Monday, October 17, 2016

ஓவியங்களை விற்று திருநங்கைகளை படிக்கவைக்கிறேன் - திருநங்கை கல்கி

 ஓவியங்களை விற்று திருநங்கைகளை படிக்கவைக்கிறேன் - திருநங்கை கல்கி

ன்று நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கல்வியை இழந்து நல்லதொரு வாழ்க்கையை இழந்து தவிப்புடன் உண்மையான அன்புக்காகவும், மரியாதையான வாழ்க்கைக்காவும் ஏங்குகிறார்கள்.
கடந்த பத்துவருடங்களாக திருநங்கைகளின் ஓலக்குரலை என் எழுத்திலும், கவிதையிலும், திரைப்படத்திலும், ஓவியங்களிலும் ஒலிக்கிறேன்.
ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் மாற்றுப்பாலினர் ஒருசிலர் மட்டுமே கல்விகற்பதை காண்கிறேன். மற்றவர்களெல்லாம் தெருவில் அன்றாட தேவைகளுக்காக இருக்கிறார்கள். சமுதாயத்தின் எத்தனை பெரிய அவலம் இது?
கல்வி மறுக்கப்படும்போது நல்லதொரு சிறப்பான எதிர்காலம் மறுக்கப்படுகிறது.  வீட்டைவிட்டு துரத்தப்படும் அல்லது வெளியேறும் திருநங்கைகளும், திருநம்பிகளும் அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளுக்காகவே போராடும் போராட்ட வாழ்க்கையில் கல்வி புறந்தள்ளப்படுகிறது.  அந்தக்கல்வியை திருநங்கைகளுக்கு மீண்டும் வழங்க நிதிஆதாரங்கள் தேவை. அரசாங்கம் செய்யும் என்றெல்லாம் காத்திருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 
கடவுள் என்னை திருநங்கையாக படைத்து எனக்கு ஏராளமான திறன்களையும் வரங்களாக வழங்கியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
 எனது ஓவியத்திறனை முழுவதுமாக பயன்படுத்த தொடங்கியுள்ளேன். அது எனக்கு ஒரு தெய்வீக, திவ்ய பயணமாக அனுபவமாக இருக்கிறது.  இன்று எனது ஓவியங்களை விற்று திருநங்கைகளுக்கு கல்வி வழங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதில் வெ
ஓவியப்பணியில் கல்கி
ற்றியும் பெற்று வருகிறேன். 

வரும் நவம்பரில் ஒரு அற்புத மாலைப்பொழுதில் எனது ஓவியங்கள் விற்ற தொகையை கல்வி கற்க விரும்பிய நான் தேர்ந்தெடுத்த என் திருநங்கை சகோதரிகளுக்கு வழங்குவேன்.
நான் ஒரு திருநங்கை என்பதில் எள்ளளவும் எனக்கு குறையில்லை, கவலையுமில்லை. பெற்றவர்களின் அரவணைப்புப்பெறுவது திருநங்கைகளுக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.  அதிலும் அவர்களை பெருமைப்படுத்தும் அளவுக்கு நம் செயல்களையும் வாழ்க்கையையும் உயர்த்தவேண்டும். 
'புறக்கணிப்பு' என்ற கல்கியின் ஓவியம்
என்னைப்போன்றோருக்கு உதவும் கலைத்திறமையுடன் என்னை படைத்திருக்கிறார் என்பதே பெரிய வரம். கல்வியே பெரும் சொத்து, மூலதனம், வாழ்க்கையை மாற்றும் மந்திரச்சாவி. அந்தக்கல்வியை வழங்கும் எனது பணிகளை தொடருவேன்.
எனது ஓவியங்கள் விற்பனைக்குள்ள இணையதளம் காண கிளிக் செய்யுங்கள் www.fueladream.com/home/campaign/278.
எனது வலைத்தளம் காண www.kalkisubramaniam.com

Monday, February 1, 2016

திருநர்களுக்கான கோரிக்கைகள் - பானு

[01/02 9:38 pm] ‪+91 90470 92550‬: Sorry sir. Actually the pictures are meant to send to my friend's mobile for  drawing and printing .  He needed some good photos to make calendars.
Thanks for taking interest in me. I'm a non believer. I apologize if by any means I offended you by posting those pictures. 👍🏾
[01/02 11:49 pm] Oviya: திருநர்களுக்கான_கோரிக்கைகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் கீழ்காணும் கோரிக்கைகளை எந்த கட்சி ஆதரிக்கிறதோ???எந்த கட்சி கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்களோ?? அவர்களுக்குதான் எங்களது ஆதரவு..


1.மூன்றாம் பாலினம் என்று எங்களை அடையாள அட்டைகளில் குறிப்பதைத் தவிர்த்து (அல்லது ஒன்றாம்,இரண்டாம் பாலினம் யார் என்ற விளக்கத்தையாவது தரவேண்டும் )திருநர்கள் தாங்கள் விரும்பும் பாலின அடையாளத்துடன் வாழ வழி செய்யவேண்டும்.

2.சாதிச்சான்றிதழ்களைப் போல,மாற்றுத் திறனாளிகளுக்குத் தரும் மருத்துவச்சான்றிதழைப்போல பாலின அடையாளத்தால் சிறுவயது முதல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் எங்களுக்கு 'பாலின மாற்றுத்திறனாளிகள் '(Genderly challenged)எனும் மருத்துவச் சான்றிதழ்,அரசால் அனுமதிக்கப்பட்ட மருத்துவரால் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இச்சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு திருநர்களுக்கு வேலை மற்றும் உயர்கல்வியில் 1% இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட வேண்டும் .இந்த இடஒதுக்கீடு சாதியப் படிநிலையை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.

3.அனைத்துக் கல்விச் சான்றிதழ்களிலும் ,தமது புதிய பெயர் மற்றும் விரும்பிய பாலினத்தை மாற்றக்கூடிய வகையில் ஆவன செய்யவேண்டும்.

4.68ஆண்டுகளாக திருநர்களுக்கு மறுக்கப்பட்ட சமூக,பொருளாதார உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக மாநிலம்தோறும் குறைந்தபட்சம் 100திருநர்களுக்கு அவரவர் தகுதிகேற்ப அரசுக் காலிப்பணியிடங்களில் உடனடியாக நேரடிப் பணிநியமனம் செய்ய வேண்டும்.

5.அனைத்து பள்ளிகளும் பாலினம் உறுதிசெய்யப்படாத குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலைத்தருவதாக இருக்க வேண்டும்.அதற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையில் பாலினம் உறுதிசெய்யப்படாத குழந்தைகளின் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

6.பாலினம் உறுதி செய்யப்படாத குழந்தைகளை அடையாளம் கண்டு பள்ளி நிர்வாகம் அக்குழந்தைக்கும் அக்குழந்தையின் பெற்றோருக்கும் மருத்துவ அலோசனை வழங்க ஆவன செய்ய வேண்டும்.

7.பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய திருநர்கள்  தமது தற்போதைய பெயர் மற்றும் பாலின அடையாளத்துடன் தொடர்ந்து படிக்க ஆவண செய்ய வேண்டும்.


8.வேலை மற்றும் மேற்படிப்புகளில் திருநர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட வேண்டும்.

9.பெற்றோர்களின் ஆதரவின்றி மேற்படிப்பைத் தொடரும் திருநர்களுக்கு இலவசக்கல்வியும் ,மாதந்தோறும் ரூ5000 ஊக்கத்தொகையும் வழங்கவேண்டும்.

10.எட்டாம் வகுப்பு முதல் அனைத்து பாடத்திட்டத்திலும் ,மொழி,அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் திருநர்கள் குறித்து தெளிவான பாடங்கள் இருக்க வேண்டும்.


11.திருநர்களுக்கு எதிராக  பணியிடங்களில் நிகழ்த்தப்படும் பாகுபாடு/புறக்கணிப்பு/வன்முறைகளை தவிர்க்கும் முறையான பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

12.பால்மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் திருநர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க பட வேண்டும் .


13.பள்ளி,கல்லூரி,பணியிடங்களில் தனிநபர் பயன்பாட்டு கழிவறை இருக்க வேண்டும் .


14.அனைத்து திருநர்களுக்கும் நகரங்களுக்கு உள்ளேயே இலவச வீடு அமைத்து தர வேண்டும்.


15.திருநர்களின் பிரச்சனையை மாநிலங்களவையிலும்,மக்களவையிலும் எடுத்துரைக்க ஒரு இருக்கை ஒதுக்கப் படவேண்டும்.

16.அரசியலில் திருநர்கள் பங்குகொள்ளும் வகையில்  (recerved area) பதிவு செய்யப்படும் தொகுதியை போல் அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படவேண்டும் அத்தொகுதியில் திருநர் வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் .



கோரிக்கை பரிந்துரையாளர்கள்

கிரேஸ் பானு
லிவிங் ஸ்மைல் வித்யா
ஏஞ்சல் கிளாடி

Tuesday, December 8, 2015

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி தமிழகத்தில் நியமனம்! ---- .சின்னதுரை

http://siragu.com/?p=18940



சா.சின்னதுரை

prithika_yashiniசேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாசினி ஓர் திருநங்கை. பி.சி.ஏ பட்டதாரி. தனது இருபதாவது வயதில் பெண்ணாக மாறினார். வீட்டை விட்டும் வெளியேறினார். தன் வாழ்க்கை திசை மாறியதில் தளர்ந்துவிடாமல் போராட ஆரம்பித்திருக்கிறார் பிரித்திகா. விடுதிக் காப்பாளர், தொண்டு நிறுவன ஊழியர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர் என தொடர்ந்த பணிகளுக்கிடையில் தமிழினப் படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து செய்தார்.
தன் தளராத முயற்சியினால் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தல் முதல் நியமன ஆணை பெற்றது வரை ஒவ்வொரு கட்டமாக போராடி தடைகளைக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற வரலாற்றையும் படைத்திருக்கிறார். அவர் கடந்து வந்த கடினமான பாதைகளைக் காணலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா யாஷினி. காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை பிரித்திகா தான். ஆனால் பிரித்திகாவின் விண்ணப்பத்தை சீருடை பணியாளர் தேர்வாணையம் நிராகரித்தது. காரணம் அவரது கல்விச் சான்றிதழ்களில் ஆண் பெயர் இருந்தது. பின்னர் அவர் தனது பெயரை சட்டப்படி சான்றிதழ்களில் மாற்றினார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.
muthal thirunangalai kaavalமனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. ஆகஸ்ட் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற அந்த தேர்வுக்கான அழைப்பு, 2 ஆம் தேதி இரவுதான் பிரித்திகாவுக்கு வந்தது. முன் பயிற்சிகளின்றி அந்தத் தேர்வில் பிரத்திகா கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்தத் தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிரித்திகா யாசினி குறித்த வழக்கு நவம்பர் 5-ம் தேதி, இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தேசிய சட்டப்பணி ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசுப் பணிகளில் திருநங்கைகளை 3-வது இனம் என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று 2014-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், உதவி ஆய்வாளர் பதவிக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 8-ந் தேதிதான் வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை, உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் அமல்படுத்தி இருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 3-ம் நபர் என்ற பிரிவை உருவாக்கியிருந்தால், அந்தப் பிரிவினருக்குரிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு ஒரு பிரிவு உருவாக்கப்படாததால், மனுதாரர் தன்னுடைய உரிமையைப் பெற நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இப்போது மனுதாரர் தகுதியை எப்படி நிர்ணயம் செய்து, அடுத்தகட்ட தேர்வு பணியை மேற்கொள்ளலாம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 1.11 நொடிகள் காலதாமதமாக ஓடிவந்தது, உதவி ஆய்வாளர் பதவி கிடைப்பதற்கு இடையூறாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்தப் பதவிக்கான தேர்வில் அவர் பாதி தூரம் கடந்துவிட்டார். இப்போது அவரை தடுத்து நிறுத்த விரும்பவில்லை.
உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் மனுதாரரைத் தவிர, திருநங்கைகள் வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை. அடுத்த முறை காவல்துறையில் உள்ள பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, மூன்றாம் நபர் என்ற ஒரு பிரிவை திருநங்கைகளுக்காக ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிடுகிறோம்.
தற்போது, உதவி ஆய்வாளர் பதவியை பெறுவதற்கு மனுதாரர் தகுதியானவர். அவருக்கு அப்பதவியை வழங்கவேண்டும். உதவி ஆய்வாளராக பணியில் சேரும் மனுதாரர் பிரித்திகா யாசினி, பிற திருநங்கைகளுக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், இந்தப் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வார் என்று நம்புகிறோம்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு மூலம், தமிழக காவல்துறை வரலாற்றில் உதவி ஆய்வாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெயரை பிரித்திகா யாசினி பெற்றுள்ளார். ”இந்த வெற்றியை திருநங்கை சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்” என்று பிரித்திகா யாசினி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 7, 2015 இதழ்

தமிழ் வார இதழ்

Tuesday, November 24, 2015

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சமத்துவத்தைக் கோரும் பிரித்திகாவின் வெற்றி

—இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம்

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
காலந்தோறும் அனைத்திலும் அனைவருக்கும் சமத்துவம் வேண்டி  இந்த சமுகம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றது. மனிதன் தோற்றுவித்த ஒடுக்குமுறைகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி மிகவும் கடை நிலையில் நிற்பவர்கள் பெண்களே. ஆனால் பாலின சமத்துவத்தை பொருத்தவரை ஒட்டுமொத்த சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தங்கள் இருத்தலுக்காக உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களே.
தமிழ்ச் சமுகத்தில் நூற்றாண்டு காலமாக  நடைபெறும் சமுக நீதிக்கான போராட்டம்  ஒரு பக்கம் தொடர்ந்து  சவால்களை சந்தித்துக் கொண்டிருந்தாலும்  மறுபக்கம் அவ்வப்பொழுது நம்பிக்கை ஊட்டும் சில வெற்றிகளையும் அடைகின்றது. அப்படியான வெற்றி தான் அண்மையில் மெட்ராசு உயர்நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பு.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டியை சேர்ந்த திருநங்கை  பிரித்திகா யாசினி காவல்துறை துணை ஆய்வாளராக சேரத் தகுதியானவர், அவருக்கு அப்பதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதே அந்தத் தீர்ப்பு.
பிரித்திகா
பிரித்திகா
இந்த உத்தரவிற்கு முன்னதாக பிரித்திகா தனது எழுத்து தேர்வுக்கு இசைவு பெற்றது, உடல் தகுதி  தேர்வை கடந்தது, பணிக்கான நேர்காணலில் பங்கெடுத்தது என அனைத்தையும் வழக்கு தொடுத்தே சாத்தியமாக்கியுள்ளார். காரணம், மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய தேர்வு விதிமுறைகள் எந்த தேர்வாணையத்திடமும் இதுவரை  இல்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  பிரிவு – 4 தேர்வு எழுத திருநங்கை சுவப்னாவும் நீதிமன்ற உதவியுடனயே வெற்றி பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..
தமிழகத்தில் அரசின் கணக்கெடுப்பின் படி மூன்றாம் பாலினத்தவர்கள் ஏறக்குறைய 30,000 மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர். இந்தியா முழுவதும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர்.
திருநங்கைகளின் பல்வேறு கட்ட உரிமைப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு “திருநங்கைகள் நலவாரியத்தை” நிறுவியது.  2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தாவர்களாக அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் இவர்களை சமுகத்தில் பின்தங்கியவர்களாகக் கருதி கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கவும் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், கடவுச்சீட்டு உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்ட முன்வரைவை முன்வைத்து  அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றினார்.
வாரியங்கள், சட்டங்கள், தீர்ப்புகள் என அறிவுப்புகள் வந்தாலும்  அரசுகள் இதுவரை இவர்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு  வழங்கவோ, தேர்வுகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கான விதிமுறைகளை வகுக்கவோ இன்னும் தொடங்கவில்லை. இதுவே பிரித்திகா, சுவப்னா போன்றவர்கள் நடைமுறை விதிகளை கடைபிடிக்கக் கூட நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவலநிலைக்கு வழிவகுத்துள்ளது. இவர்கள் காவல் நிலையத்திற்கு நீதி கோரி செல்லவே அச்சப்படும் சூழலே இன்றும் நிலவுகின்றது.
மூன்றாம் பாலினத்தவர்கள் என்றாலே பிச்சை எடுப்பவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், கேலிக்கானவர்கள் என சமுகத்தில் நிலவும்  பிற்போக்குத்தனமான கருத்தை மாற்றுவதற்கு  பிரித்திகா போன்றவர்களின் உழைப்பும் வெற்றிகளும் போராட்டக் கருவிகளாக அமைந்திருக்கின்றன.
அதேவேளை வெகு மக்கள் ஊடகங்களிலும் குறிப்பாக திரைப்படங்களிலும் மூன்றாம் பாலினத்தவர்களை கேலிக்கானவர்கள் என பரப்பும் சமூகப் பொறுப்பற்ற இழிநிலையுமே தொடர்கின்றது.  பொது வெளியில் பாலின அடிப்படையில் ஏற்றத்தாழ்வை வளர்ப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க  அரசு முன்வர வேண்டும்.
நீதிமன்றம் சென்று போராடி தங்களுக்கான உரிமைகளை ஒருசிலர்  வெல்வது நம்பிக்கை அளித்தாலும், அனைத்து மூன்றாம் பாலின மக்களும் பயன்பெரும் வகையில் தமிழக அரசு இவர்களுக்கான உரிமைகளை சட்டங்கள் மூலம் உடனடியாக நடைமுறைப் படுத்துவதே சமத்துவத்திற்கான நீண்ட பயணத்தின் உறுதியான முதல் படியாக அமையும்.

—இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம்

http://www.visai.in/2015/11/16/pritikas-victory/