Tuesday, November 10, 2015

தமிழ் சினிமாவின் கலாப்பார்வையில் திருநங்கைகளின் நிர்வாணம் லிவிங் ஸ்மைல் வித்யா

Puthiya Kaatru


ஜூன்: 2007


இந்தியாவில் அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கான முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது வெகுஜன சினிமா. அத்தகைய பெருமை வாய்ந்த சினிமா மக்கள் மீதும், மக்களின் கலாச்சார கருத்தாக்கத்தின் மீதும் செலுத்தும் ஆதிக்கம் நாம் அனைவரும் நன்கறிந்ததே. இன்று பெரும்பான்மை மக்களுக்கு அவர்களது வாழ்க்கையில் நேரடி அனுபவமற்ற அனைத்தும் வெள்ளித்திரையின் மூலமாகவே அதிகளவில் சென்றடைகிறது.

உதாரணமாக தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் நீதிமன்றத்தின்படி கூட ஏறியிறாதவர்களுக்கு, நீதி மன்றம் குறித்த பிம்பத்தை தருவது சினிமாவாகவே உள்ளது. இது அரசியல், காவல் துறை, பிச்சை எடுப்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் போன்ற விளிம்புகள் குறித்த அறிமுகமும், அறிவும் சினிமா மூலமாகவே ஆனால், தவறான கண்ணோட்டத்தில் சென்றடைகிறது. இதில் திருநங்கைகள் படும் கேவலம் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த இந்திய சினிமா வரலாற்றில் மிக அரிதாகவே திருநங்கைகள் திரைப்படங்களில் கண்ணியமான முறையில் காண்பிக்கப்படுகிறார்கள். (தமானா, ட்ராபிக் சிக்னல், பம்பாய்) குறிப்பாக தமிழில் ஒரு கைவிரல்கள் போதுமான அளவிலேயே படங்களைச் சுட்டிக்காட்ட முடியும். அந்த வகையில் பம்பாய் படத்தின் இயக்குநர் மணிரத்னம் பாராட்டப்பட வேண்டியவராகிறார். இப்படத்தில் இந்துத்துவம், மீதான ஒரு நிலைச் சார்பு குறித்தும், அவரது அடிப்படை முதலாளித்துவ, இந்து தேசிய சிந்தனையோடும் வன்மையான எதிர்ப்பு கொண்டவள் நான்.

இருந்தாலும், இப்படத்தில் திருநங்கை ஒருவரை கண்ணியமாக காட்சிப்படுத்தியதற்காக அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. கதைப்படி, கலவரச் சூழலில் பிரிந்து விடும் இரட்டைச் சகோதரர்களில் ஒருவன் நிர்க்கதியாக திகைத்து நிற்கும் வேளையில் எதிர்பாராத திருப்பமாக, அச்சிறுவனைக் காப்பாற்றுவது தெருவோரத்தில் வசிக்கும் ஒரு திருநங்கையே. தொடர்ந்து வரும் காட்சியிலும் உயிரின் மதிப்பு குறித்து கலவரக்காரர்களிடம் வீராவேசத்துடன் வசனமும் பேசுவார்.

நிச்சயமாக மனித உயிரின் மதிப்பு குறித்தும், அதனால் ஏற்படும் உறவுகளின் இழப்பு குறித்தும் திருநங்கை யொருவர் விளக்குவது மற்ற யாரையும் விட பொருத்தமாகவே இருக்க முடியும். தனக்குள்ள பாலின அடையாளச் சிக்கல் ஒன்றின் காரணமாக மட்டுமே குடும்பம், கல்வி, வேலைவாய்ப்பு, அங்கீகாரம் உள்ளிட்ட அனைத்துத்தளங்களிலும் விளக்கப்பட்ட திருநங்கைக்குத் தான் உயிர், உறவின் மதிப்பும் வலியும் தெயும். அதனை தக்க இடத்தில் பயன்படுத்திய பம்பாய் படம் போல் வேறு படம் இன்னும் தமிழ் சினிமாவில் வந்திருக்கவில்லை. திரையில் கண்ணியமாக, திருநங்கைகள் என்பதற்கு இப்படம் நல்ல துவக்கம் என்று எதிர்பார்க்கும் வேளையில், இந்த 2007லும் ஒரு நல்ல படம் வராமலிருப்பதும், மாறாக நவீனத்திற்கு நவீன கேலிகளாகத் தான் மாறி வருகின்றன.

சமீபத்தில் வந்த ‘‘சித்திரம் பேசுதடி’’யில் ஒரு காட்சியில் நற்குணமுள்ள திருநங்கையாக ஒருவர் காட்டப்பட்டிருந்தார். கதாநாயகனைத் தேடி நாயகி வருகிறார். அங்கே துணி இஸ்திரி பண்ணுபவரிடம் சிறிய சண்டையிட்டபடி பிச்சை கேட்டு நிற்கும் திருநங்கையிடம், தன்னிடம் சற்றுமுன் வந்த நபர் எந்த வழியாக சென்றார்? என்று கேட்கிறார் நாயகி. கதைப்படி நாயகன் சென்ற இடம் ஒரு விபச்சார விடுதி என்பதாலும், அங்கே ஒரு குடும்பப் பெண் செல்வது சரியாகாது என்பதாலும் தனக்கு (தெரிந்தும்) தெரியாதென்று நற்சிந்தையோடு கூறிவிடுகிறார். இது திருநங்கைகள் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படுத்தும் காட்சியாக உள்ளது. இதே படத்தில் வெளிவந்து பிரபலமான ‘‘வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்’’ என்ற பாடலின் ஆரம்ப காட்சியிலும் திருநங்கைகள் ஆபாசமின்றி காட்டப்பட்டிருந்தனர்.

இதுபோக, மருத்துவத் துறையில் நடக்கும் திரைமறைவு பொருளாதார - அரசியலை முதன்முறையாக பேசிய ‘‘ஈ’’ இயக்குநர் கூட பாடலில் ஓரமாக ஆடிவிட்டு போகும்படி தான் திருநங்கைகளை காட்டியுள்ளார். அருவெறுப்பாக காட்டிடவில்லை என்றாலும், அவரால் முடிந்தது அவ்வளவு தான்.

சமீபத்தில் அமீரின் இயக்கத்தில் வந்து சிறந்த எதார்த்த சினிமாவாக புகழ்பெற்று வரும் பருத்தி வீரன் திரைப்படத்தில் வரும் ஆரம்ப மற்றும் இறுதிப் பாடல் காட்சிகளில் திருநங்கைகள் நிதர்சனம் என்ற பெயரில் குத்தாட்ட வேடதாரிரிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். அதில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல் ஒன்றில் காட்டப்பட்டிருக்கும் ஆறு திருநங்கைகளில் இரண்டு பேர் மட்டுமே உண்மையான திருநங்கைகள். மீதமுள்ள நான்கு பேரும் அலிகளாக வேடமேற்றிருக்கும் மீசை மழித்த ஆண்களே.

அசத்தலான கிராமியப் பாடலான இதில் அவ்வேடதாரிகள் பயன்படுத்தும் இரட்டை அர்த்த வசனங்களும் குத்தாட்டமும் திருநங்கைகள் மீதான தமிழ் சினிமாவின் பழைமையான மதிப்பீட்டினையே கிராமிய அழகியலோடு இப்படத்திலும் அருவெறுப்பாக பதிவு செய்கிறது. படத்தின் இரண்டு காட்சிகளில் வரும் பாலியல் தொழிலாளிகள் முதல் திருநங்கைகள் வரை விளிம்புகள் மீதான இவர்களின் எதார்த்தம் என்பது ஆதிக்கத்தின் பார்வையிலான கேளிக்கை சார்ந்த எதார்த்தமாக மட்டுமே இருக்கிறது. அதன் நவீன பதிப்பே இப்பருத்தி வீரன்.

மற்றபடி, இன்று தமிழ் சினிமாவை ஆளும் அனைத்து பெரிய ஹீரோக்களும், தாங்களோ தங்கள் படத்தில் வரும் காட்சியிலோ திருநங்கைகளை கேவலப்படுத்தியே வருகின்றனர். அமராவதி, போக்கிரி, சிவகாசி, கட்டபொம்மன், துள்ளாத மனமும் துள்ளும், திருடா திருடி, பருத்தி வீரன், கில்லி, உள்ளம் கொள்ளை போகுதே, வேட்டையாடு விளையாடு, சில்லுன்னு ஒரு காதல், வரலாறு, ஈரமான ரோஜாவே.... இன்னும் இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத, நினைவில் வராத படங்கள் கணக்கில்லாமல் உள்ளன.

தமிழ் சினிமா சித்தரிக்கும் திருநங்கைகள் பெரும்பாலும், ஒன்றாகவோ, நான்கைந்து பேர் சேர்ந்து கூட்டமாகவோ அடர்த்தியான மேக்கப்பில் டோப்பா மாட்டிக் கொண்டு, கதையின் நாயகன்/ நகைச்சுவை நடிகரை பாலுறவுக்கு விழையும் தோரணையில் அழைப்பர். பெரும்பாலும் பாடல்காட்சிகளின் மத்தியிலேயே அதிகம் பயன்படுத்தப்படுவர். பொழுது போக்குச் சாதனமாகிய படத்தின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமான பாடல்களில் இவ்வாறு காட்டப்படுவதன் மூலம் திருநங்கைகளும் பொழுதுபோக்கு உடைமையாக பாவிக்கப்படுகின்றனர்.

1. பத்து பத்து பத்துல நீ ஒன்ன நீக்கு...
எட்டு எட்டு எட்டுல நீ ஒன்ன கூட்டு...
ஒன்பது என்பதை இத்தனை கவிநயத்தோடு (?!) சொல்கிறார் கவிஞர்!.

2. தலைப்புச் செய்தி வாசிப்பது கிரிஜாக்கா, கோமளம்...
3. ஒரேயொரு கீரவடைக்கு ஒம்பது பேர் போட்டி
அந்த ஒம்பது பேரும் அடிச்சிகிட்டதுல அவுந்து போச்சு வேட்டி...

இத்தகைய தெருப்பொறுக்கி பாடல்களில் ஆண்களுக்கு மீசையை மழித்து அலி வேசமிட்டு அழகு பார்த்து மகிழ்கின்றனர். எதிர்பார்த்தபடியே பாடல் ஹிட்...

இதுமட்டுமன்றி, ஒரு குடும்ப நிகழ்வாக அமையக் கூடிய பாடல்களிலும் கூட திருநங்கைகளை போகிற போக்கில் நிர்வாணப்படுத்தி மகிழ்கின்றனர் தமிழ் சினிமா ஆளுமைகள். இதற்கு உதாரணமாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் கும்மியடி, கும்மியடி பாடலைக் கூறலாம். இதில், கும்மியடி என்ற வரி வரும் இடத்திலெல்லாம் வடிவேலு அலிகளை நினைவு கூர்ந்து கிண்டலடிக்க தக்கதாய் கையடிப்பார்.

திருநங்கைகள் கைதட்டுவதற்கான காரணம், தேவை, முறை என்பதே வேறு. ஆனால், ஒரு அலியை சித்தரிப்பதற்கான மிக எளிய குறியீடாக இந்த கையடிக்கும் பழக்கத்தை தமிழ் சினிமா கர்த்தாக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது. நகைச்சுவைக்கென்ற தனி நடிகரற்ற வேட்டையாடு விளையாடு போன்ற படத்திலும் வில்லன்களான அவ்விரண்டு இளைஞர்களையும் நோக்கி கமல் கேட்டும் ‘‘நீங்க என்ன ஹோமோ செக்சுவலா?’’ என்று கேட்பதும் ஒரு வில்லனிடம் பிடிபட்ட மற்ற வில்லனை ‘‘உன் பொண்டாட்டி இப்ப என்கிட்ட...’’ என்பதுமே மிகப் பெரிய நகைச்சுவை காட்சியாக காட்டப்படுகிறது.

இத்தகைய காட்சியமைப்புகள் ஹீரோக்களின் ரசிக தொண்டர்களுக்கும், மற்ற பார்வையாளர்களுக்கும் திருநங்கைகள் யாவருமே கேலிக்குரிய அற்பப் பிறவிகள். அவர்களை கேலி செய்வதென்பது வாழ்க்கையில் ஒரு ரசமான அனுபவம் என்பதாக சிந்தையில் பதித்து விடுகிறது. இது, திருநங்கைகளை கேலி செய்வதோ, அவ்வாறு கேலி செய்யப்படுவதை வேடிக்கை பார்த்து களிகொள்வது தவறில்லை, அது குறித்த குற்றவுணர்வும் தேவையில்லை என்ற தளத்திலேயே அவர்களை கொண்டு செல்கிறது.

கட்டபொம்மன் என்ற படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பெண்களை வேலைக்கு ஆள் எடுப்பதாக ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். அதில் வழக்கமான நகைச்சுவை போலன்றி ஒரு நுட்பமான விசயத்தையும் பதிவு செய்திருப்பார்கள். காட்சிப்படி இரண்டு திருநங்கைகள் (போல வேடமிட்ட ஆண்கள்) பணி தேர்வுக்காக காத்திருப்பார்கள். அவர்களைக் கண்ட கவுண்டமணி ‘‘ஏய்! போ... ஏய்! போ...’’ என்று துரத்துவார். இங்கே அதற்கு அவர்கள் ‘‘ஏன் நாங்க வேலை செய்யமாட்டமா?’’ என்று கேட்க, பதிலாக கவுண்டமணி ‘‘ங்கூம், அப்பிடியே நீங்க வேலை செஞ்சுட்டாலும்...’’ என்று துரத்துவார்.

இங்கே கிண்டல் என்பது ஒரு பக்கம் இருக்க, அலிகள் பொதுத்தளங்களில் பணி புரிவதற்கு லாயக்கற்றவர்கள், அவ்வாறு பணிக்கமர்த்துவதும் அருவெறுப்பானது என்பதையும் பதிவு செய்வார். இங்கே, இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வேலைக்காக அவர் தெரிவு செய்யும் ஆட்கள் இளைய, அழகான பெண்களை மட்டுமே. வயதான பாட்டிகளையோ அழகற்றவர்களையோ அல்ல. வேலைக்கு ஆளெடுக்கும் இடத்தில், அதுவும் பாலியல் இச்சையோடு அழகிய இளம்பெண்களை தேர்வு செய்பவன் கூட திருநங்கைகளை மட்டமான மதிப்பீட்டுடன் வெளியேற்றும் முரணை காண்கிறோம். எரிச்சலூட்டும் இக்காட்சி ஒரு விதத்தில் திருநங்கைகளின் வேலை வாய்ப்பு குறித்தான நிதர்சனத்தை கூறுவதாகவும் உள்ளது.

படங்களில் திருநங்கைகளாக ஆண்களே வேசமிடப்படுவதற்கு சிறந்த உதாரணமாக, ‘‘துள்ளாத மனமும் துள்ளும்’’ படத்தை கூறலாம். மற்ற படங்களைப் போல் வெறும் பாடல்/நடனம் என்றில்லாமல் ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெறும் இப்படத்தில், வையாபுரி முதலில் பெண்தன்மையுள்ள ஆணாக விஜய்யின் நண்பர் வட்டத்தில் வலம்வருவார். இடையில் காணாமல் போகும் அவர் மீண்டும் பெண்ணாக (கல்யாண சுந்தரம் > கல்யாணியாக) கல்லூரி மாணவியாக வருவார்.

திருநங்கைகளுக்கு சட்டரீதியாக பாலின அடையாள சிக்கல் இருக்கும் இந்திய சூழலில் எளிதாக பெண்ணாக மாறிவிட்டதாகவும், கல்லூரி செல்வதாகவும் காட்டப்பட்டிருப்பார். திருநங்கையொருவர் பெண்களோடு இயல்பாக பழகுவதாகவும், கல்லூரி செல்வதாகவும், மகளிர் காவலாளி ஒருவர் பாதுகாப்பு தருவதாகவும் காட்டப்பட்டிருப்பது சந்தோசமாகவே உள்ளது. ஆனால், காட்சி எதார்த்தத்திற்கு வெறும் வித்தியாசமான நகைச்சுவை என்பதாகவே சேர்கிறது.

இவ்வாறு ஆண்கள் திருநங்கைகளாக நடிக்கும் படங்களில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய படம், வசந்த் இயக்கத்தில் வெளிவந்து நடிகர் பிரகாஷ்ராஜ்-ன் சிறப்பான நடிப்பில் வெளிவந்த ‘‘அப்பு’’. இதில் பிரகாஷ்ராஜ் மகாராணி என்ற அலி வேடத்தில் நடித்திருப்பார். படத்தில் பிரகாஷ்ராஜ் அறிமுகமாகும் முதல் காட்சியே அபத்தமாக அமைந்திருக்கும், படத்தின் தரத்தையும் ஒரு சோற்று பதமாய் இது காட்டுகிறது. காட்சியில், பிரகாஷ்ராஜ் தனது மீசையை சேவிங் செய்து கொண்டிருப்பார்.

உண்மையில், திருநங்கைகள் தங்களது தாடை ரோமங்களை நீக்க கிடிக்கி போன்ற சிம்டா என்னும் பாதுகாப்பற்ற (ஏனெனில் பாதுகாப்பான ஆயுதம் வேறில்லை) கருவியால் ஒவ்வொரு முடியாக வேரோடு பிடுங்கி எறிவர். கவனக் குறைவால் சிலக் காயங்களும் ஆவதுண்டு. நினைத்துப் பாருங்கள், அதன் வலியறிய ஒரேயொரு முறை தங்களது ஒரு முடியை பிடுங்கி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனையே முகத்தின் மென்மையான தோலில் அத்தனை ரோமங்களையும் பிடுங்கும் போது இன்னும் எத்தகைய வலியைத் தரும் என்பதையும் யூகிக்க முடியும்.

இங்கேயும் கதைப்படி மகாராணி என்னும் திருநங்கை பெண்களை அடக்கி வைத்து விபச்சாரம் செய்யும் ஒரு புரோக்கர் தாதா. இது வரை சிறிய சிறிய காட்சிகளாக திருநங்கைகளை கேலி பொருளாக மட்டுமே முன்வைத்த தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக நேர்மறையாக காட்டப்பட்ட பம்பாய் இயக்குநரின் வழித் தோன்றலாலேயே முழு நீள கிரிமினலாக திருநங்கை சித்தரிக்கப்படுகிறார்.

திருநங்கைகள், கிரிமினல்களாக காட்டப்படுவதன் இன்றைய நவீன பதிப்பாக நாம் காணக்கிடைக்கும் மற்றொரு படம் ‘‘சில்லுன்னு ஒரு காதல்’’. இப்படத்தில் மும்பைக்கு செல்லுமிடத்தில் அங்கு பிரபலமாகவுள்ள விபச்சார விடுதிக்கு நண்பர் ஒருவருடன் ஆர்வத்துடன் செல்கிறார் அப்பாவி (!) வடிவேல். அங்கோ, ஏமாற்றமாக பெண் வேடத்தில் ஆண் (அவரை பொருத்தவரையில் திருநங்கை என்பவர் பெண் வேசம் போடும் ஆண்) இருக்கக் கண்ட அவர் தப்பித்து ஓட முயல்வார். அப்போது அவர் கூறும் வசனம் ‘‘டே, இங்க பூரா அவிங்களாத்தான் இருக்காய்ங்க’’ என்பதாக இருக்கும். அவ்வாறு தப்பித்து ஓட முயலும் வடிவேலுவை அங்கிருக்கும் மற்ற திருநங்கைகள் வளைத்து பிடித்து விடுவார்கள். தொடர்ந்து வடிவேலு, ‘‘யெப்பா தெரியாம வந்துட்டேன் மன்னிச்சு விட்டுடுங்கப்பா’’ என்பார்.

மற்ற படங்களிலாவது அலிகள் அது, இது என்று அஃறிணையிலாவது குறிக்கப்படும் நிலையில் இப்படத்தில் அவிங்க, இவிங்க என்று ஆண்பாலில் குறிக்கப்படுகின்றனர். அதாவது இவர்களெல்லாம் ஆண்கள் தான். பணத்தாசை/ கொழுப்பின் காரணமாக பெண்களைப் போல புடவை அணிந்து ஊரை ஏமாற்றுகின்றனர் என்று மிக எளிதாக வரையறை செய்து விடுகின்றனர்.

சரி... இவ்வாறு மாட்டிக் கொண்ட வடிவேலை அங்குள்ள அலிகள் பணம் தருமாறு மிரட்டுகின்றனர். பணம் இல்லை என்று கதறும் அப்பாவி வடிவேலுவை ‘‘அப்படியில்லைனா, எங்கள மாதிரி நீயும் ஆப்ரேசன் பண்ணி எங்களை மாதிரி (விபச்சாரம்) சம்பாதிச்சு குடுத்துட்டு அப்புறம் போ...’’ என்று கூறி துரத்துகின்றனர். ஒரு அப்பாவி பல அலிகளால் துன்புறுவதைப் போல காட்டப்படும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு திருநங்கைக்கு சமூகத்தின் பொது இடத்தில் உள்ள பாதுகாப்பின்மை குறித்து ஒரு படத்திலும் காட்டப்படுவதில்லை.

ஆக, வேலையின்றி வெட்டியாகத் திரியும் திருமணமான நபர். மும்பை வருகிறார், வந்ததும் அங்கே பிரபலமாக உள்ள சிவப்பு விளக்கு பகுதிக்கு செல்ல வேண்டுமென ஆர்வமாய் இருக்கிறார். இத்தகைய சிறுபுத்தி உடைய சோம்பேறி அப்பாவியாகவும், அப்படி வரும் அப்பாவிகளை ஏமாற்றி வயிறு வளர்க்கும் கொள்ளைக் கூட்டமாக திருநங்கைகளையும் சித்தரிக்கின்றனர். திருநங்கைகள் சிறுவர்களை கடத்தி ஆபரேசன் செய்து அலிகளாக மாற்றிவிடுவதாக அபத்த செய்திகள் இன்றைக்கும் நிலவுகிற நிலையில், இக்காட்சி திருநங்கைகள் அத்தகையவர்களாக காண்பிக்கப்படுவதன் மூலம் ஒரு கொள்ளையர்களாகவும், சமூக விரோதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

சென்ற ஆண்டில் அதிக பொருட் செலவில் தயாராகி கௌதம் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘‘வேட்டையாடு விளையாடு’’. (சென்ற ஆண்டில் டாப் டென்் தர வசையிலும் முதல் இடம் பெற்ற சிறப்பும் இதற்குண்டு). தொடர்ந்து தனது படங்களில் வித்தியாசமான குற்றவாளிகளை காண்பித்து வரும் கௌதம் இதில் வித்தியாசமான குற்றக் காட்சி ஒன்றிற்கு பாலியல் வெறி பிடித்த அலி ஒருவரை சித்தரிக்கிறார்.

கதைப்படி காவல் நிலையம் ஒன்றிற்கு, திருநங்கையொருவர் வாரந்தோறும் தன் காமஇச்சையை தீர்த்துக் கொள்ள வருவார். இதில் இன்ஸ்பெக்டருக்கும் பங்குண்டு. அதன் படி அந்த வாரமும் திருநங்கை வருவதில் காட்சி துவங்குகிறது. அவரைக் கண்ட அதிகாரிக்கு ஒரு விபரீதமான யோசனை வருகிறது. லாக்கப்பில் இருக்கும் இரண்டு கல்லூரி இளைஞர்களையும் வித்தியாசமான முறையில் தண்டிப்பதற்காக இவரை அவர்களுடைய அறைக்குள் அடைக்கிறார். அந்த திருநங்கைக்கோ அவ்விரு இளைஞர்களும் லட்டாக அமைகின்றனர். இளைஞர்கள் இருவரும் திருநங்கையை கண்டு அலற, அவரோ ‘‘அய்! இந்த பக்கம் சிகப்பு, அந்த பக்கம் கருப்பு’’ என முத்தாய்ப்பான காட்சியை இளைஞர்களின் அலறலோடு முடிப்பார்.

தொடர்ந்து வரும் காட்சியில் அந்த இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் உயர் அதிகாரி (கமல்) கைதிகளை குறித்து எந்த குறிப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்று மட்டும் தான் கடிந்து கொள்கிறார். அலியைக் கூட்டிட்டு வந்து அந்த கசமுசா-வெல்லாம், மூச்! அதப்பத்தி ஒரு வார்த்தை கிடையாது!

வேறொரு காட்சியில் இது குறித்து கொலைவெறியோடு பேசும் பாதிக்கப்பட்ட (?!) கைதிகளில் ஒருவர் (கோத்தாத... அந்த அலிய, மொத கொல்லனும்னு நெனைச்சேன்...) என்ற ரீதியில் ஒரு வசனம் உடற்குறைபாடு உள்ளவர்களையோ, தலித் மக்களையோ குறிக்கக்கூடிய மோசமான சொற்களுக்கு கண்டனம் எழும் சூழ்நிலையில் திருநங்கைகளை அலி என்று ஆவேசமாக திட்டுவதற்கு எந்த மறுப்பும் எழுவதில்லை.

படத்தில் இரண்டு மருத்துவரி மாணவர்கள் வில்லன்களாக காட்டப்பட்டிருந்தாலும், மருத்துவரி அதிகாரியொருவர் (நல்லவர்) இத்தகைய மாணவர்களால் தான் மருத்துவர்களுக்கே அவமானம் என்று வருத்தப்படுவார். கூடவே அம்மாணவர்களின் மருத்துவப் பட்டத்தையும் இந்தியன் மெடிக்கல் கவுன்சில் நிராகரிப்பதாகவும் தெரிவிப்பார். இந்த நல்லவன் கெட்டவன் எல்லாத் துறையிலுமே இருப்பதாகவே அனைத்து தமிழ் சினிமாவிலும் காட்டப்பட்டு வருகிறது. படத்தில் ஒரே போலிஸ் வில்லன் (கெட்டவன்) என்றால் இன்னொரு போலீஸ் நல்லவனாக நிச்சயம் வருவான். ஆனால் திருநங்கைகள் மட்டும் தான் இதுநாள் வரை இப்படியொரு மட்டமானவர்களாக காட்டப்படும் திருநங்கைகள் மத்தியில் ஒரு நல்ல திருநங்கை காட்டப்படுவதில்லை.

குடும்பத்தாலும், ஒட்டு மொத்த சமூகத்தாலும் பொது வாழ்க்கையிலிருந்து புறக்கணிக்கப்பட்டு சகமனித அங்கீகாரமின்றி பொதுத் தளத்தில் வாழ வழியுமின்றி (சோத்துக்கு வழியில்லாமல் என்று புரிந்து கொள்ளவும்) கடைக்கோடியில் நின்று பிச்சையெடுத்தும், முப்பதுக்கும், நாப்பதுக்கும் விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் திருநங்கைகள். அப்படிப்பட்டவர்களின் பிரச்சினை என்ன...? அவர்களின் தேவை என்ன? என்பது குறித்த எந்தவொரு அக்கறையுமின்றி கேலிக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது தமிழ் சினிமா. இன்று வெள்ளித் திரையிலும், நாளைத் தொலைக்காட்சியிலுமாக படங்களில் சித்தரிக்கப்படும் திருநங்கைகளை மட்டுமே கண்டு வளரும் தலைமுறையும் அத்தகைய சிந்தையோடே வளர்ந்து திருநங்கைகள் மீதான தனது வன்முறையையும் நிலைநாட்டுகிறது.

கீதை என்று ஒரு விஜய் படம். அது பகவத் கீதையை குறிக்கிறதென இந்துத்துவ சக்திகள் அப்படம் வெளிவர தடைவிதிக்கக் கோரின. அதன்படி, புதிய கீதை என பெயரும் மாற்றப்பட்டது. டாவின்சி கோட் திரைப்படம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை அவமானப்படுத்துகிறதென அப்படம் வெளிவருவதற்கே தடை விதிக்கப்பட்டது.

தமிழில் பெயர் வைத்தாலே, கேளிக்கை வரி இல்லை என தமிழக அரசு அறிவிக்கிறது. புகை பிடிக்கும் காட்சிகள் தடை செய்யப்படும் என்றும், ஊனமுற்றவர்களை கேலி செய்தால் அக்காட்சி தடை செய்யப்படும் என்றும் தணிக்கை துறை கூறுகிறது. அதுவும் தற்போது குறைந்து வருகிறது. ஆபாசம், வன்முறை, ஜாதி/மத துவேசமென பல காட்சிகளையும், வசனங்களையும் தடை செய்கிறது அதே தணிக்கைத் துறை. ஆனால், அடிப்படை நாகரீகம், மனிதாபிமானம் இன்றி திருநங்கைகள் மீது கட்டவிழ்க்கப்படும் இத்தகைய திரை வன்முறைகளை, மட்டும் தணிக்கைத் துறையும் கண்டு கொள்வதில்லை.

குறிப்பிட்ட சாதியை தவறாக சித்தரிக்கிறதென ஆனால், திருநங்கைகள் மீதான இத்தகைய அரைவேக்காட்டு கற்பிதங்களை எப்போது நிறுத்துவார்கள்...?

http://keetru.com/puthiyakaatru/jun07/living_smile_vidhya.php

No comments:

Post a Comment