Wednesday, November 11, 2015

”போடா ஒம்போது...” - பொன்.வாசுதேவன்

‘போடா ஒம்போது…‘
பொன்.வாசுதேவன்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு எங்கள் தெருவில் இருக்கும் 1200 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவைக் காணச் சென்றிருந்தேன். பல வருடங்களாக நடத்தப்படாமல் நின்று போயிருந்த தெப்பத் திருவிழா கடந்த ஆண்டு முதல் மறுபடியும் தொடங்கியிருக்கிறது.
சிறுவயதுகளில் தெப்பம் குளத்தில் மிதந்து செல்வதைக் காண்பது வியப்பும், விந்தையுமானதொரு அனுபவத்தைத் தந்திருக்கிறது. எதையுமே தன்னிச்சையாக அனுபவித்து, ரசிப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லை. அதுபோன்ற மனோநிலையுடன் மாலை 5 மணிக்குச் சென்று குளத்தருகில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
தெப்பம் கட்டும் வேலை காலை முதல் நடந்து கொண்டிருக்கிறது.
மொழிக்கவர்ச்சி காரணமாக வார்த்தைகள் எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்று அறிந்து கொள்வதில் கடந்த சில வருடங்களாக எனக்கு ஆர்வமும், வசீகரமும் இருந்தததால் அது சார்ந்து பல புத்தகங்களை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். காலையில் பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதியில் தெப்பம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடி, ‘புணைஅல்லது மரக்கலம்என்பதே பொருள் என அறிந்தேன். ஆனால் தெப்பம் மரங்களை மட்டும் பிணைத்துக் கட்டப்படவில்லை. காலமாற்றத்திற்கேற்ப பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்களை ஒன்றோடொன்று கயிற்றினால் இறுக்கி கூடவே மரக்கட்டைகளையும் சேர்த்து தெப்பம் செய்திருந்தார்கள்.
பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வண்ணக்கலவையாகக் காட்சியளித்தது. குளத்தைச் சுற்றிலும் சிறுவர்கள் கூட்டாக விளையாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள். பள்ளி விடுமுறையாதலால் அவர்களின் கொண்டாட்டம் கூடுதலாயிருந்தது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்.
ஒருவரை ஒருவர் சேட்டை செய்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் மற்றொரு சிறுவனைப் பார்த்து திடீரென போடா ஒம்போதுஎன்று கத்தினான். எதற்காக சொன்னான் என்பது தெரியவில்லை. பதிலுக்கு அவன் துரத்த இருவரும் தொலைவில் ஒருவரையொருவர் விரட்டி ஓடிக் கொண்டிருந்தார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வார்த்தையைக் கேட்க நேரிட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த வார்த்தைப் பிரயோகமெல்லாம் இப்போது கிடையாது திருநங்கைகள் உரிய அங்கீகாரத்துடன் உலா வரத் தொடங்கியிருக்கும் காலம் இது என எண்ணிக் கொண்டிருந்தேன்.
பள்ளிக் காலங்களில் பலமுறை கேட்ட வார்த்தைதான். திருநங்கைகள் என்றாலே மனதில் இனம்புரியாத பயம் தோன்றியிருந்த காலம் அது. அப்போதெல்லாம் ஒன்பது’, ‘பொட்டை‘, ‘ரெண்டுங்கெட்டான்’ ,‘ஏழரை... ஒன்றரை’, எனப் பல வார்த்தைகள் புழக்கத்திலிருந்தது. பள்ளியில் மிகச் சாதாரணமாக இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.
எங்கள் பகுதியில் பெரும்பாலும் ரிக் ஷா ஓட்டிகளிடமிருந்துதான் இந்த வார்த்தைகள் புழக்கத்திற்கு வந்து கொண்டிருந்தன என மாணவப் பருவத்தில் நாங்களும் யூகித்திருந்தோம். திங்கட் கிழமைகளில் நடக்கும் வாரச் சந்தையில் கடைகளில் காசு கேட்க வரும் திருநங்கைகள் அனைவரும் ரிக் ஷா ஓட்டிகளுக்கு பரிச்சயமானவர்களாக இருந்தார்கள்.
சிறுவயதில் தெருச்சண்டைகளை வேடிக்கை பார்ப்பதிலும் தீராக்காதல் இருந்தது. ‘அவனை என்ன செய்யறேன் பாரு என்று பலமுறை சொல்லி, மேற்கொண்டு எதுவுமே செய்யாமல் இருப்பவர்களையும், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இழுக்கும் போது என்னை விடுடா விடுடாஎன்று சொல்லி கத்திக் கொண்டிருப்பவர்களையும் பார்க்க உற்சாகமாயிருக்கும். திருநங்கைகளைப் போல பயமூட்டிய மற்றொரு சொல் மாங்காத் தல’ "சாப்பிடலைன்னா... மாங்காய்த்தலை கிட்டே பிடிச்சு கொடுத்திடுவேன்னு சொன்ன பிறகு பயந்து மாயமாய் உணவு உண்ட காலங்கள் உண்டு. மாங்காய்த்தலை மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், விரை போல சுருங்கிய தலையுடன், நீண்ட கழுத்தும், ஒல்லியான.. உயர்ந்த கறுத்த உருவத்துடன், கோமணம் மட்டுமே ஆடையாக சற்றே கூன் வளைந்து நடந்து செல்லும் உருவம் அது. அவர்களை கல்லால் அடித்து விரட்டும் துணிச்சலான சிறுவர்களும் உண்டு. அவர்களெல்லாம் ஓணானை நூலில் கட்டிப் பிடிப்பது, கழுதை வாலில் பட்டாசு கட்டுவது போன்ற வீரச்செயல்களுக்காக அவரவர் வீடுகளில் விழுப்புண் பெற்றவர்கள். இப்போதெல்லாம் மாங்காய்த்தலை என்று யாருமே இல்லை. என் போன்றவர்களின் ஞாபகங்களில் இருந்து மீட்டியெடுத்தால் மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். இன்று இதை எழுதும்போது நினைவுக்கு வருகிறதே தவிர இதுநாள் வரை நானும் மாங்காய்த்தலை என்பது யார்... ஏன் அவர்கள் இப்படியிருந்தார்கள் என்று யோசித்ததில்லை.
பயமாகவும், புதிராகவும் பின்பு ஆர்வமாகவுமே இருந்த திருநங்கைகளைப் பற்றிய தெளிவு ஓரளவு வந்தது 2006ஆம் ஆண்டில்தான். 2006-இல் நானும் எனது நண்பர் மனோவும் சென்னை தியாகராய நகரில் இரவு 10 மணிக்கு விருதுநகர் ஓட்டலில்சாப்பிட்டு வெளியே வந்தோம். மிதமான போதையில் இருந்த நாங்கள் பீடா வாங்குவதற்காக அருகே இருந்த கடையில் நின்றோம். அப்போது எங்களைத்தாண்டி சிறிது தொலைவில் சென்று நின்ற காரில் தெருவோரம் நின்றிருந்த அழகான பெண் ஒருத்தி ஏறினாள். காரில் ஏறிய பெண்ணின் நடை, உடை, பாவனை வித்தியாசமாக இருந்ததால் அது பெண்ணாக இருக்க முடியாது, திருநங்கையாகத்தான் இருக்கும் என்றேன் நான். பிறகு நாங்கள் கிளம்பி விட்டோம். ஒரு மாதம் கழித்து அதே பகுதியில் நானும் நண்பர் மனோவும் வந்திருந்த போது அங்கு நின்றிருந்த ஒரு திருநங்கையைப் பார்த்தோம். அருகில் சென்று பேசினோம். அவரை நேரில் பார்த்தால் திருநங்கை என்றே கருத இயலாது. அவர், தான் பாலியல் தொழில் புரிவதாகக் கூறினார். எங்களோடு வந்து காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் பணம் தருகிறோம் என்று கூறினோம். அவரும் சம்மதித்தார். பிறகு நாங்கள் மூவரும் மது (பியர்) அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பல கேள்விகளுக்கு விடையாக தெளிவான பேச்சு ஹேமாஎன்ற அவரிடமிருந்து கிடைத்தது. தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டது பற்றியும், ஆண் உருவத்தில் நடமாடும் கோத்திகள்பற்றியும் விளக்கினார். மும்பை, புனே உள்பட பல பகுதிகளில் வசித்து வந்த அந்தத் திருநங்கை பி.., வரை படித்திருப்பதாகக் கூறினார். தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசினார். ‘தாய்என்ற அமைப்பு அவர்களைப் போன்றவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறினார். இதுபோல் பாலியல் தொழில் செய்வது ஏன் என்ற கேள்விக்கு அவர் சரியான பதிலைச் சொல்லவில்லை. பெரிய மனிதர்கள், காரில் வருபவர்கள் என அவரது பாலியல் தொழில் ஹை-டெக் முறையில் இருந்தது. அவர்களின் சில நிமிட இச்சைகளைப் பூர்த்தி செய்வதன் வாயிலாக ஓரிரு மணி நேரங்களில் ஆயிரம் ரூபாய் வரை தினசரி கிடைத்து விடுவதாகவும், மாதம் ஐந்தாயிரம் ரூபாய் விடுதிக்குச் செலுத்தி விடுவதாகவும் கூறினார். கடலூரைச் சேர்ந்த அவர் தனது வீட்டிற்கும் பணம் அனுப்புவதாகக் கூறினார். வேலை கிடைக்காத நிலை உள்ளதால்தான் இதெல்லாம் என்று ஜீவனற்ற குரலில் தெரிவித்தார். பிறகு அவரிடம் கூவாகம் பற்றிக் கேட்டதற்கு எங்களுக்கு சித்திரை மாதத்தில் நடக்கவிருக்கும் தாலியறுப்புவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அவரது அலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு விடைபெற்றோம். அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ளவில்லை.
2007 சித்திரை மாதம் பௌர்ணமியன்று கூவாகம் சென்று என்னதான் நடக்கிறதென்று பார்த்து விடுவதென முடிவு செய்து மனோவும் நானும் புறப்பட்டோம். போகும்போதே கடுமையான மனத்தயக்கங்கள்... போகலாமா... கூடாதா... இதற்கு போய்த்தான் ஆக வேண்டுமா என்றெல்லாம் எங்களுக்குள் கேள்விகள். விழுப்புரம் நகரம் கோலாகலமாக இருந்தது. திருநங்கைகளின் நடமாட்டம் பரவலாக இருந்தது. விழுப்புரத்தைத் தாண்டியதும் கூவாகம் செல்லும் வழி கேட்டு வலது புறமாக திரும்பி பயணித்தோம். எதிரில் வளையல், பொட்டு விற்பவர்கள் தள்ளுவண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். கூவாகத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று அவர்களிடம் வழி கேட்ட போது, ஒரு வாரமாக திருவிழா நடந்து முதல் நாள் இரவோடு முடிந்து விட்டது என்றார்கள். எங்களுக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது. வந்ததற்கு கோவில் அருகிலாவது சென்று பார்த்து விட்டு வரலாமென, ஊருக்குள் திரும்பும் மண் சாலையில் பயணித்தோம். தண்ணீர் பாக்கெட் உறை, பான்பராக், சாப்பிட்ட இலைகள், கற்களை முக்கோணமாக்கி அதன் மேல் பொங்கல் வைத்ததற்கான அடையாளமாக கரி எனக் குப்பையாகக் காட்சியளித்தது. மிகவும் சிறிய ஊர். கோவிலும் சிறியதுதான். கோவில் அடைக்கப்பட்டிருந்தது. பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம். விழுப்புரத்தை வந்தடைந்ததும், ஏற்கனவே எங்களுக்குப் பரிச்சயமான திருநங்கை ஹேமாவையாவது பார்க்க முடியுமா என யோசித்து அலைபேசியில் தொடர்பு கொண்டோம். தொடர்பு கொள்ள இயலவில்லை. பிறகு, அவர் கூறியிருந்த விடுதியின் பெயரை விசாரித்து, செல்ல முடிவெடுத்து ஆண்டவர் லாட்ஜ்எங்குள்ளது எனக்கேட்டு, பாண்டிச்சேரி செல்லும் சாலையை அடைந்து ஆண்டவர் லாட்ஜிற்குச் சென்று சேர்ந்தோம்.
ஆண்டவர் லாட்ஜ்வழியெங்கும் திருநங்கைகள் கூட்டமாக நிரம்பியிருந்தது. அந்தச் சூழலில் நாங்கள்தான் வினோத ஜீவன்களாக ஆகியிருந்தோம். விடுதியின் வாசலை நாங்கள் அடைந்ததும் எங்களை நான்கைந்து பேர் சூழ்ந்து கொண்டு யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டனர். நாங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கும் திருநங்கையின் தோழர்கள், அவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் வேறேதும் கேட்காமல் இரண்டாவது மாடியின் ஒரு அறை எண்ணைச் சொல்லி போகச் சொன்னார்கள். அந்த விடுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகளைக் காண நேரிட்டது.
படிகளில் ஏறும் போதே ஒவ்வொரு அறையும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. மனதில் பயம் கலந்த உணர்வுடன், சென்றோம். குறிப்பிட்ட அறையில் நாங்கள் தேடி வந்த திருநங்கை இல்லை, வெளியே சென்றிருந்தார். வேறு நான்கு திருநங்கைகள் இருந்தனர். திருநங்கை ஹேமாவைத் தேடி வந்ததையும், கோவில் வரை சென்று திரும்பி வந்ததையும் கூறியதும் நட்பாகப் பேசினார்கள்.

அங்கு இருந்தவர்களில் ஒரு திருநங்கை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சரளமாகப் பேசினார். மாலினி என்ற பெயர் கூறிய அவர் சேலத்தை சொந்த ஊராகக் கொண்டவர். ஹைதராபாத்தில் கணினி சார்ந்த பணி புரிவதாகக் கூறிய அவர் கூவாகம் திருவிழா நடைபெறும் பத்து நாட்கள் மட்டும் பெண் உடையில் இருப்பதாகச் சொன்னார். அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு தான் ஒரு திருநங்கை என்பது தெரியாது என்றார்.
சமூகத்தின் மீதான அவர்களது பயம், ‘நிர்வாணம்’ (அறுவை சிகிச்சை) செய்து கொள்வதில் ஆர்வமிருந்தாலும், இருத்தல் சார்ந்த பிரச்சினைகள் இருப்பதால் பல நேரங்களில் கோத்தியாகவும், கூவாகம் வந்தால் மட்டும் பெண்ணாகவும் இரட்டை வேட வாழ்க்கை வாழ்வது எனப் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார் மாலினி. அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளுக்கு வடிகாலாகவே வருடத்திற்கொருமுறை கூவாகம் வந்து செல்வதாகக் கூறிய அவர், இந்த சந்தோஷத்திற்கு இணையான சுகம் வேறெதிலும் இல்லை என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு அம்மா (அவரும் திருநங்கைதான்) இருக்கிறார்கள். ‘எல்லோரையும் தாய்தான் பிரசவிக்கிறாள், நாங்கள் ரீத்துசெய்து எங்களுக்கான தாயையே பிரசவித்துக் கொள்கிறோம்என்றார்.
 நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடுதியை விட்டுக் கீழிறங்கி இரவு 7.30 மணிக்கு வந்தோம். அருகிலிருந்த பாருக்குச் செல்லலாம் என்று மாலினி கூறியதும், அவருடன் அவரது குருவும் கூட வந்தார். சுமார் 60 வயதிருக்கும் அவருக்கு... ‘பியர்அருந்தியதும், ‘வாழ்க்கையில் பல சுகதுக்கங்களை அனுபவித்திருக்கிறேன். எங்களைப் போல வாழ்வு யாருக்கும் வரக்கூடாதுஎன்றெல்லாம் சுய இரக்கத்துடன் பேசினார்.
தெருவெங்கும் விழாக்கோலமாக இருந்தது. பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். மாலினியிடம் இவ்வாறு உடல் தொடர்புகள் வைத்துக் கொள்வதால் உடல்நலக் கேடுகள்என்றதற்கு... ‘தனியார் தொண்டு நிறுவனங்களும், அரசும் வழங்கும் ஆணுறை மற்றும் ஜெல்போன்றவற்றைப் பயன்படுத்துவதில் சமீபகாலமாக அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, வேறு வழியில்லாமல்தான் இதைச் செய்கிறார்கள்என்றார். பாலியல் தொழிலே புரியாத பலரும் அங்கிருந்தார்கள்.
பெரும்பான்மை திருநங்கைகள் பெண்கள் என்றே நம்பிவிடக் கூடிய அளவிற்கு அழகுடையவர்களாக இருந்தார்கள். சில சிறுவயதுப் பையன்களையும் அங்கே காண முடிந்தது. இன்னதென்று விவரிக்க முடியாத மன உணர்வுடன், அவர்களிடமிருந்து விடைபெற்றுத் திரும்பினோம்.
 திருநங்கைகளுக்காக நாம் இரக்கப்பட்டும், இயல்பூட்டத்துடன் நடந்து கொண்டாலும் இதுவரை அவர்களுக்காக, சிறு பண உதவிகள், அவர்களைப் பற்றி எழுதி நாம் பிரபலமாதல் என்பது தவிர்த்து வேறென்ன நாம் செய்திருக்கிறோம் ?
போடா ஒம்போதுஎன்ற சிறுவனின் வார்த்தையைக் கேட்ட பிறகு இந்தக் கேள்விதான் என்னைத் துரத்தியது. திருநங்கைகள் பற்றிய தெளிவானதொரு பார்வையையாவது ஏற்படுத்தியிருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. நாம் படிக்கிறோம், எழுதுகிறோம், பேசுகிறோம், பரிதாபப்படுகிறோம்... இதையேதான் செய்து கொண்டிருக்கிறோம்.

திருநங்கைகள் பற்றி திருநங்கையே எழுதிய முதல் புத்தகம் உணர்வும் உருவமும்‘. திருநங்கை ரேவதி தொகுத்து எழுதியது. (அடையாளம் வெளியீடு) (2006). அதன் பிறகு வெளியானது நான் (சரவணன்) வித்யாதிருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாஎழுதியது. (கிழக்கு பதிப்பகம்) (2007). அடுத்ததாக, ‘எஸ்.பாலபாரதிஎழுதிய அவன் - அது = அவர்கள்’ (தோழமை வெளியீடு) (2008)
கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று புத்தகங்கள் திருநங்கைகள் பற்றி வெளிவந்துள்ளன. (நானறிந்த வகையில்)
தாய்லாந்து சென்றிருந்த போது, அங்கு பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் திருநங்கைகளை பணிக்கு வைத்திருந்ததைக் கண்டேன். (அவர்களை அங்கு ‘Ladyboy’ என அழைக்கின்றனர்) இங்கு ஏன் அத்தகையதொரு சூழல் உருவாகவில்லை. நாம் என்னதான் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் மக்களிடையே சரியான புரிதலற்ற சூழலில் நமது செய்கைகள் கேலிக்குறியதாக ஆகிவிடக்கூடாது. திருநங்கைகளும் நம்மில் ஒருவர்தான் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மீதான நமது வக்கிரப் பார்வைகளையும், எள்ளலையும் கைவிட்டு அவர்களுடன் அணுக்கமான சூழலை உருவாக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் திருநங்கைகளுக்கு தகுந்த பணியிடங்களை அளிக்க முன்வர வேண்டும். இதற்கான ஆரம்பத்தை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசு செயல்படுத்தி திருநங்கைகள் வாழ்வை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இப்படிப் பல வேண்டும்இருக்கின்றன. அரசு சார்ந்த அங்கீகாரங்கள், சலுகைகள் வழங்கப்படுவதன் வாயிலாக பொதுமக்களிடம் திருநங்கைகளைப் பற்றிய சரியான புரிந்துணர்வு ஏற்படும். ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடராஜபுரம்என்ற இடத்தில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ‘கண்ணாடி கலைக்குழுஎன்ற பெயரில் அங்கிருக்கும் திருநங்கைகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும், திருநங்கைகள் என்பதற்காக அவர்களுக்கான கல்வி மறுக்கப்படக்கூடாதெனவும், அத்தகைய நிலை இருப்பது குறித்து கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால் குறிப்பிட்ட அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
ஆஷா பாரதி, பிரியா பாபு உள்ளிட்ட திருநங்கைகள் கூட்டாக இணைந்து தமிழ்நாடு அரவாணிகள் சங்கத்தின் சார்பில் தொடுத்த பொதுநல வழக்கின் பலனாக இன்று மூன்றாவது பாலினம்என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இதன் பிரதிபலனாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நிகழ்வில் இது முக்கிய நகர்வு.
ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தின் சோஹாபூர் தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட்டு ஷப்னம் மௌஸிஎன்ற திருநங்கை 2000-த்தில் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் மத்தியப் பிரதேசம் கட்னிநகரின் மேயராக கம்லா ஜான்தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2002-இல் கருவுறும் தகுதியற்றவர்என்பதால், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஷப்னம் மௌஸியை உயர்நீதி மன்றம் தகுதியிழப்பு செய்துவிட்டது. 2005-ஆம் ஆண்டில், திருநங்கைகளை ‘E’ (Enuch) எனப் பதிந்து கடவுச்சீட்டு வழங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.
எல்லாம் சரி... நாம் என்ன செய்யப்போகிறோம்.
1.திருநங்கைகள் என்பவர்களும் நம்மில் ஒருவர்தான் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துதல்.
2.இயன்றவரை திருநங்கைகளுக்குப் பணி வாய்ப்பு வழங்கவும், பணியிலமர்த்தவும் முன்வருதல்.
3.திருநங்கைகளின் கலை, இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.
4.குழந்தைகளிடம் திருநங்கைகளை சராசரி மனிதர்களாக பாவிக்கப் பழக்குதல்.
இதுபோன்ற செயல்கள் மட்டுமே திருநங்கைகளைப் புரிந்துணர்ந்த நமது செய்கைகளை அர்த்தப்படுத்துவதாக அமையும்.

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=1215

No comments:

Post a Comment