- திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சட்டப் பூர்வமாக அங்கீகரித்து, அவர்களுக்கு அனைத்து உரிமை களையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். பாலினம் என்ற வகைப்பாட்டிலும், வரையறுப்பிலும் ஆண் அல்லது பெண் என்று மட்டுமே அதிகாரப் பூர்வமாக இருந்த நிலையில் இனி மூன்றாவது பாலினமாக திருநங்கையரும் இணைக்கப்படுவது அவர்களுக்கு வழங்கப்படும் சட்டவழி தகுநிலை ஆகும்.
![transgender](http://keetru.com/images/stories/literature/transgender_500.jpg)
தேசிய
சட்டப் பணிகள் ஆணையம் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீதான தீர்ப்பில் உச்ச
நீதி மன்ற நீதிபதிகள் கே. எஸ். ராதா கிருஷ்ணன் மற்றும் ஏ. கே. சிக்ரி
தங்களது தீர்ப்பில் கூறியிருக்கும் அனைத்துக் கருத்துக்களும்
முத்தாய்ப்பானவை.
திருநங்கையர்
உரிமைகள் தொடர்பாக அர்ஜென்டினா நாடு அண்மையில் இயற்றிய பாலின அடையாளச்
சட்டம் உலகளாவிய அளவில் பாலின அடையாள உரிமை குறித்த முற்போக்கான
சட்டமாகும். தனி மனிதர் விரும்பும் பாலின அடையாளத்தை முழுமையாக
அங்கீகரிக்கும் உரிமையை சட்டப் பூர்வ மாக்குகிறது, அச்சட்டம்.
தனிமனிதர்
ஒவ்வொருக்குமான பாலின அடையாளம் அவரவருக்கான அடிப்படை உரிமை. இதை இன்றைய
சூழலில் இந்திய உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பில் உத்தரவாக
வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் திருநங்கைகளின் வாழ்வும், யதார்த்த
சூழலும் வேறுமாதிரியாக உள்ளது.
திருநங்கைகள்
அனுபவிக்கும் அவமானங்களும் சவால்களும் திருநங்கையரின் அவலமான
வாழ்க்கையும், ஒவ்வொரு நாளும் அவர்கள் சுமக்கும் வலியும், அனுபவிக்கின்ற
அவமானங்களும், பாகுபாடுகளும் எதிர் கொள்ளும் சவால்களும் ஒன்றல்ல, இரண்டல்ல!
அவர்கள் மீது அரசு இயந்திரங்களும், இந்தச் சமூகமும் ஈவு இரக்கமின்றி
தொடுக்கின்ற உரிமை மீறல்கள் கணக்கிலடங்கா! கொடுமையான சமூகப்
புறக்கணிப்புகளும், ஒதுக்குதல்களும் திருநங்கையர் வாழ்க்கையில் பிரிக்க
முடியாத அங்கமாகவே இருந்து வருகின்றன. திருநங்கையராக இருப்பதாலேயே, அவர்களை
மனிதர்களாக வாழ்வதற்கு தகுதியற்றவர்களாக ஆக்கிவிடுகிறது இந்தச் சமூகம்!
அவர்களது இருத்தலும், நடமாட்டமும் நம்மில் பெரும் பாலானோருக்கு கேலிக்குரிய
பொருட்களாகவே ஆகிவிட்டன என்பதுதான் உண்மை.
சட்டரீதியான
உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வதற்குரிய வழி வகைகள் அனைத்தும்
அடைக்கப்பட்டு, சமூகத்தின் விளிம்பு நிலையில் விழி பிதுங்கி நிற்கும் ஒரு
பாலினத்திற்கு கல்வியும், வேலைவாய்ப்புகளும், மருத்துவ வசதியும் எப்படி
கிடைக்கும்? பேருந்து மற்றும் தொடர்வண்டி நிலையங்களிலும், பிற பொது
இடங்களிலும் திருநங்கைகள் தீண்டத்தகா தோராகத் தானே பார்க்கப்படுகின்றனர்?
பெரும்பாலான திருநங்கைகள் வேறு வழியின்றி பாலியல் தொழிலுக்கும், பிச்சை
எடுத்தலுக்குமே தள்ளப்படுகின்றனர்.
பாலியல் வன்கொடுமைகள்
பாலியல்
வன்கொடுமைகளால் பெண்களைப் போலவே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவோர்
திருநங்கையர். அவர்கள் மீது தொடுக்கப்படும் கொடூரமான உரிமை மீறல்கள்,
குறிப்பாக பாலியல் வன்முறைகள் குறித்து மக்கள் சிவில் உரிமைகள் கழகம் சென்ற
ஆண்டு அறிக்கை ஒன்றை வெளிக் கொண்டு வந்தது. டெல்லி உயர்நீதி மன்றத்தில்
நாஸ் பவுண்டேசன் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வறிக்கையில் இடம்பெற்ற
வன்முறைகள் மிகவும் கொடூரமானவை. அதன் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பும், அதனைத் தொடர்ந்து நீதியரசர் வர்மா குழு வழங்கிய
பரிந்துரைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பாலியல்
வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் பாதிக்கப் பட்டோர் பட்டியலில் பெண்களோடு
திருநங்கைகளையும் இணைக்க வேண்டும் என்ற ரீதியில் நீதியரசர் வர்மா குழு சில
பயனுள்ள பரிந்துரைகளை முன்வைத்தது. ஆனால் சென்ற ஆண்டு கொண்டு வரப்பட்ட
குற்றவியல் சட்டத்திருத்தம் இந்த ஆக்கப்பூர் வமான பரிந்துரைகளைக் கணக்கில்
கொள்ளவே இல்லை. பாலியல் வன்முறை என்பதை வரட்டுத்தனமான பிற்போக்கான
பார்வையில் மட்டுமே பார்க்கின்ற ஆணாதிக்க, நிலமானியச் சிந்தனைதான்
குற்றவியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தோரிடம் வெளிப் பட்டது.
வேலைவாய்ப்பிற்கான உத்தர வாதமின்மை
வேலை
வாய்ப்புக்கான எந்த உத்திரவாதமும் இன்றி, தங்களை ஒரு பாலின
அடையாளத்திற்குள் கொண்டு வர இயலாத நிலை அண்மையில் வெளிவந்துள்ள உச்ச
நீதிமன்றத் தீர்ப்பால் இனி மாற வாய்ப்புண்டு. சாந்தி சௌந்தர ராஜன் என்ற
திருநங்கை தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம்
வாங்கி பெருமை தேடித் தந்தவர். பாலின அடையாளம் காரணமாக தான் பெற்ற வெள்ளிப்
பதக்கத்தை இழந்தது பலருக்கும் நினைவு இருக்கும்.
அதுபோல
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு திருநங்கை மாநில
அளவிலான போட்டிகளில் பல் வேறு பதக்கங்களைப் பெற்றவர். காவல்துறையில் சேர
ஆசைப்பட்டு அதற்கான தேர்வில் வெற்றியும் பெற்று விட்டார். பாலின அடையாளம்
காரணமாக அவர் வேலையில் சேர இயலாமல் போய் விட்டது. தகுதி, திறமை இருந்தும்
இது போன்ற திருநங்கைகள் தங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன் படுத்த
முடியாமைக்குக் காரணம் திருநங்கையினருக்கு முறையான சட்டபூர்வ அந்தஸ்து
வழங்கப்படாமை.
பாலின அடையாளம் ஓர் அடிப்படை உரிமை
பாலின
அடையாளம் என்பது வாழ்க்கையின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகும் என்று
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டு, வாகன ஓட்டுனர் உரிமம், குடும்ப
உறுப்பினர் அட்டை, வாக்காளர்அட்டை போன்ற அனைத்து அடையாளச் சான்றிதழ்களிலும்
இனி மூன்றாம் பாலினம் இடம் பெறும். வாக்களிக்கும் உரிமை, சொத்துக்களைப்
பெறும் உரிமை, சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமை போன்ற அனைத்து
அடிப்படை உரிமைகளும் இந்த சட்டப்பூர்வ அடையாளம் மூலம் இனி
திருநங்கைகளுக்குக் கிடைக்கப்பெறும்.
திருநங்கையினர்
வாழ்க்கைச் சூழல் பற்றி ஆராய்ந்து, அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தத்
தேவையான பரிந்துரைகளை முன்வைக்கு மாறு மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை
நியமித்துள்ளதாகவும், மூன்று மாங்களுக்குள் இந்த ஆய்வறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டு, அக் குழு முன்வைக்கும் பரிந்துரைகளை ஆறு
மாதங்களுக்குள் நடைமுறைப் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படப் போவதாக
மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
தேர்தலில்
ஆண் பெண் என்ற வகைப்பாட்டில் மட்டும் அல்லாது திருநங்கையர் மூன்றாம்
பாலினமாக “மற்றவர்கள்’’ என்று குறிப்பிட்டு தங்களது தனித்த அடையாளத்தை
நிலைநாட்டி தேர்தலில் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம்
2010 - ஆம் ஆண்டு வெளியிட்டது நினை விருக்கலாம்.
தமிழகத்தில் திருநங்கைகள்
தமிழகத்தில்
ஏறக்குறைய 3 இலட்சம் திருநங்கையர் இருப்பதாக புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன. திருநங்கையருக்கான உரிமைகள் என்ற அளவில் மற்ற
மாநிலங்களைவிட தமிழகம் ஒரு படி சிறப்பாகச் செயல்படுவதை பெருமையோடு இங்கே
குறிப்பிடலாம். குடும்ப அட்டைகளில் பாலினம் என்ற வரையறையில் மூன்றாம்
பாலினத்தையும் இணைத்திட 2008 ஆம் ஆண்டிலே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது
வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த முடிவு. திருநங்கையரின் குடிமையுரிமை
சார்ந்த தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்றே சொல்லலாம்.
திருநங்கைகளுக்காகவே
தனிவாரியம் ஒன்று தமிழக சமூக நலத்துறையால் அப்போதே உருவாக்கப்பட்டதும்,
சட்டரீதியாக பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள தமிழக அரசு
அங்கீகாரம் அளித்ததும் குறிப்பிட்டு சொல்லத்தக்க நிகழ்வுகள்.
ஆனால்
இவை மட்டுமே போதாது. அவர்களது வாழ்வு மேம்பட இன்னும் பல சிறப்பு
நலத்திட்டங்களை அரசு உருவாக்கிட வேண்டும். அவர்கள் சொந்தக்காலில்
நிற்கவும், சுயமரியாதையோடு வாழவும், வருமானத்தை உருவாக்கிக் கொள்ளவும்
அவர்களுக்கு முறையான வாழ்வாதாரப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
மிகக்குறைந்த வட்டியில் தொழிற் கடன்கள் வழங்கப்பட வேண்டும். அரசு மற்றும்
தனியார் துறைகளில் திருநங்கைகள் வேலைகளில் சேர்ந்திட அவர்களுக்கான இட
ஒதுக்கீட்டை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும்.
ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி
திருநங்கைகளை
மைய நீரோட்டத்தில் இணைக்கவும், அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புகளில்
கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கவும், சமூகத்தில் திருநங்கைகள் பற்றிய
பார்வையும் கண்ணோட்டமும் மாறவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசுகள்
தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சிவில் சமூகக் குழுக்கள் குறிப்பாக மனித
உரிமைத் தளத்தில் பணியாற்றும் அமைப்புகளும் கல்வி நிறுவனங்களும்
திருநங்கையினருக்கான உரிமைகள் குறித்த கண்ணோட்டத்தை மக்களிடையே மாற்றிட
தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
முறையான
பாலியல் கல்வியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்குவதன் மூலம் இளைய
தலைமுறையினரிடம் திரு நங்கைகள் பற்றிய சரியான பார்வையை கொண்டு செல்ல
முடியும். திருநங்கைகளைக் கேலிப் பொருளாகவும், பரிகாசத்திற்குரிய
நபர்களாகவும் ஊடகங்கள் சித்தரிப்பதை தடை செய்யவேண்டும்.
ஆண்களுக்கும்
பெண்களுக்கும் இருப்பதைப்போல மனிதர்கள் என்ற முழுமையான சட்டப்பூர்வ
அந்தஸ்தும், சட்டரீதியான அனைத்துப் பாதுகாப்பும் அவர்களுக்கும் வழங்கப்பட
வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பது திருநங்கையரின்
வாழ்க்கையில் ஒளியேற்றும்!
http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/thamizhar-kannottam-ma16-2014/27384-2014-11-21-06-09-17
No comments:
Post a Comment