Tuesday, November 10, 2015

அரவாணியக் கோட்பாட்டு உருவாக்கம் --------------- இலா. வின்சென்ட்


‘பாம்பு தன் சட்டையை உரித்தெறிவது போல இந்த என் உடலை கழட்டி எறிய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும். என் உணர்வுகள், என் கனவுகள், என் உயிர் - எப்படி மீட்கப் போகிறேன்?’ திருநங்கை வித்யாவின் குமுறல்.
ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் அரவாணிகளைப் பதிவு செய்துள்ளன. திவாகர நிகண்டு ‘பேடி இலக்கணம் பேசும் கலை’ என 16 வரிகளில் அரவாணிகளின் இலக்கணத்தை வரையறுக்கிறது. அவற்றை ஆய்ந்து திரட்டியதே ‘தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்’ நூல். இது ஒரு ஆய்வேடாக நின்று ஒடுக்கப்பட்ட அக்கூட்டத்துக்காக முழக்கமிடுகிறது. அதுவே இந்நூலின் தனித்துவம். நண்பர் முனிஷ் ஐந்து இயல்களாகப் பகுத்து தனது ஆய்வில் வெற்றி கண்டுள்ளார்.
இலக்கண ஆசிரியர்களுக்கு அரவாணிகளை எப்பாலினுள் அடக்குவது என்பதே சிக்கல். தொல்காப்பியர் பெண்தன்மை மிகுந்த பெண் அரவாணிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார். அவர்களைப் பெண்பாலினுள் சேர்க்கிறார். அதனால் பலர்பாலிலும் உயர்திணையிலும் அவர் கள் வாழ்கின்றனர். நன்னூலார் ஆண் பேடு, பேண் பேடு என இருவகை அரவாணிகளையும் பார்க்கிறார். இப்பேடுகள் உயர்திணை ஆயினும் அஃறிணையை ஒக்கும் என்கிறார். இதனால் இருதிணைக்கும் ஐம்பாலுக்கும் அவர்கள் பொதுவாகி விடுகின்றனர். ‘அறுவகை இலக்கணம்’ தவத்திரு. தண்டபாணி சுவாமிகள் இயற்றியது. அது ஃ எழுத்தை அலி எழுத்து என்றும், அஃது, இஃது, எஃது என்பன அலிப்பால் சுட்டென்றும் கூறுகிறது. அலிப்பாலை அஃறிணை யில் அடக்குகிறது. தொன்னூலும் அவர்களை அஃறிணையாய் இழிவுபடுத்துகிறது. இப்படி தொல்காப்பியர் காலத்தில் உயர்திணையாக இருந்த அரவாணிகள் பிற்காலத்தில் அஃறிணையாய் அவதிப்பட்டதை முனிஷ் சான்றுகளுடன் மெய்ப்பித்துள்ளார்.
அகநானூறு(206) அரவாணிகள் கூத்தாடியதையும் போருக்கு விலக்கப்பட்டதையும் கூறுகிறது. புறநானூறோ (28) உறுப்புஇல் பிண்டம், பேதைமை என வசைபாடுகிறது. வள்ளுவர் திறமையற்றவர்கள், கோழைகள் எனவும், நாலடியார் சபிக்கப்பட்டவர்கள் எனவும் ஒதுக்குகிறது. இவற்றைத் தக்க மேற்கோள்களுடன் ஆசிரியர் நிறுவுகிறார். சைவம், சிவபெருமானை ‘ஆண், பெண், அலி எனும் பெற்றியான்’ எனப் போற்றுகிறது. அர்த்தநாரீஸ்வரரை வழிபடுகிறது. திருவாய்மொழியோ ‘ஆணுமல்லன், பெண்ணுமல்லன், அலியுமல்லன்’ எனத் திருமால் வடிவத்தை விரித்துச் செல்கிறது. அரவான் களபலியில் கிருஷ்ணனின் மோகினி உருமாற்றம் அரவாணிகளை கண்ணனின் அவதாரமாக்கிற்று. இருப்பினும் சைவ, வைணவங்கள் சொல்வது அலிநேயமன்று; இறைநேயமே, அவை மானுடம் பாட மறுத்ததை ஆசிரியர் அழுத்தம் தராமல் நழுவ விட்டுள்ளார்.
மாதவியின் பதினொரு வகை ஆடல்களில் பேடி ஆடலும் ஒன்று. அக்காலத்தில் அரவாணிகள் ஆடும் தனிக்கூத்து இருந்துள்ளது. செங்குட்டுவன் ஆரிய அரசர்களோடு அழைத்து வந்த அரவாணிகள் ‘ஆரியப்பேடிகள்’ என அழைக்கப்பட்டனர். அரவாணிக ளுக்கு ‘நிர்வாணம் செய்தல்’ சடங்கு நிகழ்ந்துள்ளதை மணிமேகலை வாயிலாக நம்முள் வைத்துள்ளார். தற்காலத்தில், நிர்வாணம்செய்தல், அலி பட்டாபிஷேக விழா, மடி கட்டுதல், கூத்தாண்டவர் கோயில் விழா போன்றவற்றை விரிவாகத் தந்துள்ளார். அதோடு, தந்தா, கோத்தி, சண்டாசு, சொறுவோடு, பந்தி முதலான 55 சொற்களுக்குப் பொருள் விளக்கம் கூறுகிறார். கி.ராஜ நாராயணனின் ‘கோமதி’ சிறுகதை, சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவல் ஆகியன அரவாணிகள் மீது அக்கறை காட்டுவதை ஆசிரியர் விளக்குகிறார்.
நா.காமராசன் கவிதை, செல்வகாந்தனின் ‘தவறிப் பிறந்து விட்டோம் அரவாணிகளாய்’, இன்குலாப் கவிதை, நாடகங்கள், திரைப்படங்கள், நாளிதழ்கள், பிற இதழ்கள் என அரவாணி களுக்காய்க் குரல் கொடுத்தவற்றை அடையாளம் காட்டுகிறார் முனிஷ். அரவாணிகளை அங்கீகரித்து, சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் அரவணைக்க இந்நூல் கரம் நீட்டுகிறது. இன்று சில உரிமைகளை அவர்கள் பெற்றிருப்பினும் தலித்தியம், பெண்ணியம் போல் அரவாணியம் என்றொரு கோட்பாடு தேவை என அது வலியுறுத்துகிறது. ‘தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்’ பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றால் நூற்பயன்மிகும். முனிஷ் அவர்களின் தேடல் பாராட்டுக்குரியது.
தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள் - வெ.முனிஷ். வெளியீடு : ஜெயம் பதிப்பகம் வடக்குத்தெரு, கொல்லவீரம்பட்டி, வில்லூர் அஞ்சல், மதுரை மாவட்டம். விலை ரூ. 50

 http://keetru.com/index.php?option=com_content&view=article&id=1966&Itemid=139

No comments:

Post a Comment