று குறிப்பிடவேண்டும்.”
உலகில் இயற்கையாக இருக்கின்ற இரண்டு பாலினங்களில் ஏதேனும் ஒன்றாகத்தான், மனதளவிலும் பிறகு உடல் அளவிலும் அவர்கள் மாறுகிறார்கள். பிறகு எங்கிருந்து மூன்றாவது பாலினம் என் ஒன்று வருகிறது. எனவே வித்யா சொல்வதையும் கவனிக்க வேண்டியுள்ளது-. அரசின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பெறுவதற்காக, சாதி சான்றிதழ் வழங்குவதைப் போல, எங்களுக்கான உரிமைகளைப் பெற வசதியாக, ‘பாலின மாற்றுத் திறனாளி’ என்று மருத்துவச் சான்றிதழ் வழங்குங்கள் என்பதும் நியாயமான ஆலோசனையே!
மனித உரிமையின் பாற்பட்டு அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘திருநங்கைகள் உரிமை மசோதா - 2014’ சட்ட வடிவம் பெறும்போது, இவை எல்லாம் கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

http://keetru.com/index.php/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/3474-2009-11-06-09-02-45/karunchetti-thamilar-may-1-2015/28523-2015-05-16-06-18-54

No comments:

Post a Comment