Monday, November 9, 2015

நாகரீக மனிதர்களும், அநாகரீக திருநங்கைகளும் --- லிவிங்ஸ்மைல் வித்யா

இரண்டு தினங்களுக்கு முன்பு திருநங்கையொருவரை பாலியல் தொழிலில் ஈடுபட்ட காரணத்திற்காக கடமை தவறாத உயரதிகாரியொருவர் நடுரோட்டில் 5 உதவி காவலர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். கையெலும்பு உடைந்த அவர் இது மனித உரிமை மீறல் என்று புலம்பியதில் மேலும் ஆத்திரத்துக்குள்ளாகி தாக்கியதோடு மட்டுமன்றி அருகிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் ஒப்படைத்து அவர் மீது வழிப்பறி செய்ததாக ( 320 ரூபாய்) பொய்வழக்கு பதிவு செய்து சென்றுவிட்டார். மறுநாள் பதறியடித்து அவரை மீட்டு வர போராடிய சில திருநங்கைகள், பெண் வழக்கறிஞ்சர் உட்பட சில தமுஎகச தோழர்களையும் சைதை, கிண்டி, தி.நகர், அடையார் என Assistant commisioner அலுவலகம் முதல் Deputy Commisioner வரை பல அதிகாரிகளிடம் அலைக்கழிக்கப்பட்டனர். ஒருவழியாக இனி யாரும் குறிப்பிட்ட அந்த இடத்தில் பாலியல் தொழிலுக்கு நிற்கக்கூடாது என மிரட்டப்பட்டு 5000/- அபராததொகையுடன் அந்த திருநங்கை விடுவிக்கப்பட்டார்.. ஏப்ரல் 15 திருநங்கைகள் தினம் கொண்டாட்டத்திற்கு முதல் நாள் நடந்த ஒரு சம்பவம் இது.

இது போல பல திருநங்கைகள் இன்றும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மட்டுமன்றி ரயிலில் பிச்சையெடுக்கும் திருநங்கைகளையும் லத்தி சார்ஜ் செய்தும், லாக்கபில் அடைத்தும் வருகின்றனர்... அதிலும் சமீபத்தில் ரயிலில் கடைகேட்கும் திருநங்கைகளை ரயில்வே காவல் அதிகாரிகள் நேரடியாகவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் கூடுதல் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது...

அதாவது நண்பர்களே! நாகரீக சமூகத்தால் சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்படாத போதும், கல்வி-வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட போதும், குடும்பத்தால் தங்கள் வாரிசுகளாகவே பாதுகாக்கப்படாதபோதும், திருநங்கைகளை திரைப்படங்களில் கேவலமாக சித்திரக்கப்பட்டு தொடர்ந்து ரசிகமனங்களில் நீங்கா அவமானத்தை சுமந்த போதும், திருநங்கைகள் மட்டும் நாகரீக சமூகத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையே காவல் துறை கண்ணும் கருத்துமாக செய்து வருகிறது...

மேற்கூறிய பொய் வழக்கிலிருந்து சம்பந்தப்பட்ட திருநங்கையை விடுவிக்க கோரிய போது, ஒரு காவல் அதிகாரி ”உங்களுக்குதான் அரசாங்கம் நெறைய பண்ணுதே அப்றம் ஏன் இன்னும் இப்படி கேவலமா நிக்கிறீங்க” என கேட்டார். இதைச் சொன்ன அந்த நல்ல அதிகாரி அதற்கும் சற்று முன்புதான் 500ரூபாய் லஞ்சம் எங்களிடம் பெற்றுக் கொண்டவர் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை...


அந்த கண்ணியமான காவல்துறை அதிகாரிமட்டுமல்ல, பிச்சை கேட்கும் இடங்களில் பல தர்மப்பிரபுக்களும் கேட்கும் ரெடிமேட் கேள்வியும் இது தான்.. அரசாங்கம் எங்களுக்கு என்ன சலுகைகள் செய்துள்ளது என்பதை இக் கேள்வியைக் கேட்பவர்களோ அல்லது சம்பந்தப்பட்ட அரசாங்கமோ விளக்கினால் உதவியாக இருக்கும்... நலவாரியம் துவங்கிய 3 ஆண்டு பலனாக திருநங்கைகள் அல்லாத பொது மனிதர்கள் சிலருக்கு நிரந்தர அரசாங்க வேலையும், திருநங்கைகளில் 13 பேருக்கு வாரிய உறுப்பினராக நியமித்து 3 மாதங்களுக்கொரு முறை 1500/- சம்பளமும் கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக திருநங்கைகளில் சிலருக்கு அடையாள அட்டையும் கிடைத்து. அந்த அடையாள அட்டையால் ஒரு SIM card கூட வாங்க முடியாத போதும், ரேசன் கார்டு, வாக்களர் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகள் மூலம் பெறக்கூடிய எந்த பயனும் இல்லாத போதும் அரசு எங்களுக்கு செய்ததென்னவோ மாபெரும் கொடைதான்... தினமும் அந்த அடையாள அட்டையைத்தான் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறோம் என்றாவது ஒருநாள் மாயம் நிகழும் என்று...

இப்போது சமீபத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதம் 1,000/- பென்சன் தரப்போகிறார்களாம்.. இந்த வானுயர் விலைவாசி காலத்தில் திருநங்கைகள் யாருக்கும் குடும்பமும், ஆதரவும், சமூக அங்கீகாரம் இல்லாததைப் போலவே பசியும், பட்டினியும், தங்க வீடும், எதுவுமே எந்த செலவுமே இருக்காது என்று அரசாங்கம் ஆணித்தரமாக நம்புவதால் அவர்களுக்கு தாரளமாக 1,000/-யை பென்சனாக தந்து தனது அன்புக்கரத்தால் அணைக்கிறது. இந்த 1,000/- ரூபாய் அன்பும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்...

ஏனெனில் 40வயதிற்குட்பட்ட திருநங்கைகளை அவர்கள் பிச்சை மற்றும் பாலியல் தொழில் செய்யும் இடத்தில் காவல்துறையினரோ, இன்ன பிற கலாச்சர காவலர்களோ, வக்கிர பொறுக்கிகளோ உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தாக்குவதேயில்லை, பொய் வழக்குகளில் அலைக்கழிப்பதுமில்லை என்று ஆணித்தரமாக அரசு நம்புகிறது...


ஆகவே, இந்தியா என்னும் புனித துணைக்கண்டத்தில் வாழும் இந்திய மகான்களே நீங்கள் மட்டும் இந்தியக் குடிமகன்களுக்குரிய அடிப்படை உரிமைகளான நல்ல குடும்பம், நல்ல கல்வி, நல்ல வேலைவாய்ப்பிற்கான சகல வாய்ப்புகளோடும் கூடுதலாக, லட்சங்களில் லஞ்சமும், கோடிகளில் ஊழலுமாக, அதுவும் போதாக்குறைக்கு அதிகார துஷ்பிரயோகம், கற்பழிப்பு, கொள்ளை, மத துவேஷம், சாதித்திமிர் என நவ நாகரீகமாக வாழுங்கள். உங்களின் காமாலைக் கண்களால் மனிதர்களாகவே இனம்காண முடியாத திருநங்கைகளான எங்களை, பிச்சையெடுக்கும் எங்களை, பாலியல் தேவைக்காக மனைவி, காதலிகள் இருந்தும் இல்லாமலும், அலையும் காமகோடிகளிடம் பொருளாதாரத்திற்காக பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகளான எங்களை என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்து நீங்கள் வாங்கப்போவதில்லை என்று தெரிந்தே ஊதுபத்தி, சோப்பு டப்பா விற்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா... இட்லிக்கடை, பூக்கடை வைத்து 50க்கும், 100க்கும் அல்லும் பகலும் உழைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா..

குடும்பம், கல்வி, வேலை, சம்பளம், பதவிஉயர்வு, பென்சன், அதிகாரம், எல்லாம் இருந்தும் தீராத பணத்தேவைக்காக சமூககுற்றங்கள் அதிகரிப்பதைப் போலவே... இவை எதுவும் இல்லாத எங்களுக்கும் பொருளாதரம் கூடுதலாகவே தேவைப்படுகிறது.. ஏனெனில் நீங்கள் மறுத்தாலும் நாங்களும் மனிதர்களே.


சகமனிதர்களான திருநங்கைகளுக்கும், திருநம்பிகளுக்கும் இந்திய அடிப்படை உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடும் கொடுத்து அதிகாரப்பூர்வ மனிதர்களாக நாங்கள் வாழும் நாள் வரும் வரை உங்கள் நாகரீக உலகில் தொந்தரவாகவே நாங்கள் இருப்போதும்.. இது உங்களால் முடிந்த புறக்கணிப்பிற்கு எங்களால் முடிந்த சிறு தொந்தரவே...

http://www.livingsmile.blogspot.in/2012/04/blog-post_17.html

No comments:

Post a Comment