Wednesday, November 11, 2015

டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..! ---- அகிலா கண்ணதாசன்

Published: July 20, 2015 
திருநங்கை பிரியா பாபு | பிஸியோதெரபிஸ்ட் செல்வி (படம்: எல்.சீனிவாசன்)
திருநங்கை பிரியா பாபு | பிஸியோதெரபிஸ்ட் செல்வி (படம்: எல்.சீனிவாசன்)
வலிகள் மிகுந்த தங்கள் வாழ்க்கையில் அன்பைத் தூவி, வெற்றுப் பாதையை வெற்றிச் சாதனையாக்கிய திருநங்கைகள் நால்வரைப் பற்றி..
செல்வி (பிஸியோதெரபிஸ்ட், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை):
"இந்த மனுஷன் இப்படிப் போட்டு என்னை சாகடிக்கிறானே?"
அழுது கொண்டே தன் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறார் அப்துலின் மனைவி. உடல்நலம் சரியில்லாமல் படுத்திருக்கும் அப்துலின் முகத்தில் எள்ளும் கொள்ளும், வெடிக்கிறது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை. அரசு மருத்துவமனைக்கே உரிய பயமும், பதற்றமும், அவசரமும் அங்கே விரவிக் கிடக்கிறது. காலையிலே ரவுண்ட்ஸ் வந்த பிசியோதெரபிஸ்ட் செல்வி இதைப் பார்த்து, என்ன என்று கேட்கிறார்.
அவரைப் பார்த்தவுடனே உடைந்து விசும்பத் துவங்குகிறார் அப்துலின் மனைவி. "விடிகாலைல 3 மணில இருந்து, ஒரு நிமிஷம் கூடத் தூங்காம இந்தாளுக்குப் பக்கத்திலேயே நின்னுட்டு இருக்கேன்."
அடுத்த 20 நிமிடங்களில் அந்த இடமே மாறுகிறது. மூச்சை இழுத்து விடுமாறு அப்துலிடம் கூறும் செல்வி, அவரின் காலைத் தேய்த்துவிட்டவாறே, இருவரிடமும் வாழ்க்கை, விட்டுக்கொடுத்தல்,அன்பு, அக்கறை பற்றிப் பேசத் தொடங்குகிறார்.
சில நிமிடங்களில் தூய வெள்ளை நிறக் கோட்டுடன் கம்பீரமாய் செல்வி அடுத்த் நோயாளியை நோக்கி நகர்ந்த போது, அப்துலின் மனைவியின் கண்கள் காய்ந்து, முகத்தில் புன்னகை பளிச்சிடுகிறது. புன்னகைத்த செவிலியரைப் பார்த்து சினேகமாய்த் தலையசைக்கும் செல்வி, மருத்துவர்களுக்கு, புன்னகையுடனே வணக்கம் சொல்கிறார்.
டீன் ஏஜ் பையனாக சென்னை வந்த செல்வி, திருநங்கையாகி, அலுவலர், உடற்பயிற்சியாளர், முதலிய வேலைகளைச் செய்து, இன்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்டாக இருக்கிறார். சொந்தமாக வைத்திருக்கும் கிளினிக்குக்கு வருபவர்களுக்கு இலவசமாக ஆலோசனையும் கூறுகிறார்.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சென்னை வந்த செல்வியின் வாழ்க்கை படிப்பு, நண்பர்கள், ஒற்றை அறை, காதல், திருமணம், துரோகம், வலி, தற்கொலை முயற்சி, வேலை எனக் காலத்தின் ஓட்டத்தில் பல அத்தியாயங்களைக் கடந்து, அவரை கே.பாலசந்தரின் நாயகியாகவே மாற்றியிருக்கிறது.
ஓல்கா (திருநங்கைகளுக்கான போராளி):
கான்வென்ட்டில் படிப்பு. உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து, அனேகமாய் எல்லா விதமான மனிதர்களையும் சந்தித்து, அலுவலக உதவியாளர் முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆலோசகர் வரை பணிபுரிந்தவர் ஓல்கா. தனியாளாய் நின்ற தன் அம்மாவால் வளர்க்கப்பட்டார்.
பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட குழந்தையான, ஓல்கா சிறு வயது சம்பவம் ஒன்றை நினைவுகூர்கிறார். "அப்போது பையன்கள் எல்லாம் ஒன்றாக நீச்சல் அடிப்பதற்காகச் செல்வோம். ஆனால் நான் சட்டை அணிந்து கொண்டுதான் செல்வேன். அப்போதே மற்ற பையன்கள் மாதிரி நாம் இல்லை என்றுதான் தோன்றும். அப்போதெல்லாம் புத்தகங்களே எனக்குத் துணை. நாளாக நாளாக பெண்ணாக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வலுப்பெற்றது.
ஓர் ஆண் பெண்மையாக உணர்ந்தால் அவன் ஒதுக்கப்பட வேண்டும்; அதுவே ஒரு பெண் ஆணைப் போல நடந்துகொண்டால் அவள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் இடத்தில்தான் பிரச்சினை தொடங்குகிறது."
வளர்ந்ததும் மருத்துவரையும், அறுவை சிகிச்சை நிபுணரையும் சந்தித்த ஓல்கா, தன் அம்மாவின் ஒப்புதலோடு, பெண்ணாக மாறினார். 87 சதவீத மதிப்பெண்களோடு பள்ளியை விட்டு வெளியே வந்தார். மருத்துவக் கனவுகளோடு காத்திருந்தவருக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. பல இடங்களில் முயன்று, கடைசியாக தொலைதூரக்கல்வி மூலம் கல்வி பயின்றார்.
தனக்கு ஏற்பட்ட நிலை, இப்போது எந்தத் திருநங்கைக்கும் வந்துவிடக்கூடாது என்று போராடி வருகிறார் ஓல்கா. ஐக்கிய நாடுகள் சபையில் ஆலோசகராக இருக்கும் ஓல்கா, சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஆணாதிக்கத்தை ஒழித்தாலே திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்கிறார்.
இளம் வயதிலேயே திருநங்கைகளுக்கு கிடைக்க வேண்டிய முறையான ஒதுக்கீடுகள் குறித்த கொள்கை மாற்றங்களைப் பற்றித் தீவிரமாகப் பேசும் ஓல்கா, திருநங்கைகளுக்கான பாகுபாடு எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதையே இலக்காகக் கொண்டிருக்கிறார்.
ஓல்கா (படம்: கே.பிச்சுமணி) | வலது: எஸ்தர் பாரதி (படம்: பி.ஜோதி ராமலிங்கம்)
எஸ்தர் பாரதி (மத போதகர்):
ஒரு பிளாஸ்டிக் கவரில் எஸ்தர் பாரதியின் விலைமதிப்பற்ற உடைமை ஒன்று பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட வெண்ணிற அங்கிதான் அது. அதை அணிந்தவுடனே பாரதியின் முகத்தில் கம்பீரம் ஒளிர்கிறது.
செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய மறு பிரவேச திருச்சபையின் முதல் போதகராக பொறுப்பேற்றுச் சாதனை படைத்தவர் பாரதி. தன் வேலையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் பயணித்தவருக்கு, உலகத்தையே சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. சென்ற இடங்களிலெல்லாம் வெறும் போதனையை மட்டுமே அளிக்காமல், திருநங்கைகளுக்கு விழிப்புணர்வை ஊட்டினார்.
"நான் கிராமத்தில் போதகராக இருந்தபோது, என்னைக் கடந்து செல்லும் மக்கள் வணக்கம் செலுத்திவிட்டுத்தான் செல்வர். திருநங்கை நண்பர்களை அழைத்துச் சென்றபோதும் கூட அப்பழக்கம் மாறவில்லை. அன்றைக்குத்தான் என்னைத் தத்து எடுத்துக்கொண்ட மதத்திலேயே முழுவதுமாய் அடைக்கலம் புகுந்தேன்.
என்னுடைய வாழ்க்கைப் பயணம் அத்தனை எளிதாக இருந்ததில்லை. ஏன் இப்பொழுதும் இருப்பதில்லை. ஆனாலும் இதுதான் என் பாதை என்பதில் தெளிவாக இருக்கிறேன் " என்கிறார் பாரதி.
வட சென்னையில் ஒற்றை அறை கொண்ட வீட்டில்தான் பாரதியின் வாசம். இன்னும்கூட நல்ல வீட்டில் அவரால் வாழ முடியும். ஆனால் திருநங்கை என்னும் அடையாளம், அவருக்கு எங்கும் வீடு கிடைக்க விடவில்லை.
பிரியா பாபு (எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர்):
திருநங்கைகள் சமூகத்தின் இலக்கிய முகங்களில் முக்கியமானவர் பிரியா பாபு. திருநங்கைகள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். இவரின் 'மூன்றாம் பாலின் முகம்' நூல் சென்னை, மதுரை, கோவையிலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் பிறந்தவரான பிரியா பாபு, 1970-களிலேயே சென்னை வந்துவிட்டார். வந்தவருக்கு வழக்கமாய் திருநங்கைகளுக்கு ஏற்படும் நிலையே நேர்ந்திருக்கிறது. பெரும்பாலான திருநங்கைகள் பிச்சை எடுத்தல் மற்றும் பாலியல் தொழிலையே செய்து கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கண்டு மனமுடைந்த பிரியா, தற்செயலாக சு.சமுத்திரம் அவர்களின் 'வாடாமல்லி' நாவலைப் படித்தார். நாவலின் ஆதர்ச கதாபாத்திரமான சுயம்புவாகவே மாறிய பிரியா, வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டார்.
மும்பைக்குச் சென்று, சமூக சேவையாளராக தனது வேலையை ஆரம்பித்தவர், பாபு என்பவரைச் சந்தித்து, காதலித்து மணமும் செய்துகொண்டார்.
தமிழ்நாட்டையும் தாண்டி விரிவடைந்தது அவரின் பணி. திருநங்கைகளுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் மனு பிரியாவுடையது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினியுடன் இணைந்து இதைச் செய்தார்.
வேலையைத் தாண்டி, பிரியா பாபுவுக்கு கலைகள் எப்போதும் கைவந்த கலை. திருநங்கைகள் சமூகம் சார்ந்து ஏராளமான விழிப்புணர்வு தரும் ஆவணப்படங்களை எடுத்தவர், தற்போது பழங்கால இலக்கியங்கள், பாடல்கள், கல்வெட்டுகளில் திருநங்கைகளைப் பற்றிக் காணப்படும் சரித்திர ஆதாரங்களை ஆவணப்படக் கதையாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
சென்னையில் குடியிருக்க வீடு தேடித்தேடி அலுத்துப்போனவர், ஒரு வருடம் முன்னர் மதுரைக்கே குடிபெயர்ந்திருக்கிறார். அவருக்கான திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது, குரல் கம்முகிறது.
"நானும் பாபுவும், திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பின்னர், பிரிந்துவிட்டோம். பாபுவின் குடும்பம், அவரின் குழந்தைக்கு ஆசைப்பட்டது. திருநங்கை என்பதால் என்னால் குழந்தை பெற்றுத்தர முடியாது என்று கூறிவிட்டனர்.
அதிலிருந்து மீண்டு வந்து இதோ உங்கள் முன் நிற்கிறேன்!" என்பவரின் முகத்தில் நம்பிக்கையின் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.
© தி இந்து
தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7443543.ece 

No comments:

Post a Comment