ஆளைக்
கொல்லும் அலட்சியப் பார்வை, கிண்டலும் கேலியும் நிறைந்த பாதை,
உறவினர்களின் ஏளன அலட்சியப் போக்கு, வேற்றுமை கண்ணோட்டம், புறக்கணிப்பு
என்று வாழ்க்கை முழுவதும் வலிகள்... அதன் வடுக்கள் மறைவதற்குள் மற்றொரு
காயம் என்று ஏன் பிறந்தோம் என்கிற கவலையில் மூழ்கடிக்கப்படும் ஒரு
பிறப்புதான் எங்களுடையது. உங்களை நான் கடக்காமல் இல்லை, உங்களின் கண்களில்
நான் காணப்படாமல் இல்லை. இருந்தும் ஒரு அடையாளம் இல்லாமல் சமுதாயத்தில்
எனக்கு ஓர் இடத்தைத் தேடி சிறகுகள் இன்றி திரியும் பறவை, வாசமில்லாத
காகிதப்பூவாய், பாதியில் வரைந்த நின்ற சித்திரமாய், இயற்கையினின் பிழையாய்
நான் பிறந்தாலும், வாழ இந்த பூமியில் எனக்கும் வாழ வழி உண்டு என்கிற
நம்பிக்கையில் விடியலை நோக்கி பயணிக்கும் ஒரு திருநங்கை நான். நான்
உங்களில் ஒருத்தி, ஆனால் உங்களுக்கு என் மீதுள்ள வேற்றுமை கண்ணோட்டத்தால்
பல வலிகள், அவமானங்கள், ரணங்கள் சுமந்து நடைபிணமாக வாழ்ந்து வாழ்கிறேன்.
எல்லா
குழந்தைகள் போல தான் நாங்களும் பிறந்தோம். தாயின் கருவிலே உள்ளபோது
எங்களுக்குத் தெரியாது வாழ்க்கை இத்தனை கடினமாக அமையும் என்பது. என் விதி
அப்போது தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்துதிருப்பேனே.. என்கிற
பாடல் வரிகளை நாங்கள் பாடாத பொழுதுகள் இல்லை. கருவிலே நிறமூர்த்தங்கள்
நிகழ்த்திய கோளாறு எங்கள் வாழ்க்கையின் வரலாற்றை மாற்றியது. எங்களின்
வாழ்வில் மனமும் குணமும் பாலின மாற்றமும் ஏற்படும் என்பதை சின்னஞ்சிறு
வயதில் அறிந்திடவில்லை.
பருவவயத்தில்
பள்ளியில் சகமாணவர்கள் கேலிசெய்தபோது அழுக ஆரம்பித்தது இன்று வரை எங்களின்
அழுகை ஓயவில்லை. காலம் மாறினாலும் எங்களின் மீதுள்ள அலட்சியப் போக்கு
மாறவில்லை. பெற்றோர்கள் எங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் ஒதுக்கியபோது
மரணத்தின் எல்லை வரை சென்று வந்தோம். சிலர் மரணம் தழுவியும் போனோம்.
சொல்லமுடியாத துயரங்களும் விரக்தியின் உச்சங்கள் மட்டுமே எங்களின்
மனக்குறிப்பு. இத்தனை சோகங்கள், துயரங்கள் அத்தனையும் மனதில் புதைத்து
விட்டு ஒரு பீனிக்ஸ் பறவையாக வெற்றியடைய வாழ்கையை நோக்கி பறக்கிறோம்.
நம்பிக்கை
மனதைரியம் கொண்டு எழுந்தாலும் சமூகத்தில் எங்களின் மீது படும் சாட்டைகள்
பல. கேலி, கிண்டல்கள், புறக்கணிப்பு, அவமானம், அலட்சியம், வேற்றுமை
கண்ணோட்டம், ஒதுக்குதல், அடக்குமுறை, பாலியல் கொடுமை, சுயமரியாதை அபகரிப்பு
இப்படி பல வகை அவலங்கள் எங்கள் மீது சமுதாயத்தில் இருந்து
தொடுக்கப்படுகிறது. பேருந்தில் இடம் தர மறுப்பது, பொது கழிவறை உபயோகிக்க
அனுமதியின்மை என்று எங்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட சில இடங்களில்
தரப்படுவது இல்லை. எங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைக்காகப் போராட
வேண்டியுள்ளது.
வேலை கேட்டு செல்லும்
இடங்களில் அவமானம், வேலை தர மறுப்பது போன்றவை எங்களின் சிலரை வயிற்று
பிழைப்புக்காக பிச்சை எடுக்கவும் பாலியல் தொழில் செய்யவும் தூண்டும்
காரணிகளாக அமைகின்றன. எங்களை நீங்கள் ஒதுக்கவேண்டாம், புறக்கணிக்க
வேண்டாம். நாங்களும் மனிதர்கள் தான், அவதாரோ இல்லை ஏலியன்ஸோ இல்லை. எங்களை
சமமாக சமஉரிமை கொடுத்து மதியுங்கள், எங்களால் சமூகத்தில் நல்ல நிலையை பெற
முடியும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். எங்களில் நிறைய பேர் பல
திறமைகள் பெற்றவர்கள். ஆனால் எங்களின் திறமைகள் அறியப்படாமல்,
அறியப்பட்டாலும் அங்கீகாரம் வழங்காமல் புறக்கணிக்கபடுகிறது.
வேலை
தேடி உங்களிடம் வரும் திருநங்கைகளுக்கு வேலை வழங்குங்கள். சமுகத்தில்
நாங்கள் மரியாதையுடன் வாழ உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.
ஆண்களில்
பெண்களில் தீயர் உள்ளது போல திருநங்கைகளிலும் தீயர் சிலர் உள்ளனர், அது
இயற்கை. அடாவடியாக சில திருநங்கைகள் பணம் பறிப்பது முகம் சுளிக்கும்
வகையில் நடப்பதை நானும் மற்றும் பல திருநங்கைகளும் ஆதரிக்கவில்லை. சிலர்
செய்யும் செயலுக்காக ஒட்டுமொத்த திருநங்கைகளின் மீது சமுதாயம் எதிர்மறை
எண்ணம் கொள்ளக்கூடாது. சில ஆண்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில்
திருநங்கைகள் போல வேடம் அணிந்து இத்தகைய செயலில் ஈடுபட்டு திருநங்கைகளுக்கு
களங்கம் ஏற்பட காரணமாக உள்ளது கண்டிக்கத்தக்கது.
இன்றைய
நிலையில் திருநங்கைகள் பல வழிகளில் முன்னேற முற்படுகின்றனர். இத்தகைய
சுழலில் சமுதாயத்தில் உள்ள நீங்களும் எங்களுக்கு ஆதரவு வழங்கி எங்களின்
வாழ்க்கை மேன்பட உதவ வேண்டும். கணிசமாக திருநங்கைகள் பிச்சை எடுப்பது,
பாலியல் தொழில் செய்வதில் இருந்து ஒதுங்கி சுயதொழில் செய்யத்
தொடங்கியுள்ளனர். அப்படிப்பட்ட திருநங்கைகளை நீங்கள் வரவேற்று முழு ஆதரவு
வழங்க வேண்டும். இட்லி கடை, டீக் கடை, பெட்டி கடை, பூ கட்டுதல், காய்கறி
வியாபாரம், பழக்கடை, தள்ளுவண்டி கடை, அழகு நிலையம், சமையல் பணி, சுயஉதவி
குழு என்று நாங்கள் எங்களின் வாழ்க்கை நிலையை மாற்றி வருகிறோம்.
பல
திருநங்கைகள் திருநங்கைகளின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார்கள்.
அவர்களில் குறிப்பாக ஆஷா பாரதி, பிரியா பாபு, கல்கி சுப்ரமணியம், லிவிங்
ஸ்மைல் வித்யா போன்றவர்களின் செயல்கள் பாராட்டி குறிப்பிடத்தக்கது. சினிமா
என்கிற ஊடகத்தில் நகைச்சுவை என்கிற பெயரில் திருநங்கைகளை காலம் காலமாக
வேதனைக்கு உட்படுத்தும் வகையில் காட்சிகளை அமைப்பது கண்டனத்துக்குரியது.
நர்த்தகி, தெனாவெட்டு, நவரசா, கருவறை பூக்கள் போன்ற திரைப்படங்கள்
திருநங்கைகளை கண்ணியமான முறையில் காட்டியுள்ளன.
மாற்றம்
என்பதே மாறாதது. எங்களுக்கு மாற்றம் வேண்டும். சமுதாயத்தில் அனைவரும்
எங்களை மதித்து மனிதாபிமான பண்போடு எங்களை அணுகி பழகவேண்டும். நாங்களும்
வாழப்பிறந்தவர்கள். எங்களையும் வாழ விடுங்கள், அன்பாக பேசாவிட்டாலும்
பரவாயில்லை எங்களின் மனதை நோகும்படி யாரும் கேலிப்பேச்சு பேச வேண்டாம்.
மனிதநேயம் தழைக்க உதுவுங்கள், நாங்களும் மனிதர்களே.
http://keetru.com/index.php/component/content/article?id=20652
No comments:
Post a Comment