Monday, November 9, 2015

‘‘அவமானப்படுத்தும் தமிழ் சினிமா பொறுக்கிகள்!’’ பொங்கியெழும் திருநங்கை வித்யா...

‘‘அவமானப்படுத்தும் தமிழ் சினிமா பொறுக்கிகள்!’’

‘எதை இழக்கிறோம் என்ற மயக்கத்தில்,
அனஸ்தீஸ்யா இல்லாமலேயே
அறுத்துக் கதறும் நொடியிலும்...
செருப்புக்கு அடியில் தன்மானத்தை
மலமென்றே மிதித்தபடி,
கைநீட்டி கேவலப்பட்டு நிற்கும் நாட்களிலும்...
வன்மத்துடன் நுழையும் குறியால் மூச்சுமுட்ட,
நுரையீரல் திணறி நிற்கும் நாட்களிலும்...
எதற்கென்றே புரியாமல் எங்களை நோக்கி உமிழப்படும்
வீச்சமடிக்கும் எச்சில்களைக் கேட்கிறேன்...
மரணம் மட்டுமா மரணம்..?’’
&அரவாணிகளின் வாழ்க்கையை இப்படி கவிதைக்குள் அடைக்க முயன்றிருப்பவரும் ஒரு அரவாணிதான். மதுரையில் வசிக்கும் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா என்பவர்தான் அந்தக் கவிஞர். ‘வாழ்க்கையில்தான் புன்னகை இல்லை... பெயரிலாவது இருக்கட்டுமே’ என்று எண்ணியதன் விளைவுதான் பெயருக்கு முன்னால் ‘லிவிங் ஸ்மைல்!’
இணைய வலைதளத்தில் தனக்கென ‘பிளாக்’ எனப்படும் பிரத்யேக வலைப்பக்கத்தை livingsmile.blogspot.com வைத்திருக்கும் வித்யா& தீவிர இலக்கிய ரசனை, சினிமா ரசனை என வித்தியாசமான முகம் காட்டுகிறார். இப்போது இவரது கோபம் கமல்ஹாசன் மீதும், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் டைரக்டர் கௌதம் மீதும்தான். அந்தப் படம் பற்றி தன் பிளாக்&கில் மிகக் கடுமையான விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கும் வித்யா, ‘திருநங்கைகள்’ (அரவாணிகளை இப்படிதான் சொல்லவேண்டும் என்கிறார் வித்யா) ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் மிகவும் கேவலமாக சித்திரிக்கப் பட்டிருப்பதை எதிர்த்து வழக்குப் போடவும் தயாராகிவிட்டார். இந்த விவகாரம் வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வித்யாவைச் சந்தித்தோம். மனதின் வலி வார்த்தை களில் தெறிக்கப் பேச ஆரம்பித்த வித்யா, ‘‘எனக்கு விவரம் தெரிந்து சினிமா பார்க்கத் தொடங்கிய நாளிலிருந்து திருநங்கைகளை அவமானப்படுத்துவதை தங்களது தார்மீக உரிமையாகவே தமிழ் சினிமாவினர் செய்து வருகின்றனர். சிலர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இயக்குநர் மணிரத்னம் ‘பம்பாய்’ படத்திலும், ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தில் இயக்குநர் மிஸ்கினும் எங்களைக் கண்ணியமாக சித்திரித்திருந்தனர். அதிலும் மிஸ்கின் மிக நன்றாக திருநங்கைகளைத் தன் படத்தில் காட்டியிருந்தார். ஆனால், ‘திருடா திருடி’, ‘கில்லி’ உள்ளிட்ட பெரும்பாலான திரைப்படங்கள் எங்களை மலினமாகத்தான் காட்டியிருக்கின்றன. சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘வேட்டையாடு விளையாடு’ சினிமா இதற்கு மோசமான சாட்சி.
அந்தப் படத்தின் காட்சிப்படி திருநங்கை ஒருவர், தனது காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக வாரந்தவறாமல் குறிப்பிட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவார். அவருக்கு உதவுவது அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரின் கடமைகளில் ஒன்று. அதன்படி அந்தவாரம் வருகை தரும் திருநங்கைக்கு லட்டாக அமைகின்றனர், லாக்&அப்பில் அடைக்கப்பட்டிருக்கும் இரண்டு கல்லூரி மாணவர்கள். திருநங்கையைப் பார்த்து மாணவர்கள் இருவரும் அலற, ‘அய்... இந்தப் பக்கம் செவப்பு... அந்த பக்கம் கறுப்பு...’ என்று அவர்களைப் பார்த்து இச்சையோடு சொல்லி, வன்புணர்ச்சிக்கு அவர்களை உள்ளாக்கிக் காரியம் முடிக்கிறார் திருநங்கை. க்ளோஸ்&அப்பில் கைதிகள் இருவரும் அலறுவதாகக் காட்சி முடிகிறது. வேறொரு காட்சியில் ‘...த்தா... அந்த அலியை அப்பவே கொல்லணும்னு நெனச்சேன்...’ என்பதாக வசனம் வேறு. படத்தின் ஆரம்பத்தில் கமல் அறிமுகமாகும் காட்சியில், வில்லனின் ஆண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக, ‘நீ ஒரு பொட்டை’ என்று வசனம் பேசுவார். இப்படி ஆரம்பம் முதல் முடிவு வரை திருநங்கைகள் அப்படத்தில் மிகக் கேவலமாகக் காட்டப்பட்டிருக்கின்றனர். வரிசையாகத் தனது படங்களில் விதவிதமான கிரிமினல்களைக் காட்டிவரும் இயக்குநர் கௌதம், இப்படத்தில் பாலியல் வெறிபிடித்ததுபோல் திருநங்கையைக் காட்டியுள்ளார்.
இதேபோல், ‘சில்லுன்னு ஒரு காதல்’ சினிமாவில் விபசாரி என நினைத்து, அரவாணிகளிடம் நடிகர் வடிவேலு சென்றுவிடுவதாகவும், அவர்கள் அவரை மிரட்டிப் பணம் பறிப்பதாகவும் காட்சி வருகிறது. அதுமட்டுமல்ல... படம் நெடுக ‘இங்க பூரா இவிய்ங்களாதான் இருக்காய்ங்க...’ என்ற ரீதியில் திருநங்கைகளை ஆணாகவே பாவித்து வசனம் பேசுகிறார் வடிவேலு. குறைந்தபட்சம் ஒரு அலியாகக்கூட பாவிக்கவில்லை.
குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு, வாழ வழியின்றி பிச்சையெடுக்கவும் விபசாரம் செய்யவும் விதிக்கப்பட்டிருக்கிறது எங்கள் வாழ்கை. இதைப்பற்றி எந்த அக்கறையுமின்றி சட்டாம் பிள்ளைத் தனமான பொதுபுத்தியோடு இம்மாதிரியான திமிர்பிடித்த வேலையை நீண்ட காலமாக செய்துவருகின்றனர், தமிழ் சினிமா பொறுக்கிகள். மாதத்துக்கு ஒரு காதலி, வேளைக்கு ஒரு பெண் என்று வாழும் கலை விபசாரர்களான அவர்களைப் பொறுத்தவரை, திருநங்கைகள் சோத்துக்கு சிங்கியடித்து சாகவேண்டும். அதைவிடுத்து பிச்சை எடுத்து வாழ்வதும், விபசாரம் செய்து பிழைப்பதும் அந்தக் கூத்தாடிகளுக்கு கேவலமானதாகவும் அருவருப்பானதாகவும் தெரிகிறது. நாங்கள் ஏன் இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டோம்..? அதற்குக் காரணம் யார் என்பதுபற்றி யாருமே யோசிப்பதும், பேசுவதுமில்லை. உலகம் ஒப்புக்கொண்ட யோக்கியமான வழிகளில் வாழ நாங்கள் முயலும்போதெல்லாம் எச்சில் உமிழ்ந்து, எட்டி உதைக்கும் சமுதாயத்துக்கு எங்களின் வாழ்கை முறையை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. ஆனால், சினிமாவில் மற்றவர்களைப்போல் அல்லாமல் உலக இலக்கியம், சமூக அக்கறை என்று பேசும் கமல் எப்படி இத்தகைய காட்சி அமைப்புக்கு ஒப்புக்கொண்டார்? தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என அறிவிக்கும் மாநில அரசும், சினிமாவில் சிகரெட் பிடித்தால் தவறு என வாதிடும் மத்திய சென்ஸார் போர்டும், சாதாரண விஷயங்களுக்கெல்லாம் கொடிபிடிக்கும் மனித உரிமை அமைப்புகளும் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம்தான். ஒருவேளை, அவர்களெல்லாம் இவர்கள் கண்ணோட்டத்தில் ‘மனிதர்களுக்காக’ மட்டும்தான் போராடுவார்களோ என்னவோ..!
சினிமாவின் மீது தீரா காதல் கொண்டு உலகின் தரமான சினிமாக்களைப் பார்த்தும், அதுபற்றிய புத்தகங்களைப் படித்தும் வருபவள் நான். இப்போது இதுபோன்ற சினிமாக்களால் மனம் நொந்து கிடக்கிறேன். என் கோபத்தை பிளாக்கில் எழுதியதைப் படித்துக் கருத்துச் சொன்ன பலபேர், நான் நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்கள். இந்தப் பேட்டியிலும்கூட கண்ணியமற்ற வார்த்தைகளைக் கையாண்டிருப்பதாகப் பலர் சொல்லக்கூடும். அப்படிச் சொல்லும் ஒவ்வொருவரின் சமூக அக்கறை குறித்தும் நான் சந்தேகப்படுகிறேன். வார்த்தைகளின் நாகரிகம் குறித்துப் பேசும் யாரும், நரகமாகிக் கிடக்கும் எங்கள் வாழ்க்கையைப் பற்றி யோசிப்பதில்லை. தன்னைப் புனிதமாகக் காட்டிக்கொள்ளும் இந்த சமூகம், தனது ஈனச் செயல்களை ஒருபோதும் தவறென்று ஒப்புக் கொள்ளாது. ஆகவேதான் நான் உணர்ச்சியுள்ள ‘பொட்டை’ என்பதை சினிமா பொறுக்கிகளுக்குக் காட்டவாவது ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் மீது வழக்குப் போடப் போகிறேன்’’ என்று பொங்கி முடித்தார் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா.
பாரதி தம்பி
நன்றி ஜூனியர் விகடன்  18.10.2006

No comments:

Post a Comment