Tuesday, November 10, 2015

மாற்றுப் பாலியல் - நூல்கள் மற்றும் குறும்படம் ----- ஜ.சிவக்குமார்

1. நான் வித்யா, லிவிங்ஸ்மைல் வித்யா, கிழக்கு பதிப்பகம், 2007
ஆண் உடலும் பெண் உணர்வும் கொண்ட, தனது சுயம் பற்றிய தேடல் கொண்ட ஒருவரின் சுயசரிதை இது. பட்டதாரியான வித்யா பிச்சையெடுப்பதற்கான காரணம் நிர்வாணம் செய்துகொண்டு தன்னடையாளத்தை மீட்ªடுப்பதற்கே. “நான் சரவணந்தான் இல்லையே தவிர மனிதப் பிறவிதான். பிசாசோ பூதமோ அல்ல” எனும் வித்யாவின் வார்த்தைகள் சமூகம் அவருக்குக் கொடுத்த வலிகளின் எதிர்வினையே. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒருவருக்கே இத்தனை வலிகளென்றால் கல்வி மறுக்கப்பட்டு வறுமையில் உழலும் அரவானிகளின் நிலையைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அரவானியின் இரத்தமும் சதையுமான முதல் பதிவு இந்நூல்.


2. அவன் - அது = அவள், யெஸ். பாலபாரதி, தோழமை வெளியீடு, ஜூலை 2008
அரவானிகள் குறித்த அக்கறையோடு கள ஆய்வினூடாக எழுதப்பட்டது இந்நாவல். அதேசமயம் அரவானிகளின் வலி இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூவாகம் திருவிழாவிற்கு தன்னந்தனியே வரும் கோபி வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது, பெண்ணாய் உணரும் தன்னை ஆணாய் நடந்து கொள்ளச் சொல்லி குடும்பத்தின் வழியாக சமூகம் தன்னை கட்டாயப்படுத்துவது என அரவானிகளின் வலிகள் அழுத்தமாகவும் இயல்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வட்டார வழக்கு, திருநங்கையருக்கென இருக்கும் பிரத்யேக மொழி, இந்தி எனப் பல்வேறு மொழிகளை இயல்பாகப் பயன்படுத்துகிறார். சில சொற்களுக்கு அடிக்குறிப்பில் விளக்கமும் தருகிறார்.


3. மூன்றாம் பாலின் முகம், பிரியா பாபு, சந்தியா பதிப்பகம், டிசம்பர் 2007
அரவானியாக மாற விரும்பும் ரமேஷ் என்ற இளைஞனுக்கும் அவன் மீது கொண்ட பாசத்தால் அதனைத் தடுக்க முயலும் தாய்க்கும் இடையிலான உணர்வுபூர்வமான போராட்டத்தை இந்நாவல் சித்திரிக்கிறது. குடும்பமும் சமூகமும் எதிர்த்தாலும் தன் பிள்ளையி னுடைய உணர்வைப் புரிந்துகொண்டு அவன் அரவானியாக மாறுவதற்கு அந்தத் தாய் உதவுகிறாள். மறுபுறம் அரவானிகளின் அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணமாக அவர்களைப் புரிந்துகொள்ளாத சமூகமும் குடும்பமுமே இருக்கிறது என்பதை இந்நாவல் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்கள் தாங்களே ஒரு குழுமமாக வாழ்கின்றனர். இதேபோல் நிர்வாணம் செய்துகொள்ளல், கூவாகம் திருவிழா, பெண்ணுடை அணிவதிலும் பெண்ணாகப் பார்க்கப்படுவதிலும் உள்ள மகிழ்ச்சி முதலானவற்றை அரவானிகள் குறித்த எழுத்துக்கள் அனைத்தும் பதிவு செய்கின்றன.


4. உணர்வும் உருவமும், ரேவதி, அடையாளம், சங்கமா
பத்துக்கும் மேற்பட்ட அரவானிகளைப் பேட்டி கண்டு அதனைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார் ரேவதி. அரவானிகளின் வலிகள், உணர்வுகள், சமூகம் புறக்கணிப்பதால் படும் பாடுகள், நிர்வாணம் செய்து கொள்ளுதலின் உயிர் வலி, காதல் கலியாணம் குறித்த ஏக்கங்கள் முதலானவற்றை இத்தொகுப்பின்வழி உணரமுடிகிறது. தன்னால் விளங்கிக் கொள்ள முடியாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றைக் கொடுமைப்படுத்தி புறக்கணிப்பது நம் சமூகத்திற்கு இயல்பானது. இத்தொகுப்பை வாசிப்பவர்கள் அரவானிகளை இழிவாகவோ ஏளனமாகவோ கருதமாட்டார்கள் என்பதே இத்தொகுப்பின் வெற்றி. இத் தொகுப்பின் உரையாடல் மொழி வேறுபட்ட வாசிப்பனுவத்தைத் தரும். இந்நூலில் புழங்கும் சில குழூஉக் குறிகளுக்கான அர்த்தமும் பொதுத் தமிழில் கொடுக்கப்பட் டுள்ளன.


5. அரவானிகள் சமூக வரைவியல், பிரியாபாபு, தென்திசை பதிப்பகம், அக்டோபர் 2007
ஓர் அரவானியால் தன் சமூக வரைவியல் குறித்து எழுதப்பட்ட முதல் நூல் இது. ‘பொதுவெளிச் சமூகத்தில் உள்ள அனைத்து இனங்களிலும் ஆணாய்ப் பிறந்து பெண் உணர்வைப் பெற்று, உணர்வுகள் மாற்றத்தால் பெண்ணாய் போகிறவர்கள் ஒன்றுகூடி உருவாக்கிய சமூகம் என்றே இந்தச் சமூகம் அடையாளம் காணப் படுகிறது’ என அரவானிகளைப் பிரியாபாபு அடையாளப் படுத்துகிறார். அரவானிகள் தங்களுக்கென்று பழக்கத்தில் பயன்படுத்தும் பொதுமொழி, அம்மொழியின் வேர்கள், அரவானி களுக்குள் உள்ள சமூக உறவுமுறைகள், அதற்கான வரலாற்றுக் காரணங்கள், அவர்களுக்கானச் சடங்குகள் என அரவானிகளின் வாழ்வியலைப் பதிவு செய்யும் ஆவணமாக இந்நூல் அமைகிறது.


6. அரவானிகள் : உடலியல் உளவியல் வாழ்வியல், மகாராசன், சந்தியா பதிப்பகம் 2007
அரவானிகளாலும் பிற சமூக செயல்பாட்டாளர்களாலும் அரவானிகள் குறித்து எழுதப்பட்ட எழுத்துக்களின் தொகுப்பாக இந்நூல்அமைந்துள்ளது. இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு கீழ்மைப்படுத்தப்படும் அரவானிகள், பெண்ணைப் போலவும், ஆணைப் போலவும் இயல்பான மனிதர்கள்தான் எனும் புரிதலை இத்தொகுப்பு உருவாக்குகிறது.  


7. தமிழ் இலக்கியத்தில் அரவானிகள், வெ. முனிஷ், ஜெயம் பதிப்பகம், மதுரை, 2008
தமிழ் இலக்கியத்தில் அரவானிகள் பற்றி எங்கெல்லாம் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று தேடித் தொகுத்த ஆய்வேட்டி னுடைய புத்தக வடிவம். இலக்கணங்களில் அரவானிகள், மரபிலக்கியங்களில் அரவானிகள், காப்பியங்களில் அரவானிகள், நாட்டுப்புறவியலில் அரவானிகள், இக்கால இலக்கியத்தில் அரவானிகள் ஆகிய ஐந்து இயல்களாக இவ்வாய்வு பகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் எதற்கெடுத்தாலும் பாரம்பரியம் பேசும் சமூகத்தில் அரவானிகளின் இருப்பு பற்றிய புரிதலை ஏற்படுத்த இலக்கியத் தரவுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.


8. எதிரொலிக்கும் கரவொலிகள் : அரவானிகளும் மனிதர்களே, அ.மங்கை, பாரதி புத்தகாலயம், செப்டம்பர் 2005
32 பக்கங்களே உள்ள 5 ரூபாய் மதிப்புள்ளது இக்குறுநூல். ஆனால் அரவானி என்ற தன்னிலை, அரவாணியாகும் பாதை... அரவானிகள் குறித்த கட்டுக்கதைகள் வாழ்நிலை, தொன்மங் களும் சடங்குகளும், ஊடகத்தில் அரவானிகள், அரவானிகள் மீதான வன்முறை அரவானிகளின் போராட்டங்கள், அரவானிகளின் அடிப்படைக் கோரிக்கைகள், அரவானிகள் அமைப்புகள் ஆகியவை குறித்து கூர்மையாக விவாதிக்கப்பட்டுள்ளது.


குறும்படம்
அஃறினை, இயக்குநர் - இளங்கோ, தயாரிப்பாளர் - கீதா
‘கண்ணியமாய் வாழப் போராடிக் கொண்டிருக்கும் இரு திருநங்கைகளின் உண்மைக் கதை’ என்கிற அறிமுகமே பார்வை யாளருக்கு சில அவதானங்களை ஏற்படுத்தி விடுகிறது. லிவிங்ஸ்மைல் வித்யா, பல்கலைக்கழக மாணவரான கிளாடி ஆகியோர்தான் அந்த இருவர். டாக்டர் ஷாலினியும் ஒரு கதாபாத்திர மாக இடம்பெற்று கிரேக்க வரலாற்றிலிருந்து திருநங்கைகளின் இருப்பு எவ்வாறு இருந்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார். மேலும் மரபணு மாற்றங்களாலேயே திருநங்கைகள் உருவாக்கப்ப டுகின்றனரே தவிர, அவர்களின் விகார எண்ணங்களால் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். இரு திருநங்கைகளின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அவர்களின் வார்த்தைகளின் மூலமாகவும் சித்திரிப்புகள் மூலமாகவும் இளங்கோவன் நேர்த்தியாகக் காட்சிபடுத்தி யுள்ளார். காட்சிப் படிமங்கள் கதாபாத்திரங்களின் உணர்வுக்கேற்பவும் இயல் பாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment