Wednesday, November 11, 2015

பிரியமுடன் பிரியா பாபு..! --------- கவிமணி


மண்ணில் மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் உணர்வுகள் இருக்கின்றன. அந்த உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதே மனிதத்தன்மை. ஆனால் தொடர்ந்து குறிப்பிட்ட சிலரின் உணர்வுகளை மட்டும் ஏலனாமகப் பார்த்து அவர்களின் உணர்வுகளோடு அவர்களையும் உதாசிணப்படுத்தி ஒதுக்கி வைக்கிறது இந்த சமூகம். ஆனால் இந்த சமூகத்தில் அவர்களும் ஒரு அங்கம்தான். ஆம் அவர்கள்தான் திருநங்கைகள். ஒரு மனிதன் உடல் அளவில் ஆணாகவும், மனதளவில் பெண்ணாகவும் மாற்றம் அடையும்போது அவர்கள் சந்திக்கும் அவமானங்களைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இப்படியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டு, திருநங்கைகளின் நல்வாழ்விற்காகவுன் உரிமைகளுக்காகவும் போராடி வருகிறார் ப்ரியா பாபு. சமீபத்தில் நடந்த திராவிட கழக விழாவில் அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டுள்ளது. திருநங்கையர் சமூகத்தில் பெரியார் விருது பெற்ற முதல் திருநங்கை இவர்தான்.
 ‘தின இதழு’டன் மனம் திறந்து பேசுகிறார் திருநங்கை பிரியா பாபு.

‘‘நான் பிறந்தது ஈழம். ஆனால் என்னுடைய பூர்வீகம் திருச்சி பக்கத்தில் இருக்கிற முசிறி. எங்க தாத்தா கரும்புத் தோட்டத் தொழிலாளியாக இலங்கைக்குச் சென்றவர். 1976&ல் நான் கை குழந்தையாக இருந்த போது என் பெற்றோர்கள் மீண்டும் திருச்சிக்கு வந்துவிட்டனர். திருச்சியில் செயின்ட் ஜோசப் பள்ளியில் தான் படித்தேன்.
என் அப்பா சார்ட்டட் அக்கவுன்டன்ட், என்னுடைய் அண்ணன்கள் சினிமாவில் டிஸ்ட்ரிபியூட்டராக இருந்தார்கள். நல்ல கவுரவமான குடும்பத்தில் பிறந்து, திருநங்கையாக மாற்றம் அடைந்தபோது எத்தனையோ இன்னல்களைச் சந்தித்தேன்.’’

உங்களுக்குள் இருந்த பெண் தன்மையை எப்போது உணர்ந்தீர்கள்?
‘‘பள்ளியில் படிக்கும்போதே 13 வயதில் என்னுள் இருந்த பெண் தன்மையை உணர்ந்தேன். மற்ற ஆண் குழந்தைகளைப் போன்று இல்லாமல் கண் மை வைக்கிறது. பொட்டு வைத்துக்கிறது, கோலம் போடுறது என எல்லாவற்றையும் செய்ய ஆரம்பிச்சேன். இது என் குடும்பத்தில் இருப்பவங்களுக்கு பெரிய பிரச்னையாகவும் அவமானமாகவும் இருந்தது. அதனால் என்னை அடிக்கிறது, திட்டுறது, சாப்பாடு கொடுக்காம இருக்கிறது. சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போறது. சாமியார் கிட்ட கூட்டிட்டுப் போய் குறி கேட்குறது என என்னைக் கொடுமை படுத்தினாங்க. ஆனால் எனக்கு என்ன பிரச்னை நான் ஏன் இப்படி இருக்கேன்னு யாரும் கேட்கலை. அதை சொல்வதற்கான வாய்ப்பும் கொடுக்கலை. இதனால் குடும்பத்திற்கும் எனக்குமான இடைவெளி அதிகமானது. எங்க அப்பா கூட பேசமா இருந்தேன். ஏன் என் அப்பா இறக்கும்போது கூட என்னை கிட்ட வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. என்னுடைய உணர்வுகளை அவங்க யாருமே புரிஞ்சுக்கலை.’’

நீங்கள் திருநங்கையாக மாறிய காலகட்டத்தில், இந்த சமூகத்தில் எந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்தீர்கள்?
‘‘அப்போது  திருநங்கை என்றாலே கேவலாமகப் பார்ப்பார்கள். இப்போ இருக்கிற சூழ்ல் மாதிரி எந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிற அமைப்புகளும் அப்போது கிடையாது. சினிமாவில் கூட திருநங்கைகளை கேவலமாக சித்தரித்தனர். பொதுவாகவே 13 முதல் 16 வயது வரைக்கும் உள்ள ஆண்களுக்குப் பாலியல் இச்சை அதிகமாக இருக்கும். அந்த மாதிரியான சூழலில் அவர்களின் பாலிய வக்கிரத்துக்கு என்னை மாதிரியான திருநங்கைகள் ஆட்பட்டிருக்கிறார்கள். அதில் நானும் விதிவிலக்கல்ல. பதினெட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து திருநங்கைகளுமே பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டோம்.  மேலும் மற்ற ஆண்களைப் போல நம்மால் இருக்க முடியலையே என்கிற உளவியல் பிரச்னை, என் மீதான கேலி கிண்டல்கள், பாலியல் தொந்தரவுகள் என எத்தனையோ கொடுமைகளை அனுபவித்தேன். இனியும் உயிர் வாழக் கூடாது என இரண்டு மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். ஆனால் மீண்டும் காப்பாற்றப்பட்டேன். அதன் பிறகு தீவிர யோசனைக்குப் பிறகு கரூரில் பல்லப்பட்டி என்ற இடத்தில் இருந்த திருநங்கைகள் கூட போய் சேர்ந்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே திருநங்கைகளுடன் தொடர்பு ஏற்பட்டது.’’

எப்போதில் இருந்து சமூகப் பணியில் ஆர்வம் வந்தது?
‘‘எப்படியோ கஷ்டப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்தேன். அந்த சமயத்தில் என்னுடைய அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து திருநங்கைகளுடன் இணைந்துவிட்டேன். இங்கிருந்து மும்பைக்குச் சென்று அங்கு தொழில் செய்துகொண்டிருந்தேன். 1998&ல் இருந்து தான் சமூகப் பணியில் ஈடுபட ஆரம்பித்தேன். முக்தா பட் என்ற அமைப்பில் இணைந்து நிறைய சமூகப் பணிகளை செய்ய ஆரம்பித்தேன். 1999&ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்காக ‘டாய்’ என்ற அமைப்பை மும்பையிலேயே உருவாக்கினோம். ஆரம்பத்தில் எச்.ஐ.வி தடுப்பு பணியைத் தான் செய்துகொண்டிருந்தேன். அந்த சமையத்தில் பாபு என்றவருடைய தொடர்பு கிடைத்து அவருடன் காதல் திருமணம் நடந்தது.
மும்பையில் இருந்து சமூகப் பணி செய்வதை விட தமிழகத்தில் இருந்து பணி செய்ய வேண்டும் என்பதற்காக 2001&ல் தமிழகத்திற்கு வந்தேன். தமிழகத்தில் திருநங்கைகளுக்கான உரிமைகளைப் பெற்று தருவதற்காகன பணிகளில் ஈடுபட்டேன். தென் இந்திய அரவாணிகள் உரிமை மறுவாழ்வு மையத்துடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தேன்.
அப்போதுதான் திருநங்கைகளுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தோம். இந்தியாவிலேயே திருநங்கைகளுக்காக தொடுக்கப்பட்ட முதல் வழக்கு அதுதான். அதன்பிறகுதான் திருநங்கைகளுக்கு ஓட்டுரிமை கொடுக்கலாம் என்று தீர்ப்பு வந்தது. சட்டத்தால் மட்டுமே திருநங்கைகளுக்கான விடுதலையைப் பெற்றுவிட முடியாது. மக்களிடம் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் பிற்குதான் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் அவருடைய மனைவி மீன சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர் அரசுவின் மனைவி மங்கை அரசுடன் இணைந்து ‘கண்ணாடி’ கலைக் குழுவைத் தொடங்கினோம்.
அந்தக் கலைக் குழுவின் மூலம் மேடை நாடகங்கள் போட்டு மக்களிடையே விழுப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். இதுவரைக்கும் தமிழ்நாட்டு முழுக்க 120 இடங்களில் நாடங்களை நடத்தியிருக்கிறோம். மாணவர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகளுக்கு இடையே இந்த நாடகங்களைக் கொண்டுபோய் சேர்தோம். அதன்பிறகு தான் திருநங்கைகளுகுள்ளேயே விழிப்புணர்வு ஏற்பட்டது. அவர்களுக்கான பிரச்னைகளை அவர்களே பேசும் அளவுக்கு மாற்றம் வந்தது.’’

இத்தனை பிரச்னைகளுக்கு இடையில் எப்படி எழுத்துத் துறைக்குள் வந்தீர்கள்?
‘‘எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய ‘வாடாமல்லி’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகுதான். 2006&ம் ஆண்டு ‘தேசிய நாட்டுப்புற உதவி மையத்தின்’ மூலம் ‘தமிழகத்தில் திருநங்கையர்கள் வழக்காறுகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆவணப் படத்தை உருவாக்கினேன். திருநங்கையர்கள் சமூகத்தில் உள்ள சடங்குகள் பற்றி தெரிந்துகொள்ள நேரடியாக கலத்தில் இறங்கி ஆய்வு செய்தேன். அதுகுறித்து நிறைய படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகுதான் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. நரிக்குரவர் இன வரைவியல் நூலைப் படித்து அதன் அடிப்படையில் ‘திருநங்கையர் சமூக வரைவியல்’ என்ற நூலை எழுதினேன். அதன் பிறகு 2008ம் ஆண்டு ‘மூன்றாம் பாலின் முகம்’ என்ற நாவலை எழுதினேன். 2009ம் ஆண்டில் சின்ன சின்ன நூல்கள் எழுத ஆரம்பித்தேன். 20 வருடங்களாக தமிழகத்தில் திருநங்கையர்களின் வாழ்க்கை குறித்து 2012ம் ஆண்டு ‘தமிழகத்தில் திருநங்கையர்களின் சமூக வரலாறு’ என்ற நூலை எழுதினேன். இது மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன் பிறகு திருநங்கையர்கள் குறித்த  விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுக்கிறேன். இதையெல்லாம் கடந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மாநிலக் குழு உறுப்பினராகவும் சிறப்பு அழைப்பாளராகவும் இருக்கிறேன். இன்னும் பல பணிகள் செய்துகொண்டிருக்கிறேன்.’’

இவ்வளவு மாற்றங்களுக்குப் பிறகு தற்போது சமூகத்தில் திருநங்கையர்களின் நிலைமை எப்படி இருக்கிறது?
‘‘நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. நான் சமூகப் பணி செய்ய வேண்டும் என்று கலத்தில் இறங்கியபோது இந்தியா முழுக்கவே ஐந்து பேர்தான் பணியாற்றினோம். அப்போது திருநங்கையர்களுக்கான அமைப்புகள், அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எவருமே இல்லை. ஆனால் தற்போது இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பல்வேறு அமைப்புகளில் சேர்ந்து சமூகப் பணி செய்து வருகின்றனர். அன்றைக்கும் கூட திருநங்கைகள் மட்டுமே குரல் கொடுத்திருந்தார்கள். ஆனால் இன்று முற்போக்கு, எழுத்தாளர்கள் அமைப்புகள், லயன்ஸ் கிளப், ரோடரி கிளப் மற்றும் மற்ற பொது அமைப்புகள் பெண்கள் அமைப்புகள் என அனைவரும் குரல் கொடுக்க ஆர்ம்பித்திருக்கிறார்கள். திருநங்கையர்கள் குறித்து நிறைய நூல்கள் எழுதயிருக்கிறார்கள். மாணவர்கள் திருநங்கைகள் குறித்து ஆய்வுகள் செய்கிறார்கள். அரவாணிகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்காக சட்டங்களைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு திருநங்கைகள் இல்லாத துறைகளே கிடையாது. உதாரணத்திற்கு நடனத்தில் நர்த்தகி நடராஜ், முத்து மீனாட்சி என்பவர் ஆசிரியராக இருக்காங்க, செல்வி என்ற திருநங்கை பிசியோதெரபிஸ்டாக இருக்காங்க, பாரதி என்ற திருநங்கை இறை பணியாளராக இருக்காங்க. இதுமட்டும் இல்லாமல் சமையல் பணி, ஆட்டோ ஓடுவது என நிறைய துறைகளில் திருநங்கைகள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் திருநங்கைகள் இருக்கிறார்கள். இப்படி பல பதவிகளிலும் பொறுப்புகளிலும் திருநங்கைகள் இருக்கிறார்கள். இதுவே பெரிய சமூக மாற்றமாக நான் கருதுகிறேன்.’’

இப்படி பல மாற்றங்கள் இருந்தாலும், சில திருநங்கைகள் இப்போதும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்களே?
‘‘ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. இந்த பொது சமூகத்தில் திருநங்கைகள் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் மேலே வருகிறார்கள். இப்போதைய சிறு மாற்றம் இப்போது வருகிற திருநங்கைகள் படித்துவிட்டு வருகிறார்கள். அவர்களின் மூலம் தான் சமூகத்தில் இருக்கிற மற்ற திருநங்கைகளிடமும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். விரைவில் மேலும் மாற்றங்களைக் கொண்டுவருவோம். அதையும் கடந்து பல திருநங்கைகள் பாலியல் தொழிலிலும், ‘கடை கேட்பதிலும்’ இருக்கிறார்கள். நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். எத்தனையோ பேர் குடும்ப பின்புலம் பண பலம் இருந்தும் லஞ்சம் வாங்குகிறார்கள். ஊழல் செய்கிறார்கள். இன்னும் பலர் கொலை செய்கிறார்கள் கொள்ளை அடிக்கிறார்கள். ஆனால் திருநங்கைகள் அதையெல்லாம் செய்யாமல்  அடுத்த வேலை உணவுக்கும் அடுத்த வேளை பிழைப்புக்கும் உடம்பை விற்றும் கடை கேட்டும் தானே பிழைக்கிறார்கள். ஆனால் அதை சரி என்று நான் சொல்ல விரும்பவில்லை. இனிமேல் தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரும்.’’

தற்போதைய சமூகத்தில் உங்களுடைய பிரச்னைகளாக எதை முன் வைக்கிறீர்கள்?
‘‘திருநங்கைகளுடைய பாலியல் அடையாளம் சட்ட ரீதியாக கிடையாது. திருநங்களைகள் மாற்று பாலினம் தான் அல்லது பெண் பாலினம் தான் என்பதற்கு எந்த சட்ட வரைவும் கிடையாது. இந்தியா முழுக்க திருநங்கைகளுடைய கணக்கெடுப்பு இதுவரைக்கும் சரியாக எடுக்கப்படவில்லை. இதனால் எங்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவற்றில் சிக்கலாக இருக்கிறது. மேலும் திருநங்கைகளுடைய அறுவை சிகிச்சை இந்தியா முழுவது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆகையால் திருநங்கையர்களுடைய பெயர் மாற்றம் முதல் பாலின மாற்றம் வரை எதுவுமே செய்ய முடியாமல் போகிறது. திருநங்கையர்களுக்கான அரசியல் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து கல்விப் பாடத் திட்டத்திலும் திருநங்கைகள் குறித்து ஒரு பாடம் வைக்க வேண்டும். அப்போது தான் படித்தவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கையர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.’’

இன்றைய சுழலில் உங்கள் குடும்பத்தில் உங்களை ஏற்றுக்கொண்டார்களா?
‘‘அனைவரும் ஏற்றுகொண்டார்கள் என்று சொல்ல முடியாது. அம்மா இப்போது என்னுடன் தான் இருக்கிறார். அவர் மட்டும் என்னை புரிந்துகொண்டு ஏற்றுகொண்டார். இப்போது சில விழிப்புணர்வு மேடைகளில் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார். மற்ற உறவினர்களைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. அவர்களைக் கடந்து ஆயிரம் உறவுகள் இந்த பொது வாழ்வில் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள்.’’

நீங்கள் இந்த சமூகத்தில் சாதிக்க நினைக்கும் விஷயம்?
‘‘என்னுடைய மகளாக என்னுடனே இருக்கும் தேவிக்கு, சேலத்தில் 3 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ஒரு முதியோர் இளைப்பாருதல் மையமும், குழந்தைகளுக்கான கல்வி மையமும் உருவாக்க வேண்டும். அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. அந்த மையம் உருவாவதற்கு அவளுக்கு உதவியாக இருக்க வேண்டும். மேலும் திருநங்கைகள் குறித்த நூல்கள், ஆவணப் படங்கள் போன்றவற்றை சேகரித்து. திருநங்கைகள் வரலாற்றை வருங்காலம் தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு ஆவணக் காப்பகத்தை உருவாக்க வேண்டும்.’’

(தின இதழ் நாளிதழுக்காக நான் எடுத்த பேட்டி )
 
http://vimalakavimani.blogspot.in/2014/03/blog-post_17.html

No comments:

Post a Comment