Tuesday, November 24, 2015

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சமத்துவத்தைக் கோரும் பிரித்திகாவின் வெற்றி

—இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம்

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
காலந்தோறும் அனைத்திலும் அனைவருக்கும் சமத்துவம் வேண்டி  இந்த சமுகம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றது. மனிதன் தோற்றுவித்த ஒடுக்குமுறைகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி மிகவும் கடை நிலையில் நிற்பவர்கள் பெண்களே. ஆனால் பாலின சமத்துவத்தை பொருத்தவரை ஒட்டுமொத்த சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தங்கள் இருத்தலுக்காக உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களே.
தமிழ்ச் சமுகத்தில் நூற்றாண்டு காலமாக  நடைபெறும் சமுக நீதிக்கான போராட்டம்  ஒரு பக்கம் தொடர்ந்து  சவால்களை சந்தித்துக் கொண்டிருந்தாலும்  மறுபக்கம் அவ்வப்பொழுது நம்பிக்கை ஊட்டும் சில வெற்றிகளையும் அடைகின்றது. அப்படியான வெற்றி தான் அண்மையில் மெட்ராசு உயர்நீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பு.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டியை சேர்ந்த திருநங்கை  பிரித்திகா யாசினி காவல்துறை துணை ஆய்வாளராக சேரத் தகுதியானவர், அவருக்கு அப்பதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதே அந்தத் தீர்ப்பு.
பிரித்திகா
பிரித்திகா
இந்த உத்தரவிற்கு முன்னதாக பிரித்திகா தனது எழுத்து தேர்வுக்கு இசைவு பெற்றது, உடல் தகுதி  தேர்வை கடந்தது, பணிக்கான நேர்காணலில் பங்கெடுத்தது என அனைத்தையும் வழக்கு தொடுத்தே சாத்தியமாக்கியுள்ளார். காரணம், மூன்றாம் பாலினத்தவர்களை உள்ளடக்கிய தேர்வு விதிமுறைகள் எந்த தேர்வாணையத்திடமும் இதுவரை  இல்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  பிரிவு – 4 தேர்வு எழுத திருநங்கை சுவப்னாவும் நீதிமன்ற உதவியுடனயே வெற்றி பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..
தமிழகத்தில் அரசின் கணக்கெடுப்பின் படி மூன்றாம் பாலினத்தவர்கள் ஏறக்குறைய 30,000 மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர். இந்தியா முழுவதும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர்.
திருநங்கைகளின் பல்வேறு கட்ட உரிமைப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு “திருநங்கைகள் நலவாரியத்தை” நிறுவியது.  2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தாவர்களாக அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் இவர்களை சமுகத்தில் பின்தங்கியவர்களாகக் கருதி கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கவும் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், கடவுச்சீட்டு உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சட்ட முன்வரைவை முன்வைத்து  அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றினார்.
வாரியங்கள், சட்டங்கள், தீர்ப்புகள் என அறிவுப்புகள் வந்தாலும்  அரசுகள் இதுவரை இவர்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு  வழங்கவோ, தேர்வுகளில் மூன்றாம் பாலினதவர்களுக்கான விதிமுறைகளை வகுக்கவோ இன்னும் தொடங்கவில்லை. இதுவே பிரித்திகா, சுவப்னா போன்றவர்கள் நடைமுறை விதிகளை கடைபிடிக்கக் கூட நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவலநிலைக்கு வழிவகுத்துள்ளது. இவர்கள் காவல் நிலையத்திற்கு நீதி கோரி செல்லவே அச்சப்படும் சூழலே இன்றும் நிலவுகின்றது.
மூன்றாம் பாலினத்தவர்கள் என்றாலே பிச்சை எடுப்பவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், கேலிக்கானவர்கள் என சமுகத்தில் நிலவும்  பிற்போக்குத்தனமான கருத்தை மாற்றுவதற்கு  பிரித்திகா போன்றவர்களின் உழைப்பும் வெற்றிகளும் போராட்டக் கருவிகளாக அமைந்திருக்கின்றன.
அதேவேளை வெகு மக்கள் ஊடகங்களிலும் குறிப்பாக திரைப்படங்களிலும் மூன்றாம் பாலினத்தவர்களை கேலிக்கானவர்கள் என பரப்பும் சமூகப் பொறுப்பற்ற இழிநிலையுமே தொடர்கின்றது.  பொது வெளியில் பாலின அடிப்படையில் ஏற்றத்தாழ்வை வளர்ப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க  அரசு முன்வர வேண்டும்.
நீதிமன்றம் சென்று போராடி தங்களுக்கான உரிமைகளை ஒருசிலர்  வெல்வது நம்பிக்கை அளித்தாலும், அனைத்து மூன்றாம் பாலின மக்களும் பயன்பெரும் வகையில் தமிழக அரசு இவர்களுக்கான உரிமைகளை சட்டங்கள் மூலம் உடனடியாக நடைமுறைப் படுத்துவதே சமத்துவத்திற்கான நீண்ட பயணத்தின் உறுதியான முதல் படியாக அமையும்.

—இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம்

http://www.visai.in/2015/11/16/pritikas-victory/

Monday, November 16, 2015

பரதநாட்டிய நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜ் அவர்களின் நடனம் ஜப்பான் நாட்டில்


               
                                                                                                               

    "கொஞ்சும் தமிழில் தஞ்சை நடனம்"
                                                                             
                       உலகப் புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜ் அவர்களின் நடனம் முதன்முறையாக
ஜப்பான் நாட்டில் ஒசாகா மாநிலத்தில் நிகழ உள்ளது.புகழ்பெற்ற  Osaka Museum of Ethnology  யின் சிறப்பு அழைப்பினில் 'கொஞ்சும் தமிழில் தஞ்சை நடனம்' எனும் தலைப்பினில் நர்த்தகி தனது நடன நிகழ்ச்சியினை வழங்க உள்ளார்.இதில் தன் தாய்நாடான இந்தியாவின் கலாச்சாரத்தையும்,தன்  தாய்மொழியான தமிழின் பண்பாட்டுச் சிறப்பினையும் விவரிக்கும் வகையில் தனது நடன நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளார்.அவரது இசைக்குழுவினர் என ஆறு கலைஞர்களும் உடன் செல்கின்றனர்.

நவம்பர் 22 ,2015 திங்கட்கிழமை மதியம் நடன நிகழ்ச்சியும்,23 நவம்பர் நண்பகல் பயிற்சிப்பட்டறையும் இடம்பெற உள்ளது.
அழைப்பிதழையும், நர்த்தகி பற்றிய மேலதிக விபரங்களையும் இங்கு இணைத்துள்ளோம்.
     
                                                                                    "எங்களது மகத்தான வெற்றிக்கு துணை நிற்கும் உங்கள் அனைவரிடமும்
                                                                                     இதனை பகிர்வதில் மகிழ்கின்றோம்."
என்றும் உங்களுடன்,
வெள்ளியம்பலம் அறக்கட்டளை
நடனக் கலைக்கூட உறுப்பினர் மற்றும் மாணவியர்.

www.narthakinataraj.com

Wednesday, November 11, 2015

ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல் -- பிரபஞ்சன்




தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.
வரலாற்றுக் காலத்தில் இருந்து சாதி, மத மற்றும் பார்ப்பனியக் கட்டமைப்புகளால் ஒடுக்கப்பட்ட தலித்துகள் பெண்கள், சிறுபான்மையினர் மேலெழும் காலம் இது. அவர்கள் பற்றி அவர்களாலும் பிற சமூகத்தாலும் எடுக்கப்படும் கதையாடல்கள் மேலெழத் தொடங்கிவிட்டன. விளிம்பு நிலை மக்களினும் புறத்ததாக, வெளிச்சமே பரவாத இருட்டில் வைக்கப்பட்டவர்களாக அரவாணிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆகக்கடைசிப் படிகளில் வைக்கப்பட்டவர்கள் இவர்களே ஆவர். ஒரு சமூகமே மெலெழுந்து அவர்களை, மிகுந்த அருவருப்பு கொண்டு விலக்கியும், இழிவு படுத்தியும், கேலி கிண்டலுக்கும் வசை மொழிக்கும் உள்ளாக்கியும் தனித்து வைத்திருக்கும் ஒதுக்கலில் இருந்து மீறிச் சில ஒற்றைக் குரல்கள் வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. மிகுந்த ஆளுமையும் வன்மையும் கொண்ட குரலாகப் பிரியா பாபு வெளிப்பட்டிருக்கிறார். இயக்க பூர்வமாகவும், செயல்பாட்டு அளவிலும் ஏற்கனவே அரவாணிகளின் மனசாட்சியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் வெகுசிலரில் குறிப்பிடத்தகுந்த பிரியாபாபு இப்போது நாவலுடன் சமூகத்தின் மனசாட்சியுடன் ஓர் உரையாடல் நிகழ்த்த வந்திருக்கிறார்.
ரமேஷ் என்கிற பதின்பருவச் (டீன்ஏஜ்) சிறுவன், எங்ஙனம் படிப்படியாகத் தான் பெண் என்பதை உணர்கிறான் என்பதிலிருந்து கதையைத் தொடங்குகிறார் ஆசிரியர். பார்வதி வெளியே சென்று திரும்புகிறபோது, வீட்டிலிருந்து ஒரு பெண் பாடும் சப்தம் கேட்கிறது. பெண் வீட்டில் இல்லாதபோது, எங்கிருந்து பெண்பாட்டு? அவள் ஜன்னல் வழி கவனிக்கிறாள். உள்ளே அவள் மகன் ரமேஷ், அம்மாவின் ஜாக்கெட்டையும் புடவையையும் அணிந்து, அழுத்தமான மேக்கப்போடு, கண்ணாடிமுன் நின்று பாடியும் ஆடியும் களிப்பதைக் கண்டு பார்வதி அதிர்ச்சியடைகிறாள். .  இது குடும்பத்துக்கு நேரும் அவமானம் என்று துவள்கிறாள். ரமேஷின் அண்ணனும் தம்பி 'இப்படி' இருப்பதை வெறுக்கிறான். வெறுப்புக்கும், தெரு, பள்ளியில் கேலிக்கும் இழிவுக்கும் உள்ளாகும் ரமேஷ், மூத்த அரவாணியான ஜானகியம்மாளிடம் அடைக்கலம் ஆகிறான். ஜானகி, அவனுக்குப் புத்தி சொல்லி அரவாணி வாழ்க்கையின் அவலத்தைச் சொல்லி எச்சரிக்கிறாள். பார்வதி, அரவாணிகள் சிலர் சைதைக் கடைத்தெருவில் பிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டு, தன் மகனுக்கும் அதுவே கதி என்று பதறுகிறாள். . . பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு அரவாணி, தன்முன் பிச்சை கேட்கும் ஒரு மூதாட்டிக்கு உதவுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள் பார்வதி. ஒரு ரயில் பயணத்தில் பார்வதி, அரவாணிகளுக்குப் பணி செய்கிற கண்மணி என்பவளைச் சந்திக்கிறாள். அவள் மூலம், பால்திரிபு அல்லது பால் மாற்றம் பற்றிய புரிந்துணர்வை அடைகிறாள். ரமேஷை அவளால்  புரிந்து கொள்ள முடிகிறது. ரமேஷ், தான் அவாவும் பெண்பாலைத் தேர்வு செய்கிறான். பாரதி என்ற புதிய பெயரை ஏற்கிறான். தன் அரவாணி சமூகத்துக்காகப் பணி செய்ய உறுதி கொள்கிறாள் பாரதி.
மூன்றாம் பாலின் முகம் நாவலின் நிகழ்ச்சி அடுக்குகள் இவை. மிகச்சரியான இடத்தில் தொடங்குகிறது கதை. பொதுவாகச் சிறுவர்கள், வளர்ச்சிப் போக்கில் அம்மா, சகோதரிகள் என்கிற வளையங்களில் இருந்து விடுபட்டு, பையன்கள், பையன்கள் சார்ந்த வெளிகளில் புழங்கி, தாங்கள் ஆண்கள் என்கிற உணர்வை எய்தி, சமூகம் அவர்களுக்கென்று ஏற்படுத்தித் தந்த பிரதேசங்களில் தங்களைப் பொறுத்திக் கொள்கிறார்கள். ஆண் இடம், ஆண் செய்கைகள் என்று எவையும் இல்லை. இவையெல்லாம் சமூகக் கருத்தியல்களின் விளைவுகள். சிறுவன் ஒருவன், தன் பதின்பருவத்தில் பெண் சார்ந்து, அம்மா, அக்கா, தங்கை மற்றும் அருகிலிருக்கும் பெண்கள் சார்ந்து, பெண்களுக்கென்று விதிக்கப்பட்டுள்ள வீட்டுப் பணிகளைச் செய்து, மனத்தளவில் தான் பெண், தனக்குள் ஓங்கி வளர்வது பெண் உணர்வே என்று  அறியத் தலைப்பட்டபோது அவன் பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். ஆணாக அறியப்படும் ஒருவன், தான் தன்னைப் பெண்ணாய் உணர்வதும், அதற்குத் தக நிலவும் ஆடை அணிகளை அணிவதும், அந்த மனிதனின் சுதந்திரம் என்பதைச் சமூகம் ஏற்க மறுக்கிறது. ஆண் என்பவன், எங்ஙனம் பெண் ஆகலாம் என்பதே சமூகத்தின் கேள்வியாகிறது. ஆண், பெண்ணாவது என்பது, ஆணின் அதிகாரத்தை எதிர்க்கும் சவாலாக ஆண் சமூகம் உணர்ந்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகிறது. அரசுகள், அவை கைக்கொள்ளும் அதிகாரங்கள் எல்லாம் ஆண்மையம் கொண்டவை. எனவே, அரவாணிகளின் இருப்பை, அவர்களின் புழங்குவெளியைச் சட்டங்களாலும் நெறி முறைகளின் பெயராலும் ஒடுக்குகிறவைகளாக அரசுகள் மாறுகின்றன. அரசு அதிகாரம் ஆகியவைகளின் குறுவடிவமாக குடும்பங்கள், தன் அரவாணிக் குழந்தையைத் தம் பகை வடிவாகக் கொள்கின்றன. அவமானச் சின்னமாகவும் கருதி அரவாணிக் குழந்தைகளைப் புறக்கணிக்கின்றன. கடும் சிறை, தாக்குதலால், ஒரு கட்டத்தில் அச்சிறுவன் வெளியேறி, தன் இனம் என்று அவன் உணரும் அரவாணிகள் குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறான். இதில் அவன் அடையும் சமூகப் பாதுகாப்பே மிக முக்கியம். அவன், தன்னைப் பெண்ணாக ஆக்கிக் கொள்கிறான். அவன் விருப்பம், ஆசை, வாழ்முறை அது என்று அதை ஏற்றுக் கொள்வதே அறிவுபூர்வமான சமூகத்தின் செயல்முறை. நம் சமூகம் மூடச் சமூகம். ஆகவே அர வாணிகள் இவ்வளவு இழிவுக்குள்ளாகிறார்கள்.
அரவாணிகளில் பலர் பள்ளி வகுப்புகளையும் முடிக்காதவர்கள். அந்தப் பதின் பருவத்திலேயே அவர்களின் அடையாளக் குழப்பம் தொடங்குவதன் காரணமாக அவர்கள் குடும்பங்களிலிருந்து வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். தொழில் அறிவும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. எனவே, வேறு வழி இன்றியே அவர்கள் பிச்சை ஏற்கவும், விபசாரம் செய்யவும் நேர்கிறது. இதில் அரவாணிகளின் தவறு எங்கிருக்கிறது? அந்த அரவாணிக் குழந்தையின் குழப்பம் தலைப்படும்போதே, அதைப் பரிந்து பேசி, அக்குழந்தையைப் புரிந்து கொள்ளும் கடமையை மேற்கொள்ளாத குடும்பங்களே/சமூகமே/அதிகாரக் கூடாரங்களே தவறு செய்தவர்கள்.
ஒரு அரவாணி உருவாவது என்பது பற்றிய விஞ்ஞானத் தகவல்கள் பல புதிர்களைக் கட்டவிழ்க்கின்றன. மகாராசன் தொகுத்த 'அரவாணிகள்' என்னும் மற்றும் ஒரு முக்கிய ஆவணமான நூலில் டாக்டர் ஷாலினி நமக்குப் புதிய பல தகவல்களைச் சொல்கிறார். இந்தப் பூலோகத்தில் பிறக்கும் எல்லா ஜீவராசியும் 'ஜனிக்கும்' அந்தக் கணத்தில் பெண் பாலாய்த்தான் ஜனிக்கிறது. அந்த உயிர்க்கரு பெண்ணாகவே இருக்கிறது. அந்தக் கருவின் உடம்பில் ஒற்றை Y குரோமோசோம் வீற்றிருந்தால், அது கரு உருவான ஆறாம் வாரத்தில் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார் மோனை உற்பத்தி செய்கிறது. அந்த டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் அந்தக் கருவின் உடம்பு முழுக்கப் பரவி எல்லா செல்களையும் 'ஆண்மைப்படுத்தி' விடுகிறது. ஆறு வாரம் வளர முலைகள், மூளை நரம்புகள், கர்ப்பப்பையாகப் பிறகு வளரப் போகும் முலேரியன் குழாய்கள் என்று முழுவதுமாய் பெண்பாலாய் இருந்த அந்த சிசு, டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் மெல்ல மெல்ல மாறுகிறது. அதன் இனப்பெருக்க உறுப்புகள் ஆண்மைப்படுத்தப்படுவதால் விரைப்புறுப்பு, விந்தகம் மாதிரியான புதுப்புது உறுப்புகள் உருவாகின்றன. அதே போல, சிசுவின் மூளை நரம்புகளும் மாற்றி அமைக்கப்படுவதால் 'ஆண்' என்கிற உடல் உருவம் மூளையில் பதிகிறது. இதனை 'பாடி இமேஜ்' என்கிறோம். நம் எல்லோரின் மூளையிலும் நமது ஒவ்வொரு புற உறுப்பிற்கான உருவகமும் பதிந்திருக்கிறது.
'நான் ஆம்பிளையாக்கும்' என்று மீசை முறுக்கும் சண்டியர்கள் எல்லோருமே முதல் ஆறு வாரங்கள் பெண்ணாக இருந்து, 'பெண்மயம்' கருணையினால் ஆண்களாகப் பிழைத்தவர்கள்தான் என்பதை அறியும்போது மகிழ்ச்சி தோன்றுகிறது. அதோடு, மரபணுக்கள் கர்ப்பப்பைக்குள் செய்த யுத்தமும் மூன்றாம் பால் தோன்றக் காரணமாகிறது என்பது விஞ்ஞானம். இதற்கு அப்பன்மார்களும் அண்ணன் மார்களும் குதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
தமிழ் இலக்கணங்களான தொல்காப்பியமும் நன்னூலும் அரவாணிகள் பற்றிப் பரிசீலிக்கின்றன. என்றாலும் அவர்களது மனோபாவம் பற்றிய ஆய்வாக அவை இல்லை. இன்னும் மேலாக, அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் அவை இல்லை. இந்த உலகம், மனிதர்களின் தொகுதியால் ஆனது என்பதையும், உலகத்தின் அடிப்படை அலகாகவும் மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவை ஒப்புகின்றன. அந்த வகையில் அவை முன்னேற்றகரமானவை என்றாலும், மக்கள், ஆண்கள், பெண்கள் என இருவகைத்தானவர் என்ற அளவுக்கு மட்டும் தான் இலக்கண ஆசிரியரின் பயணங்கள் நடந்திருக்கின்றன. 'உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே' என்கிறார் தொல்காப்பியர். அதாவது, 'மக்கள்' என்று சமூகம் சுட்டுகிற பொருள்களை உயர்திணை என்கிறார். மக்கள் என்று கருதப்படாத பிற பொருள்களை அஃறிணை என்கிறார். மண்ணின்மேல் உள்ள உயிர்ப் பொருள்களில் மக்கள் சிறந்தவர். ஆகவே அவர்கள் உயர்திணை. உரையாசிரியர்கள், மக்கள் பற்றிய ஆராய்ச்சியை மேலும் நீட்டித்தார்கள். 'மக்கள் என்றது மக்கள் எனும் உணர்வை' என்று ஆழப்பட்டார்கள். ஆனால் பால் திரிந்த மக்களிடம் வரும்போது இந்த ஆண்களின் ஆய்வுகள் இறுக்கம் அடைகின்றன. 'ஆண்மை திரிந்து பெண்மையை ஏற்கும் பெடியை உணர்த்துதற்கு, உயர்திணைக்குரிய ஈறுகளைச் (கடைசி எழுத்துகள்) சேர்த்துக்கொண்டு, உயர்திணையாகவே பாவியுங்கள் என்கிறார் தொல்காப்பியர். குறைந்தபட்சம், பெண்மையை விரும்புகிற மக்களை அஃறிணை என்று புறக்கணிக்கவில்லை தொல்காப்பியர். ஆனால் தொல்காப்பியருக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின்வந்த நன்னூல் ஆசிரியர், அரவாணிகள் மேல் கடுமை காட்டுகிறார்.
'பெண்போலப் பிறந்து, பெண் தன்மையை விட்டு ஆண்தன்மைகளை அவாவுகிறவர்களைப் பேடுகள் என்றழையுங்கள். அவர்களை ஆண் பாலாகவே அழைக்கலாம். எழுதலாம். அதுபோல, ஆண்போலப் பிறந்து, பெண்தன்மையை அவாவுகிறவர்களும் பேடுகளே ஆவார்கள். அவர்களைப் பெண்கள் (பெண்பால்) என அழையுங்கள். இவர்கள் பேடி என்றும் அறியப்பட்டார்கள். இவர்களை உயர்திணையாகவும், அஃறிணையாகவும் அழைக்கலாம். இது நன்னூல் இலக்கண ஆசிரியரின் திரண்ட கருத்து. நன்னூல் ஆசிரியர் ஒன்று-ஜனநாயக பூர்வமாகவும் இயங்குகிறார். இரண்டு -சமூக வழக்கையும் விமர்சனம் இன்றி ஏற்றுக் கொள்கிறார். ஜனநாயகம் என்றது, மக்கள் தாங்கள் எந்தப் பாலை அவாவுகிறார்களோ, அந்த விரும்பிய பாலாலேயே அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். இது நம் இலக்கண மரபில் மிகச் சிலாக்கியமானது. ஆனால், தன் காலத்து  (எட்டாம் நூற்றாண்டில்) சமூகம், அரவாணிகளுக்கு சமூக அந்தஸ்தை வழங்க மறுத்திருக்கிறது. ஆகவே பால் திரிந்தவர்களை அஃறிணை என்றும் அழைக்கலாம் என்கிறார். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத இழிவு, நன்னூல் ஆசிரியர் காலத்தில் ஏற்பட்டுவிட்டது. நம் காலத்துவரை, இந்த இழிவு நீடிக்கிறது.
காதல் வரலாறு-டயன் அக்கர் மென் (தமிழில்: ச.சரவணன்) எழுதிய உலகப் புகழ்பெற்ற புத்தகம். உலக இனங்கள் காதலை எப்படியெல்லாம் வண்ணம் பூசி, வாசனை தெளித்து வளர்த்து வந்திருக்கிறது என்பதையெல்லாம் மிகுந்த ஆராய்ச்சியோடு (ஆராய்ச்சியின் நெடியே இல்லாமல்) எழுதி இருக்கிறார். கிரேக்கர்கள் வளர்த்த காதல் பற்றி நிறைய நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை எழுதி இருக்கிறார். (நமக்கு ருஷ்டி மேல் வழக்கு போடத்தானே தெரியும்?) கிரேக்கம், வாக்கெடுப்பு எடுத்து ஜனநாயகத்தை ஓம்பிய நாடு என்பதை நாம் அறிவோம். வெறும் முப்பது ஆயிரம் மக்களைக் கொண்ட ஏதென்ஸ், ஒரு தனி உரிமை பெற்ற ராஜ்யம். இந்தியா போலவே, அதுவும் ஆண்மையம் கொண்ட நாடுதான். பெண்கள், வீட்டுப் பின் கட்டுகளில், இருள்படிந்த சமையல் அறைகளில் தான் இருந்தார்கள். பாட்டுக் கலையும் நாட்டியமும் விரும்பப்பட்டன. அவை மனைவிமார்களால் கற்று வெளிப் படுத்தப்படாதவரை. விலைமகளிர் மந்தைகளாக அலைந்தார்கள். சாக்ரட்டீஸ்கள் சாதாரணமாகத் தேநீர்க்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தியபடி தத்துவ உரையாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பிளேட்டோக்கள்  விறகு வெட்டிக் கொண்டே மாணவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம்தான். ஏதேன்ஸ் தெருக்களில்  சாக்கடைகளே  இல்லை. அதற்குப் பதிலாக அறிவுத் தேடலே வழிந்து ஓடின என்பதுபோன்ற சித்திரங்களே நமக்குக் காட்டப்பட்டிருந்தன. அங்கே, கிறிஸ்து பிறக்கும் முன்னர் ஆண் பெண் காதல்களைக் காட்டிலும் ஆண் ஆண் காதல்கள் அங்கீகரிக்கப்பட்ட பெருவழக்காக இருந்தன என்பதைப் பற்றிய எந்தப் பதிவும் பொதுவாக வருவதில்லை. டயன் அக்கர்ரெமன் அவ்வழக்கங்களைப் பதிவு செய்கிறார்.
கிரேக்க இலக்கியங்கள் இந்த வகை உறவுகளைப் போற்றி இருக்கின்றன. உடற்பயிற்சிக் கூடமே, கிரேக்க இளைஞர்கள் காதலர்களைத் தேர்வு செய்யும் இடமாக இருந்துள்ளன. உடற் பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் நிர்வாணமாகவே பயிற்சி செய்தனர். ஆரோக்கியமான உடற்கட்டினை அழகு என்று அவர்கள் நம்பினார்கள். தங்கள் காதலர்களை அங்கே அவர்கள் தேர்வு கொண்டார்கள். அரிஸ் டோபேன்சுடைய 'மேகங்கள்' என்ற படைப்பில் ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறும் பகுதி இது:
'எப்படி அடக்கத்துடன் இருப்பது, விதைகளைக் காட்டாது அமர்வது, எழுந்திருக்கும்போது அவனது புட்டங்களினால் ஏற்பட்ட பதிவு தெரியாதவாறு மண்ணைச் சரி செய்தல், மேலும் எவ்வாறு வலுவாக இருப்பது. . . அழகு வலியுறுத்தப்பட்டது. ஒரு அழகிய இளைஞர் நல்ல இளைஞனாகக் கருதப்பட்டான். கல்வி என்பது ஆணின் காதலுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்ற இந்தக் கருத்து ஸ்பார்ட்டாவினுடைய கருத்தை ஒட்டியிருந்த ஏதென்சின் கருத்தியல் கோட்பாடாயிருந்தது. அவனைவிட மூத்த ஒரு ஆணைக் காதலிக்கும் இளைஞன் அவரைப் பின்பற்ற முயல்வான். அதுதான் அவன் கல்விப் பயிற்சியின் அனுபவ மையம். மூத்த அந்த ஆணும் இளைஞனின் அழகின் மேல் உள்ள விருப்பத்தினால் அவனை மேம்படுத்த தான் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வார்’
ஒரு சிறுவனின் கல்வியில் இவ்வகையான ஓரினச் சேர்க்கை ஒரு பண்பட்ட நிலை என்பது ஒரு கோட்பாடாகவே கிரேக்கப் பகுதியில் இருந்தது என்பது அக்கர்மென் குறிப்பிடும் வரலாற்றுச் செய்தி. ஆசிரியர், பழைய கிரேக்கத்தை வழிமொழிகிறார் என்பதல்ல இதன் பொருள். இன்றைய காதல் மற்றும் காமச் செயல்பாடுகள், அவைகளின் மேல் இன்றைய சமூகம் விதித்திருக்கும் அற மற்றும் சட்டக் கோட்பாடுகள் என்பவை இன்றைய அதிகாரமையங்களின் கருதுகோள்களே ஆகும். மனிதர்களின் காதல் உள்ளிட்ட அனைத்து வாழ்முறைகளும் இன்று அதிகாரம் கட்டமைக்கும் ‘பவித்திர’மாகவே எல்லாக்காலத்தும் இருந்ததாக  இல்லை,  மற்றும்  பல்வேறு  கட்டங்களைக் கடந்தே மனிதகுலம் இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது என்பதைச் சொல்வதே வரலாற்றாசிரியர்கள் நோக்கமாக இருந்தது. இது குற்றம் இது குற்றமற்றது என்கிற இருநிலைகளை, அதன் வழி குற்றமனோபாவங்களை அவ்வக் காலத்துச் சமூகமே கட்டமைக்கிறதே அன்றி, அச் செயல்கள் அல்ல.
தனி மனிதர்களின் படுக்கை  அறைக்குள் நுழைந்து சட்ட நகல்களை நீட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன அதிகாரச் சக்திகள். இது மனித உரிமை மீறல் என்பதையே அறிவுவர்க்கம் காலா காலமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.
அரிஸ்டோ பேன்சின் ‘பறவைகள்’ கவிதை. ஒரு முதியவன். இன்னொருவனுக்குச் சொல்வது போல அமைந்தது.
‘நல்லது. துணிச்சல் மிக்கவனே! நடைமுறைக் காரியங்கள் நன்றாகவே உள்ளன. உடற்பயிற்சிக் கழகக் குளியல் அறையிலிருந்து புத்துணர்ச்சியுடன் வெளிவரும் என் மகனை நீ சந்தித்த போதும், நீ அவனை முத்தமிடவில்லை. நீ அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நீ அவனை அணைத்துக் கொள்ளவும் இல்லை. நீ அவனது விதைகளை உணர்ந்து பார்க்கவும் இல்லை. மேலும் நீ எங்களுடைய நண்பன் என்று கருதப்படுகிறாய்’
கிரேக்கப் பெண்கள் சாப்போவை நேசிப்பவர்களாக இருந்துள்ளார்கள். பெண் ஒடுக்குமுறையில் இந்தியாவுக்குச் சற்றும் குறையாதது கிரேக்கம். அங்கேயும் பல மநுக்களும் மநு புத்திரர்களும் சாக்ரட்டீசின் அங்கியைப் போர்த்திக் கொண்டு பிரசங்கம் செய்திருக்கிறார்கள். காலம் காலமாகப் பெண்களின் பிறப்புறுப்புகளுக்கு ஆக கனமான பூட்டுகளைப் போட்டு, சாவியைத் தம் இடுப்பில் செருகிக் கொண்டு அலைந்திருக்கிறார்கள் கிரேக்க ஆண்கள். உலக ஆண்களில் முக்கால் வாசிப்பேர்கள், தங்களின் மனைவிமார்களின் அந்தரங்கங்களில் அன்னிய ஆண்கள் பிரவேசித்து விடக் கூடாதே என்ற கவலையிலேயே வாழ்ந்து சாகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் 'கள்ளக்காதல்' என்ற வினோதமான வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். காதலில் கள்ளம் ஏது? காதலில் கறுப்பு வெள்ளை இருக்கிறதா என்ன? இந்திய எய்ட்சின் எண்ணிக்கை உலக மக்களைத் திடுக்கிடச் செய்திருக்கிறது என்பதை எவ்வளவு சுலபமாக மறந்து கண்ணகியைப் பற்றிக் கவலைப்படுகிறோம் நாம்?
பெண்கள் தன்பால் புணர்ச்சி குறித்து ஒரு மேற்கோளை ரியேடான் னாஹிலிருந்து எடுத்துக் காட்டுகிறார் அக்கர்மென்.
'சுய இன்பம், கிரேக்கர்களுக்கு ஒழுங்கீனமான செயலாக இல்லாமல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக இருந்தது. ஆசியா மைனரில் உள்ள மிலெட்டஸ் என்ற செல்வச் செழிப்பான நெய்தல் நில நகரம், கிரேக்கர்களால் 'ஒலிபாஸ்' என்று அழைக்கப்பட்ட 'டில்டோ' சாதனங்களைத் தயாரிப்பதிலும் ஏற்றுமதி செய்வதிலும் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கியது. இது ஆண் குறியின் மாற்று உரு அமைப்பு. கிரேக்கர் காலத்தில் மரத்தினாலோ, தோல் அட்டைகளாலோ செய்யப்பட்டு, உபயோகிப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய் கொண்டு வழுவழுப்பாக்கப்பட வேண்டியதாக இருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன இலக்கிய நாடகத்தில் ஒரு காட்சி. மெட்ரோ மற்றும் கோரிட்டோ எனும் இரண்டு பெண்கள் பேசிக் கொள்ளும் காட்சி. மெட்ரோ, கோரிட்டாவிடம் டில்டோவைக் கடனாகக் கேட்கிறாள். அவள் அதை வேறு ஒருத்திக்குக் கடன் கொடுத்திருக்கிறாள். கடன் வாங்கியவள், இன்னொருத்திக்குக் கொடுத்திருக்கிறாள். . .!
உலகம், இன்று வந்து சேர்ந்திருக்கும் இந்தப் புள்ளிக்கு வர நடந்து கடந்து வந்த காலம் பல யுகங்கள் என்பதையும், இன்று விபரீதம், வினோதம் என்றெல்லாம் கணிக்கத்தக்க பல விஷயங்கள் சாதாரண நடை முறைகள் என்பதையும், ஒழுக்கத் தராசைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் ஒழுக்கப் போலீஸ்காரர்கள் உணரவேண்டும். பெண்கள் கையில் துடைப்பத்தையும், செருப்பையும் கொடுத்துச் சக பெண்ணை எதிர்க்கத் தூண்டும் நாசகார சக்திகள் இதை உணர வேண்டும்.
பிரியாபாபுவின் வாழ்க்கையை அவரைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளில் இருந்தும், அவர் விழிப்புணர்வு இதழுக்குக் கொடுத்துள்ள (இப்பேட்டி 'அரவாணிகள்' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. பேட்டி கண்டவர்கள் இராஜீவ் காந்தி, ஆனந்தராஜ்) பேட்டியிலிருந்தும் தொகுத்து அறிந்து கொள்வது நல்லது. எந்தச் சூழலில் இருந்து, எப்படிப்பட்ட மனிதர் மூன்றாம் பாலின் முகம் நாவலைத் தந்திருக்கிறார் என்பதை வாசகர் அறிய வேண்டும்.
இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்த பிரியாவுக்குப் பூர்வீகம் முசிறி கிராமம். 1974-இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் அவரைத் தமிழ் மண்ணில் கொண்டு வந்து போட்டது. 12 வகுப்புவரை படித்தவர். பள்ளிப் பருவத்திலேயே தன் பால் வேறு பாட்டுப் பிரச்சினையால் சகல துன்பங்களுக்கும் ஆளானார். 1998இல் அறுவைச் சிகிச்சைமூலம் பெண்ணாக அடையாளம் கண்டார். அரவாணிகளுக்கான ஓட்டுரிமை வழக்கில் முக்கிய பங்காற்றியவர். 2007-இல் இவரது 'அரவாணிகள் சமூக வரைவியல்' நூலை வெளியிட்டார். கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் காவல்துறையினருக்கும் (இவர்களிடம் பேசுவதுதான் மிக முக்கியம்.  அரவாணிகளின் முதல் விரோதிகள் காவல்துறையே என்பதே அரவாணிகளின் கருத்து) அரவாணிகள் பற்றிய வகுப்புகள் நடத்துகிறார். பிரியாபாபு, தன்னைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்கள் இரண்டு பேர் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்கிறார். (தெய்வங்களின் வரிசையில் மூன்றாவதாக வருபவர்கள். இவர்களுக்காகத்தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது) வெளிநாடுகளில் வாழும் அரவாணிகள் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை பிரியா பாபு நினைவுகூர்கிறார். பாலின மாற்று அறுவைச் சிகிச்சை சட்டபூர்வமாக்கப்பட்டு, பெண்ணாக மாறுவது எளிதானதாக டென்மார்க், ஹாலந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவுகிறது என்று கூறும் அவர், நார்வே நாடு அரவாணிகளின் சொர்க்கபூமி என்கிறார். அரவாணிகளின் இருத்தலுக்காகவும் மற்றவர்கள் அனுபவிக்கும் சகல மனித உரிமைகளையும் அரவாணிகளும் பெற வேண்டும் என்பதற்காக இயக்கபூர்வமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொதுப்பரப்பில் அரவாணிகள் மேல் திணிக்கப்பட்டிருக்கும் அவமானங்கள் கலைய ஊடகங்கள் மூலம், ஆஷாபாரதியுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த நாவலையும் அந்த எண்ணத்தின் நீட்சியாகவே அவர் காண்கிறார்.
அரவாணிகள், அரவாணிகளாக வாழ்வது என்பது அவர்கள் தேர்வு. அது அவர்களின் சுதந்திரம். இதில் ஏனைச் சமூகம் செய்யக்கூடியது, அவர்களுக்கு இசைவாகச் சூழலை உருவாக்கித் தருவதே ஆகும். சூழல், முன்பைவிடவும் மேம்பட்டதாக மாறிக்கொண்டிருக்கிறது. அரவாணிகள் சார்பாக ஓர் உரையாடல் தொடங்கி இருக்கிறது. தமிழக அரசு சில சாதகமான ஏற்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற பெரும்பாலும் சட்டபூர்வமற்ற தேசத்தில், சட்டபூர்வமாகவே மக்கள் மட்டும் வாழ வேண்டியிருக்கிறது. எனவே, அரவாணிகளுக்கு சட்டபூர்வமான பாலின அடையாளம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். அப்படியே கருதி, வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு போன்றவற்றில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு அவர்களுக்கு மிகவும் அவசியம் ஆகிறது. குடும்பம் என்கிற ஒரு ஒடுக்குமுறை அமைப்பில், பெற்றோர்களால் அவர்களின் கல்வி அழிக்கப்பட்டது. தொழில் அறிவும் அவர்கள் பெரும்பாலோர்க்கு இருக்க நியாயம் இல்லை. அதற்கான சிறப்புப் பள்ளிகளும் தொழிற்பள்ளிகளும் அவர்களுக்கென்றே தொடங்க வேண்டும். பொதுப் பள்ளிகள் அவர்களுக்குப் பயன்பட முடியாது. 'அரவாணிகள் கல்வி' தனிச் சட்ட வரையறைகளுக்குள் கொண்டு வரவேண்டும். அவர்களின் உயிர்த் தேவையாக இருப்பது-வீடும் சமூகமும் புறக்கணித்த பிறகு போக்கிடம் இல்லாமல் இருக்கும் அவர்களுக்கான தங்கும் இடங்கள், வாழ்வதற்கான கொஞ்சம் பணம் இவையே. அந்தப் பணத்தை அவர்களின் உழைப்புக்கான ஊதியமாகத் தரலாம்.
விளிம்பு நிலைக்கும் மேலாகச் சிக்கிச் சீரழிந்து கொண்டு வாழ்வதற்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவர்கள் செம்மை அடையும் வரை, சமூகம் தன்னை நாகரிகமானது என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறாது.
பயன் கொண்ட நூல்கள்
* மூன்றாம் பாலின் முகம் - நாவல் 
பிரியாபாபு, சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை-83
தொலைபேசி : 24896979, 65855704
* காதல் வரலாறு 
டயன் அக்கர்மென்-தமிழில் ச.சரவணன். சந்தியா பதிப்பகம்
* அரவாணிகள் 
உடலியல் உளவியல் வாழ்வியல் 
தொகுப்பு : மகாராசன் 
தோழமை வெளியீடு, சென்னை-78
தொலைபேசி : 9444302967


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1627

அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும் - முனைவர் ச.கலைவாணி


 aravani
முனைவர் .கலைவாணி
உதவிப்பேராசிரியர்
மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர்
மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி.

ஆண், பெண் என்ற இவ்விரண்டு பால்களுக்கிடையே தங்களை வரையறுத்துக்கொள்ள முடியாமல் சமூகத்தில் வாழ்க்கையிழந்தவர்களாக கருதப்படுபவர்கள் அரவாணியர். இவர்கள் ஒம்பது, பொட்டை,அலி,உஸ்ஸ_ என்று வார்த்தைகளால் தினம் தினம் துகிலுரிக்கப்படுகின்றனர். ஆண்கள் இவர்களை ஆபாசப் பிறவிகளாகவும், பெண்கள் இவர்களை வேண்டா வெறுப்புடனும் பார்க்கின்றனர். அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் அரவாணியர் பிறப்பும் வாழ்வும், அறிவியல், சமூக உளவியல் ரீதியாக புரிந்து கொள்ளப்படாமலும்,மனிதநேயம் இன்றியும் இருக்கின்றது. இத்தகைய அரவாணியர்களைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரை.
அரவாணியர் :
அரவாணியர் எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். இவர்கள் திடீரென்று ஒரே நாளில் தோற்றத்தில் மாற்றம் பெறுவது இல்லை. குழந்தைப்பருவத்திலிருந்தே அரவாணியருக்கான வாழ்வு தொடங்குகிறது. ஆணாகப் பிறந்தாலும் பூ வைப்பது, வளையல் போடுவது போன்ற பெண் அடையாளங்களையே விரும்புகின்றனர். அரவாணியரின் இத்தகைய செயல்பாட்டிற்கு இவர்கள் காரணமல்ல உடலில் நடைபெறும் ஹார்மோன் செயல்பாடே காரணம் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். திருமூலரும் இக்கருத்திற்கு ஏற்பாகக் கூறுகிறார்.
ஆண்மிகில் ஆண் ஆகும் பெண்மிகில் பெண்ணாகும்
                   பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்” (திருமந்.)
பெண்ணின் வயிற்றில் உருவான கருவில் ஆண் தன்மையுள்ள குரோமோசோம் மிகுந்தால் ஆண் குழந்தையும், பெண் தன்மையுள்ள குரோமோசோம் மிகுந்தால் பெண் குழந்தையும், குரோமோசோம் எண்ணிக்கை சமமாக இருந்தால் பிறக்கும் குழந்தை அலியாகவும் பிறக்கும் என்கிறார். இவ்வறிவியல் உண்மையைச் சமூகம் உணர்ந்து அரவாணியரை மனிதமாண்போடு நடத்த வேண்டும். அரவாணியர் எல்லா நாட்டிலும் மாநிலத்திலும் காணப்படுகின்றனர். தென்னிந்தியாவில் மட்டும் முப்பதாயிரம் திருநங்கைள் உள்ளனர்.” (ப.182) என்று அ.ஜெயசீலி ‘அரவாணிகள் உரிமை’ என்ற கட்டுரையில் கூறுகிறார். அரவாணியர் என்கிற நிலை உலகில் காலங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு பழந்தமிழ் இலக்கியங்கள் சான்றாகின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களில் அரவாணியர் :
பழம்பெரும் இலக்கியங்களில் அரவாணியர் பற்றிய குறிப்புகள், சமூகத்தில் இவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதற்குச் சான்றாகின்றன. இலக்கியங்கள் இவர்களைப் பேடி என்று குறிப்பிடுகின்றன.
பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால்
                   இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும்” (நன்.சொல்.264)
என்ற நூற்பாவிற்கு உயர்திணையாகவும் கொள்ளலாம், அஃறிணையாகவும் கொள்ளலாம் என்று பொருள்படுகிறது. உரையாசிரியர்களும் அலி வந்தது, பேடி வந்தது என்றே சான்று தருகின்றனர். இவற்றின் மூலம் பேடி என்பவர்களை அக்காலத்தில் அஃறிணையாகக் கருதியுள்ளனர்.
நாலடியாரும்
செம்மை யொன்று இன்றிச் சிறியார் இனத்தராய்க்
                                                கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ – உம்மை
                                               வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
                                                அலியாகி ஆடி உண்பர்” (நால. 187 ) என்று கூறுகிறது.
நல்ல குணம் இல்லாதவராய் சிறிய எண்ணமுடையவராய் பிறர்மனை நோக்குவாரே மறுபிறவியில் அலியாகப் பிறந்து பிச்சை எடுத்து உண்பர் என்று கூறுகிறது. இவற்றிலிருந்து அன்றைய காலகட்டத்தில் தவறு செய்தவர்களே அலியாகப் பிறப்பர் என்ற கருத்து நிலவியிருக்கிறது. அவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு பிச்சையெடுத்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சீவகசிந்தாமணியில் காந்தருவதத்தையின் தோழியான ‘வீணாபதி’ பேடியாகக் காண்பிக்கப்படுகிறாள். இதனை விளைமதுக் கண்ணி வீணா பதியெனும் பேடி” (சீவ.651) எனும் வரியால் அறியலாம். இவள் தத்தையுடன் போட்டியிட வந்த அரசர்களால் கேலி செய்யப்படுகிறாள்.
நோயே முலைசுமப்பது என்றார்க்கு அருகிருந்தார்
               ஏயே இவளொருத்தி பேடியோ என்றார்” (சீவ.651)
இப்பாடல் வீணாபதியின் அலங்காரத்தையும், அங்கங்களையும் கேலி செய்வதாக அமைந்துள்ளது. அன்றும் இவர்கள் கேலிக்குரியவர்களாகவே கருதப்பட்டிருக்கின்றனர்.
மகாபாரதத்தில் கிருஷ்ணன் பெண்ணாக (அலியாக) மாறியதாக கதைகள் கூறுகின்றன. அரவாணியரும் தங்களை கிருஷ்ணனின் அவதாரம் என்று நினைக்கின்றனர். பாரதப் போரில் களப்பலி கொடுக்க வேண்டியவர்கள் சாமுத்திரிகா இலட்சணம் பொருந்தியவர்களாக இருக்கவேண்டும். இந்த இலட்சணம் பொருந்தியவர்கள் கிருஷ்ணன், அர்ச்சுனன்,அர்ச்சுனன் மகன் அரவான் (பாரதம் இவனை இராவன் என்று குறிப்பிடுகின்றது). எனவே அரவானைக் களப்பலி கொடுக்க எண்ணுகின்றனர். ஆனால் அரவானுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. ஆகையால் கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்துப் பெண்ணாக மாறி அரவான் ஆசையை நிறைவேற்றுகிறார். கிருஷ்ணன் போலவே நாங்களும் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள்” (தமிழ் விக்கிப்பீடியா) . இந்நிகழ்வின் நினைவாகவே கூத்தாண்டவர் திருவிழா நடத்தப்படுகின்றது. அதில் தாலியருப்பு நிகழ்;வும் நடைபெறுகிறது என்று கூறுகின்றனர் அரவாணியர். இவர்கள் அரவான் மனைவி ஆகையால் அரவாணியர் எனப்பட்டனர். “பேடி, அலி, உஸ்ஸ, ஒம்போது என வார்த்தைகளால் காயப்படுத்தாமல் ‘அரவாணிஎன்று கௌரவமாக அழைக்க வேண்டும் எனச் சமூகத்திற்கு வேண்டுகோள் வைத்து எங்களுக்குப் பெயர் சு10ட்டியவர் ரவி என்கிற ஐ.பி.எஸ் அதிகாரி. 1997ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கூவாகம் திருவிழா மேடையில் ‘அரவானனின் மனைவிகளான இவர்களை இனி அரவாணி என அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்” (ப.252) என்று ஆஷாபாரதி ‘தமிழ் மண்ணே வணக்கம்!’ என்ற நூலில் கூறியுள்ளதை இங்கு நினைவு கூறலாம். மகாபாரதத்தில ‘சிகண்டி’ என்ற பாத்திரம் கூறப்படுகிறது. இப்பாத்திரம் பீஷ்மரைக் கொல்ல பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர். அதே போல அர்ச்சுனன் சாபத்தால் அலியாக இருந்ததாகப் பாரதம் கூறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் அரவாணியர்களை சாபத்திற்குரியவர்களாகவும், நகைப்பிற்குரியவர்களாகவுமே காண்பிக்கின்றன.

நவீன இலக்கியங்களில் அரவாணியர் :
காலப்போக்கில் அரவாணியர்களின் வாழ்வைப் பற்றிய புரிதல்களில் ஓரளவு மாற்றம் அடைய ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக நவீன இலக்கியங்களில் இவர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். அரவாணியர்களைப் பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள்,படைப்பிலக்கியங்கள், நேர்காணல்கள் முதலியவை இவர்களின் வாழ்வைப் பற்றிய மர்மங்கள், புனைவுகளை களைந்து சமுதாயத்திற்குப் புரிதல்களை ஏற்படுத்துகின்றது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் அரவாணியரே படைப்பாளர்களாகவும் உள்ளனர் (எ.கா மூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு, நான் வித்யா- லிவிங் ஸ்மைல் வித்யா).
தமிழில் அரவாணியர் பற்றிய முதல் நாவல் சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ என்பதாகும். இதைத் தொடர்ந்து சில சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. இரா.நடராசனின் ‘மதி என்னும் ஒரு மனிதனின் மரணம் குறித்து’ கி.இராஜநாராயணனின் ‘கோமதி’ போன்ற சிறுகiதைகளைக் கூறலாம். பால பாரதியின் ‘அவன் – அது – அவள்’ நாவல் அரவாணியரின் வாழ்வியல் சிக்கலை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அரவாணியர்களே தங்கள் வாழ்க்கை, குழந்தைப்பருவம், தொழில், கலாச்சாரம், சடங்குகள் குறித்து ‘உணர்வும் உருவமும்’ என்ற நூலில் எழுதியுள்ளனர். இந்நூலின் முன்னுரையில் மனித உரிமை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுந்தானா? அரவாணிகளுக்கு இல்லையா?” என்று அறைகூவல் விடுக்கிறார்.
நவீன இலக்கியங்கள் இவர்கள் வாழ்வைப் பற்றிய எதிர்மறைச் சிந்தனைகளை நீக்கி சமூகத்தில் புதிய புரிதல்களை ஏற்படுத்துகின்றன.
திரைப்படங்களில் அரவாணியர் :
தமிழ்த் திரைப்படங்கள் இவர்களை அருவருப்பான பாத்திரமாக, விபச்சாரத் தொழிலின் தலைவியாக, நகைச்சுவைக் காட்சியில் கேலிக்குரிய பாத்திரமாகவே சித்திரிக்கின்றன. ‘காஞ்சனா’ திரைப்படத்திற்கு முன்பு வரை வெளிவந்துள்ள பெரும்பாலான திரைப்படங்கள் இவர்களை கேலிக்குரிய பொருளாகவே படைத்துக்காட்டியுள்ளன. இதற்கு எந்த மனிதனும், எந்த அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்தினால் அவைகளைத் துன்புறத்தவில்லை என்று ப்ளுகிராஸிடம் சான்றிதழ் வாங்கித் தரவேண்டும். விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றனவா என்று பார்க்கின்ற சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு அரவாணியர்களை வைத்து எடுக்கப்படும் அருவருப்பான நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் கண்ணில் படவே படாது. விலங்குகள் மீது காட்டும் அக்கறையைக் கூட அரவாணிகளுக்குக் காட்ட முடியாமல் இறுகிப்போயிருக்கிறது நம் சமூகத்தின் மனம்”(ப.252) என்று கூறுகிறார் ஆஷாபாரதி. இவரது ஆதங்கம் நியாயமானதே!. இவர்களது மனக்குமுறல்களுக்கு விடியலாக ‘காஞ்சனா’ திரைப்படம் அமைந்தது எனலாம். இத்திரைப்படத்திற்குப் பிறகு சமூகத்தின் புரிதல் ஓரளவிற்கு இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. அதன் பின்னர் வெளிவந்த திரைப்படங்களும் ஓரிரு காட்சியானாலும் இவர்களை மனிதநேயம் மிக்கவர்களாக காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது (எ.கா வானம், உச்சிதனை முகர்ந்தால்).
அரவாணியரின் பிரச்சனைகளும் தீர், வுகளும் :
பிரச்சனைகள் :
  • குடும்பத்தால் வெறுக்கப்படுதல்
  • சமூகத்தால் ஒதுக்கப்படுதல்
  • பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துதல்
இயற்கையின் பிழையால் பிறந்த அரவாணிகள் குடுப்பத்தாலும், சமூகத்தாலும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குடும்பத்தால் அவமானச் சின்னங்களாகக் குருதப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர். ஆண் குழந்தைகளிடம் இருக்கும் பெண் அடையாளங்களை ஏற்றுக் கொள்ளும் குடும்பம் பதின் பருவத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. குறைபாட்டோடு பிறக்கும் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள பெற்றோர் இவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. குடும்பத்தின் நிராகரிப்பே அவர்களைத் தவறான செயலுக்கு இட்டுச் செல்கிறது. ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய குழந்தையை வெறுக்கும் பெற்றோர், கேலி செய்யும் நண்பர்கள் என எல்லோரையும் துறந்து பிச்சை எடுத்து, பாலியல் தொழில் செய்து மொத்தமாகத் தொலைந்து போகிறார்கள்” (பக் 251-252) என்கிறார் ஆஷா பாரதி.
சமூகத்தால் கேலிசெய்யப்படுதல், பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். காவல் துறையும் இவர்களை குற்றவாளிகளாகவேப் பார்க்கின்றது. இதனை பால பாரதியின் ‘அவன்-அது-அவள் என்ற நாவல் குறிப்பிடுகின்றது. இந்நாவல் கற்பனையல்ல! உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தியது என்பதால் உதாரணத்திறகு எடுத்துக்கொள்ளப்பட்டது. நாவலாசிரியர் தமது முன்னுரையில் இந்நூல் முழுவதும் புனைகதை என்று சொல்வதற்கு இல்லை. பல திருநங்கைகளின் வாழ்விலிருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களின் தொகுப்பே இந்நெடுங்கதை என்று கூறியுள்ளார்.
தீர்வுகள் :
             குடும்பத்தின் ஆதரவு மற்றும் அன்பு
             சமூகத்தின் புரிதல்
             அரசின் சட்டதிட்டங்கள்
பெற்றோர் மற்ற குழந்தைகளைப் போல இவர்களையும் நடத்தவேண்டும். குடும்பத்தினர் அன்பும் ஆதரவும் கொடுத்தால் பிச்சை எடுத்தல் பாலியல் தொழில் செய்தல் போன்ற செயல்கள் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்குத் இவர்கள் தள்ளப்படுவதைத் தடுக்கலாம். சமூகத்தின் புரிதலால் தேவையான கல்வி, தொழில் போன்றவை கிடைக்க வாய்ப்பு ஏற்;படும். அரசின் சட்டங்களால் அரவாணியரைக் கேலி செய்பவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அரசின் திட்டங்களும்,சலுகைகளும் வழங்க வேண்டும். இச்சலுகைகள் சரியாக அரவாணியரைச் சென்றுசேர வழிவகை செய்யவேண்டும்.
  • ஆணாகப்பிறந்து ஹார்மோன் குறைபாட்டால் பெண்குணங்களோடு இருப்பவர்கள் அரவாணியர்.
  • பழந்தமிழ் இலக்கியங்கள் இவர்களை அலி,பேடி,பேடு போன்ற வார்த்தைகளால் சுட்டுகின்றன.
  • பெரும்பாலும் பழந்தமிழ் இலக்கியங்கள் அரவாணியரை கேலிப் பொருளாகவும், சாபத்திற்குரியவர்களாகவுமே சித்திரிக்கின்றன.
  • நவீன இலக்கியங்கள் மட்டுமே இவர்களைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்துகின்றன.
  • பெரும்பாலான திரைப்படங்கள் இவர்களை அறுவறுப்பான நகைச்சுவைக் காட்சிகளுக்கே பயன்படுத்துகின்றன.
  • குடும்பமும், சமூகமும் அரவாணியரைப் புறக்கணிப்பதால் பாலியல் தொழில், பிச்சையெடுத்தல் போன்ற தொழில்களைச் செய்ய நேரிடுகிறது.
  • குடும்பத்தின் ஆதரவும், சமூகத்தின் ஒத்துழைப்பும், அரசின் சட்டங்களும் இவர்களை சமூகத்தில் மனிதர்களாக வாழ வழி வகுக்கும்.
  • அரவாணியர் சமூகத்திடம் கேட்கும் கேள்வி அரசியல் சாசனத்தில் உள்ள ‘அனைவரும் சமம்’ என்ற வரிகளில் வரும் ‘அனைவரும் சமம்’ என்பதில் அரவாணியரும் உள்ளனரா? என்பதே!
http://puthu.thinnai.com/?p=26924

திருநங்கையர் மனக்குமுறலை ‘எதிரொலிக்கும் கரவொலிகள்’ -- அருண் பகத் அசாக்

   அருண் பகத் அசாக் குமரேசன்
 
நாடகக்களம்


டுக்கப்பட்ட மக்கள் தங்களது விடுதலைக் குரலைக் கலையாக வெளிப்படுத்தும்போது அது ரசனைக்குரியதாக மட்டும் இருப்பதில்லை, போராட்ட உணர்வைத் தூண்டுகிற படைப்பாக்கமாகவும் அமைகிறது. திருநங்கை நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து மேடையேற்றியுள்ள ‘எதிரொலிக்கும் கரவொலிகள்’ என்ற நாடகம் இதற்கு சாட்சியம் கூறுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் திருநங்கையர் பிரச்சனைகள் பல வடிவங்களில் முன்னுக்கு வந்துள்ளன. பொது இடங்களில் கைகளைத் தட்டிக்கொண்டு, ‘ஒரு மாதிரியாக’ நடந்து கொண்டு பிச்சை கேட்கிறவர்கள், உழைப்ப தற்கு மனமில்லாமல் உடலை விற்கிறவர்கள், சமூக ஒழுங்கிற்குக் கட்டுப்படாதவர்கள் என் றெல்லாம் அதுவரையில் திருநங்கையர்கள் பற்றி பேசப்பட்டு வந்தது. திரைப்படங்களிலும், தெருக்களிலும் ‘ஒன்பது’ என்ற எண் இவர் களைப்பற்றிய இளக்காரமான அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. “நாங்களும் மனிதர் கள்தான்... எங்களுக்கும் உங்களைப்போல உணர்வுகள் உண்டு, சுயமரியாதை உண்டு,” என்ற குரல் அவர்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கி இந்த 20 ஆண்டு காலத்தில் படிப்படி யாக உரத்து முழங்கி வருகிறது.

அரசு இவர்களுக் கான நலவாரியம் அமைத்திருப்பது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இவர்கள் தங்களை திருநங்கையர் என்றே குறிப்பிடுவதற்கான உரிமை, கல்விக் கூடங்களிலும்- பணித்தலங் களிலும் இவர்களுக்கு இடம் அளித்தாக வேண் டும் என்ற வலியுறுத்தல்... என்ற காட்சி மாற்றங் கள் எளிதில் நிகழ்ந்து விடவில்லை. திருநங் கையர் அமைப்புகளின் இடையறாத முயற்சி கள், இவர்களைப் புரிந்து கொண்டவர்களின் தோழமைக் கரங்கள், போராட்டக் களங்கள், அதில் ஏற்பட்ட காயங்கள் என ஆழமான பின்னணிகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் திருநங்கையர் சமமாக மதிக்கப்படுவதற்கான இன்றைய ஒரு போராட்டப் படைப்பாக வந்திருப்பதுதான் வானவில் கலைக்குழு வழங்கியுள்ள இந்த நாடகம்.

உள்ளடக்கம், உருவம் இரண்டிலுமே பார் வையாளர்கள் மனம் நிறையும் வண்ணம் இந்த நாடகம் உருவாகியிருக்கிறது. நாடகம் தொடங்கு வதாக அறிவிக்கப்பட்ட உடனேயே தோல் கருவியின் தாளம் ஒவ்வொரு அடியாக ஒலிக் கத் தொடங்கி வேகம் பிடிக்கிறது. அப்போது பார்வையாளர்களிடையே இருந்து கலைஞர் கள் - அனைவரும் திருநங்கையர் - வரிசையாக மேடையில் ஏறி இரண்டு நீள கயிறுகளைக் கட்டுகிறார்கள். அந்தக் கயிறுகளில் துணிகளைத் தொங்கவிடுகிறார்கள், மேடை யைக் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றி வந்து பின்புலத் திரையை நோக்கி அமர்கிறார்கள். இப்படி மேடை ஏற்பாட்டை நாடகத்தின் தொடக்க அங்கமாகவே ஆக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேடைத் திரையில் ஓசை எதுவுமின்றி சில திரைப்படக் காட்சிகள் ஓடுகின்றன. பாடல் காட்சிகளில் திருநங்கையர்கள் எப்படியெல்லாம் கேலிப் பொரு ளாகக் காட்டப்பட்டார்கள் என்ப தைக் காட்டுகிற காட்சிகள் அவை. ஒருவர் எழுந்து “இதே காட்சிகளை இன்னும் எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்,” என்று கேட்கிறார். “ஏன் பார்த்தால் என்ன,” என்ற பதில் கேள்வி எழுகிறது... அப் படியே நாடகம் வாழ்க்கையின் உண்மை நிலைகள் பற்றிய விமர்சனமாக விரிகிறது.

“அரவாணிகள் கைது,” “ஆண் விபச்சாரிகள்,” “சிறுவனைக் கடத்திய அலிகள்...” இப்படியெல் லாம் ஊடகங்களில் வரும் செய்திகள் நீண்டதொரு துணியில் எழுத்துகளாக எழுதப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட செய்திகளின் பின்னால் மறைக் கப்படும் திருநங்கையரின் உண்மை வாழ்க்கை நிலைமைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதே துணி கலைஞர்களைச் சுற்றி ஒரு விலங்குபோல பிணைத்துக் கொள்கிறது. திருநங்கையர்களைக் கிண்டல் செய்த பிரபலமான திரைப்படப் பாடல் கள் ஒலிக்க சில கலைஞர்கள் ஆடுகிறார்கள். ஊடகங்களின் திரிக்கப்பட்ட செய்திகள் இவர் களை முன்னேற விடாமல் கட்டிப்போடுவதை உணர்த்துவதாக இந்தக் காட்சி அமைகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி இவர்களிடம் வருகிறார். பெயர்களைக் கேட்கிறார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்ட பெண் பெயர்களைச் சொல்ல அவரோ இவர்களை ஆண்களின் வரிசையில் பதிவு செய்கிறார். சட்டத்தில் இவர்களை திருநங்கையர் என்றே குறிப்பிடுவதற்கான ஆணை பிறப்பிக்கப் பட்டதோ, இவர்கள் விரும்பினால் பெண் வரிசையில் பதிவு செய்யலாம் என இருப்பதோ அந்த அலுவலருக்குத் தெரியவில்லை. “நீங்களெல்லாம் இந்தியர்கள்... இந்தியக் குடிமக்கள்” என்று அவர் சொல்ல திருநங்கையர்கள் வெடித்துச் சிரிக் கிறார்கள். “நாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பது இப்போது மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறதா,” என்று அவர்கள் கேட்கிறார்கள். வீட்டில் துவங்கி பொதுவெளி வரையில் தங்களைச் சிறுமைப்படுத் தும் சமுதாயத்தைப் பார்த்து  “நாங்கள் உங்களோடு தான் இருக்க விரும்புகிறோம்... ஆனால் நீங்கள்தானே எங்களை ஒதுக்குகிறீர்கள்,” என்று கேட்காமல் கேட்பதாக அந்தச் சிரிப்பொலி எழுகிறது. மக்களின் மனசாட்சியை அந்தச் சிரிப்பொலி தொட்டுவிட்டது என்பது பார்வையாளர்களிட மிருந்து எழுகிற பலத்த கரவொலியில் எதிரொலிக்கிறது.

ஏப்ரல் 15 திருநங்கையர் தினத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடந்த விழாவில் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகத்தில் பங்கேற்ற அனைவருமே திருநங்கை வாழ்க்கை நிலைமையின் பல்வேறு படிகளில் நிற்பவர்கள். ஒரு வார கால ஒத்திகையில் பிசிறின்றி இந்த நாடகத்தை நடத்தியது அவர்களது ஈடுபாட்டை உணர்த்தியது. விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பாகக்கூட இவர்களில் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலியாக திருட்டுப்பழி சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்கள், தமுஎகச முயற்சியால் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து நாடகத்தில் பங்கேற்றார்கள். உரிமைச் செய்திகளை வெளிப்படுத்துவதற்கு இப்படி எத்தனை தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.

அப்படித் தாண்டுவதற்கான மன உறுதியை ஏற்படுத்தி, கலைக்குழுவாக செயல்படுவதற்கான ஒருங்கிணைப்பு பொறுப்பை ஏற்றவர் நாடகத்துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்துவரும் இளம் கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா. நாட கத்தை நெறியாள்கை செய்தவர் மொளகாப் பொடி புகழ் ஸ்ரீஜித் சுந்தரம். சித்திரசேனன் தாள இசை நாடகம் முழுவதும் வந்து பேசுகிறது. வின்சென்ட் பால் ஒளியமைப்பும், தமிழரசன் காட்சியமைப்பும் நாடகத்திற்கு எழில் சேர்க்கின்றன.

கோமதி, மானு, தேன்மொழி, திவ்யா, விபாசா, பிரபா, குஷ்பூ, சிந்து, ரசிகா, தேவி ஆகியோரின் ஈடுபாடு மிக்க நடிப்பு மாற்றத்திற்கான நியாய ஆதங்கத்தைப் பிரதிபலித்தது.

மாநிலம் முழுவதும் இந்த நாடகம் கொண்டு செல்லப்பட வேண்டும். அது இந்தக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, “எங்களுக்கு உங்கள் தோள் வேண்டும், தோழமை வேண்டும்” (விழாவின் எழுத்தாளர் பிரியா பாபு சொன்ன சொற்கள்) என்ற திருநங்கையரின் வேண்டு கோளை தமிழ்ச் சமுதாயம் செவிமடுக்கச் செய்வதற்கான முனைப்பாகவும் அமையும்.

(‘தீக்கதிர்’ 29.4.2012 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது நாடக அறிமுகக் கட்டுரை)
 
http://asakmanju.blogspot.in/2012/04/blog-post_30.html

பிறப்பின் பிறழ்வு..., திருநங்கைகள்.

October 12, 2010
.

.நான் சிறுபெண்ணாக இருந்தபோது ஊரில் `கணியான் கூத்து’ என்றொரு

நிகழ்ச்சி நடக்கும். ஆண்கள், பெண்களாக வேடமிட்டு நடிக்கும் ஒருவகை

நடனநிகழ்ச்சி அது. கொஞ்சம் ஆண் சாயலோடு இருக்கும் பெண்களை,

`கணியான் மாதிரி இருக்கா’ என்று புறம் பேசுவது வழக்கமாயிருந்தது.

அப்போதெல்லாம் நிஜமாகவே அப்படி ஒரு பிரிவினர் இருப்பது தெரியாது.

கொஞ்சம் விவரம் தெரிந்த பின், அரவாணிகள் பற்றி தெரிய வந்தது.

அதுவும், சித்திரை மாதம் அவர்கள் நடத்தும் கூத்தாண்டவர் திருவிழா,

மிஸ்கூவாகம் பற்றிய பத்திரிகைசெய்திகள் வழியாய் புரிந்தது. அரவாணி

என்றழைக்க படும் இவர்கள், தங்களை மகாபாரத அரவாணின் மனைவி

யாக பாவித்து தாலி கட்டிக் கொள்வதும், மறுநாளே தாலியறுத்து ஒப்பாரி

வைப்பதும் செய்திகளாக வந்தன.



ஆனால் நிஜத்தில் இவர்கள் நிலையென்ன? பால்திரிபு காரணமாய் பெற்றோ

ராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்டு், பிச்சையெடுப்பவர்களாகவும்,

பாலியல் தொழிலாளியாகவும் வாழும் நிலைக்குத் தள்ளப் படுகின்றார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் 1,50,000 திலிருந்து 2,00,000 அரவாணிகள் இருப்ப

தாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இந்தியாவின் முதல் HIV பாஸிட்டிவ்

ரிசல்ட், தமிழ்நாட்டில் இருப்பதாக அறிந்த பின்னர் தான், அரசாங்கம்

பாலியல் தொழிலாளிகள் பற்றியும், அரவாணிகளாக வாழ்பவர்கள் குறித்

தும் கவனம் கொள்ளத் தொடங்கியது. அவர்கள் தங்களைப் பற்றி சிந்திக்க,

பேச ஒரு தளம் அமைத்துக் கொடுக்கப் பட்டது.



திருநங்கையாக பிறந்து, விடாமுயற்சியாலும், உழைப்பாலும் உயர்ந்த

நர்த்தகி நடராஜ், சக்திபாஸ்கர், இவர்களுக்கு தஞ்சை ராமையாப் பிள்ளை

அவர்களின் மாணாக்கராகும் வாய்ப்பு கிடைத்தது. அபார கலைத்திறமை

யால் முன்னேறிய இவர்களில் நர்த்தகி தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில்

நடனத்துறை விரிவுரையாளராக பணிபுரிந்தார். ஒரு பேட்டியில், இந்த

வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திராவிட்டால் நீங்கள் என்னாவாகியிருப்பீர்கள்

என்ற கேள்விக்கு, `மற்ற துர்பாக்யசாலிகளைப்போல நானும், மும்பை

யிலோ, அல்லது வேறு எங்காவதோ விபச்சாரத்துக்கு தள்ளப்பட்டிருப்பேன்

என்கிறார்.



தமிழ்நாடு அரவாணிகள் நல சங்கத்தின் தலைவாராகவும், SIDA எனும்

அமைப்புக்கு மேனேஜிங் ட்ரெஸ்டியாகவும் திகழும் பிரியாபாபு எனும்

மற்றொரு திருநங்கை, அரவாணிகளின் தற்போதைய நிலை தேவலாம்

என்கிறார். 15 வருட போராட்டங்களின் வெற்றியாக அவர் குறிப்பிடுவது,


அரவாணிகளை, `மற்றவர்கள்’ எனும் பிரிவின் கீழ் கொணர்ந்து, அவர்

களுக்கு ரேஷன்கார்டு, வோட்டர் ஐடி, ஓட்டுரிமை வழங்க சுப்ரீம்கோர்ட்

அணையிட்டது,

பால்மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமாக்கியது,

சுயவேலை வாய்ப்பு திட்டங்கள்,

பள்ளி, கல்லூரிகளில் பால்திரிபை காரணம் காட்டி அவர்களுக்கு அனுமதி

மறுக்கக் கூடாது போன்றவைகள்.







`சகோதரி பவுண்டேஷன்’ எனும் அமைப்பை நடத்தி வரும் கல்கி எனும்

மற்றொரு திருநங்கை ஜர்னலிசம் படித்தவர். பள்ளி,கல்லூரிகளில் விழிப்

புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இளம்வயதில், பள்ளி, கல்

லூரிகளில் அவமானப் படுத்தப்பட்டு, அதன் காரணமாக தன்னை திடமான

வராக, தைர்யசாலியாக வளர்த்துக் கொண்டவர். திருநங்கைகளுக்காக

முதல் திருமண தளம் ஒன்றை இணையத்தில் நிறுவியிருக்கிறார். சென்ற

வருடம் `வாழ்நாள் சாதனையாளர்’ விருது அரிமாசங்கத்தினரால்,

இவருக்கு வழங்கப் பட்டிருக்கிறது.


விவரம் புரியாவயதில் தனக்குள் நடக்கும் வினோதத்தை புரிந்து கொள்ள

முடியாமல், பெற்ற தாய் உட்பட அனைவரின் புறக்கணிப்புக்கும் ஆளாகும்

இவர்களுக்கு தேவை அரவணைப்பும், பாதுகாப்புமே. ஆனால் அதை இந்த

சமூகம் தருவதில்லை. மாறாக எள்ளி நகையாடுகிறது.


`ஆணாகி, பெண்ணாகி நின்றானவன்’ என்ற அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை

ஏற்றுக் கொண்ட நாடு இது. ஆனால், உயர்திணையில் பிறந்தும்,இவர்களை

அஃறிணையாகவே சமூகம் பார்க்கிறது. `பேடி‘, `அலி’ என எத்தனை

கேவலமான சொற்கள்.... முதலில் இந்த திரைப்படங்களில், எங்களை

கேவலமாகவும், நகைச்சுவையாகவும் சித்தரிப்பதை நிறுத்துங்கள்’ எனக்

குமுறுகிறார்கள். உண்மைதானே! அரவாணிகள் என்றாலே, பெண்புரோக்

கர்கள், பாலியல் தொழிலாளிகள் என்பதாகத்தானே சித்தரிக்கிறார்கள்.

டி.ராஜேந்தரின், ஒருதலைராகம் தொட்டு ( கூவாத கோழி கூவுற வேள)

அமீரின் பருத்திவீரன் ( ஊரோரம் புளிய மரம்) வரை இவர்கள் நகைச்

சுவை பாத்திரங்களாகத்தானே சித்தரிக்க பட்டிருக்கிறார்கள்..



அரசாங்கமும், அரசாணகளும் வெறும் புள்ளிகள் மட்டுமே வைத்திருக்

கின்றன. அதை அழகான கோலங்களாக்குவது சமூகம், மற்றும் பெற்ற

வர்களின் கையில் தான் இருக்கிறது.

http://ambikajothi.blogspot.in/2010/10/blog-post_12.html

சாதனை நங்கைகள், இன்னும் இன்னும் - லிவிங்ஸ்மைல் வித்யா



ஆகஸ்ட் 01, 2006

திருநங்கைகளில் (அரவாணிகள்) சிலர் பலப்பல சாதனைகளை சப்தமின்றி செய்த வண்ணம் உள்ளனர். எனக்கு தெரிந்த சிலர் உங்கள் முன்... சுருக்கமாக.... ஏனெனில், பல செய்திகளை என்னால் சரியான புள்ளி விவரமாக பெற இயலவில்லை.. இப்பதிவிற்கு பிறகு தகவல் ஏதேனும் கிடைத்தால் அதையும் இணைத்துக் கொள்ளும் எண்ணத்துடனே இப்போதைக்கு இதை எழுதுகிறேன்.. எனவே, உங்களுக்கும் யாரைப்பற்றியாவது, எதாவது சிறப்பு செய்திகள் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கலாம்.


ஆஷா பாரதி : பல வருடங்களுக்கு முன்பு (எப்பன்னு தெரியலை)கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் முதல்முறையாக, முழுக்க முழுக்க திருநங்கைகளுக்கென, அவர்களின் உரிமைகளுக்கென போராடக்கூடிய THAA என்ற NGO ஒன்றினை துவக்கினார்.. இதன் மூலம் பல படித்த மற்றும் படிக்காத திருநங்கைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு அளித்ததோடு அவர்களின் மூலமாக பிற திருநங்கைகளுக்கும் நடத்தையியல் மாற்றமும்(Behaviour Change) அளித்து வருகிறார்...

இந்த சமூகத்தில் எங்களாலும் மற்றவர்களைப் போலவே கெளரவத்தோடு வாழமுடியும் என்பதை வாழ்ந்தும் வாழ்வித்தும் நிரூபித்து வருகிறார்..

திருநங்கைகளில் HIV கிருமியால் பாதிக்கப்பட்ட, AIDS-உடன் வாழ்ந்து வரும் மக்களுக்கு அன்பும், ஆதரவும் அளித்து அவர்களை தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுத்து வருகிறார். மேலும், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் தமது தொண்டு நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார்...

தவிர்க்கவியலாமல், பாலியல் தொழில் புரிந்து வரும் திருநங்கைகளிடையே STD, AIDS போன்ற பால்வினை நோய்களின் ஆபத்து குறித்தும், அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் குறித்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்...


ப்ரியா பாபு : தன்னைப் போன்ற 15 திருநங்கைகளை சேர்த்து Sudar Foundation என்ற சுய உதவி குழுவொன்றினை நிறுவி அதன் மூலம் மேற்படி திருநங்கைகளுக்கு காஞ்சிபுரத்தில் சொந்த நிலம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும், தனது சுயஉதவிக் குழுவின் மூலமாகவே அவர்களுக்கு வீடுகட்ட மானியத்துடன் கூடிய கடனுதவியும் பெற்றுத் தந்து.. (ஆம் மக்களே இன்று மேய்யாகவே அத்திருநங்கைகள் தங்கள் சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்..) இந்நூற்றாண்டின் முக்கியமான சாதனையை பல கடினமான சோதனைகளுக்கும் மத்தியில் சட்டத்துடன் போராடி பெற்றுத் தந்துள்ளார்...



சட்டத்துடன் போராடி என்னும் போது அவரின் மற்றுமொரு முக்கிய சாதனையொன்றினையும் கூறியாக வேண்டும்.. திருநங்கைகள் தங்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் வகையில் வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு போன்றவற்றையும் இந்திய அரசியல் சாசனத்துடன் போரிட்டு பெற்றுத் தந்துள்ளார்.


மட்டுமன்றி, திருநங்கைகளின் உள்ளத்தில் உள்ள கலையாளுமையை வெளிக்கொணரும்படிக்கு, கண்ணாடி கலைக் குழு என்ற கலைக் குழுவினை தமிழகத்தின் முக்கிய பெண்ணிய படைப்பாளியான அ.மங்கையுடன் இணைந்து உறையாத நினைவுகள், மனதின் அழைப்பு என்னும் இரண்டு சிறப்பான நாடகங்களை சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், பல கல்லூரிகளிலும் இப்போதும் அரங்கேற்றி வருகிறார். இது கலையார்வமுள்ள திருநங்கைகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக உள்ளதோடு காலங்காலமாக திருநங்கைளின் மீது உமிழப்பட்டு வந்த ஆபாச படிமத்தையும் உடைத்தெறிந்துள்ளது.

கொசுறு :
ப்ரியா பாபு ஆகஸ்ட் 15 கொடியேற்ற நான் வசிக்கும் TTSக்கு வருகிறார்.

ரேவதி : பெங்களூரில் உள்ள SANGAMA என்ற NGO வில் கடந்த ஆறு வருடங்களாக Sexual Minorities(Trans women, Homo sexualities, Lesbians, Bi-sexualities)களிடையே அவர்களின் உரிமைக்காவும், பாலியல் சுதந்திரத்திற்காகவும் பணியாற்றியவர்.. சட்ட ரீதியாக போராடி தனக்கான சொத்துரிமையைப் பெற்றவர்...



தற்போது உடல் நலமில்லாத தன் தாயாரை உடனிருந்து கவனித்து வரும் இவர், சமீபத்தில் பல திருநங்கைகளின் வாழ்க்கையை நேரடியாக பதிவு செய்து, பொது தளத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளூம் வகையில் உணர்வும் உருவமும் என்ற பெயரில் திருநங்கைகளின் வாழ்வு குறித்த சிறந்த பதிவாக புத்தகம் ஒன்றினை எழுதியுள்ளார். (வெளியிட்ட அடையாளம் பதிப்பகத்தாருக்கு நன்றி... )

நர்த்தகி நடராஜ் :


திருநங்கைகளிலேயே தனித்தவொரு அடையாளமாக இருப்பர் நர்த்தகி நடராஜ். இந்தியாவிற்கும், பரதக்கலைக்கும் பெருமை சேர்த்து வரும் இவர் தனது தனித்திறமையினால் பரிசுகள் பல பெற்றவர். மேலும், பல அயல்நாடுகளிலும் சென்று பரதக்கலையின் அருமையையும், இந்தியக் கலையின் பாரம்பரியத்தையும் புகழ் பரப்பி வருகிறார்...


இந்தியாவில் திருநங்கைகளிலிலேயே முதன்முறையாக பாஸ்போர்ட் பெற்றவர் என்ற பெருமையும் இவரையே சேரும். திருநங்கை என்ற பதத்தை இலக்கியத்திலிருந்து அறிந்து, அவை பொது தளத்தில் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்ற முதலில் கூறியவரும் இவரே.

கல்கி : எனக்கு தெரிந்து இந்தியாவில், தமிழ்நாட்டில் முதன்முறையாக, தனக்கென, சொந்தமாக வலைப்பக்கம் ஏற்படுத்திய திருநங்கையாக கல்கியை அறிகிறேன். மேலதிக தகவலுக்கு இங்கே கிளிக்கவும்.. ஏனென்றால், எனக்கு கல்கி குறித்து தெரிந்தவை எல்லாம் இப்பக்கங்களில் இருப்பது மட்டுமே... நீங்களும் ஒருமுறை சென்று பாருங்கள்.., ஆதரவு தெரிவியுங்கள்...

மேலும், முக்கியமான நபர்களாக ஸப்னா முதன்முறையாக M.Phil படிப்பதற்கு அனுமதி பெற்ற திருநங்கை தற்போது ஒரு NGO வில் பணிபுரிந்து வருகிறார். ப்ரியங்கா என்று கரூரில் வசிக்கும் திருநங்கையொருவர் IAS பரிச்சைக்கு முயற்சி செய்வதாக கேள்விபட்டேன், உண்மையாக இருந்தால் சந்தோசம் தானே..

இன்னும் இன்னும் இளைய சமுதாயத்திடமிருந்து பல நல்ல உதாரணங்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்போம்.. தோழமையோடு அவர்களுக்கு நம் ஆதரவையும் தருவோம்.

வரி வசூல் செய்ய திருநங்கைகள்:

சர்ச்சையாகும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை

  • 7 பிப்ரவரி 2015
     
     
சென்னை மாநகராட்சியால் திருநங்கைகள் பயன்படுத்தப்பட்ட விதம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
சொத்து வரி பாக்கி வைத்த நிறுவனங்களிடமிருந்து அந்த வரியை வசூலிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முன்பாக திருநங்கைகளை நடனமாட வைத்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வரியை வசூல் செய்ததற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 13வது மண்டலமான அடையாறு பகுதியில், பல நிறுவனங்கள் வரி செலுத்தாமல் இருந்த நிலையில், இந்த வரியை வசூலிக்க அந்தப் பகுதியின் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று ஒரு மாறுபட்ட நடவடிக்கையில் இறங்கினர்.
வரியைச் செலுத்தாத நிறுவனங்களின் முன்பாக தாரை தப்பட்டைகளுடன் திருநங்கைகளை நடனமாட வைத்தனர். இதையடுத்து பல நிறுவனங்கள் உடனடியாக தங்கள் வரி பாக்கிகளைச் செலுத்தினர்.
இதன் மூலம் சென்னை மாநகராட்சியின் பதிமூன்றாவது மண்டலத்தில் ஒரே நாளில் ஒன்றரைக்கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிஹார் போன்ற மாநிலங்களிலும் மும்பை போன்ற நகரங்களிலும் திருநங்கைகளைப் பயன்படுத்தி வரி வசூல் செய்வதைப் பார்த்தே தங்களுக்கும் அந்த எண்ணம் வந்ததாகத் தெரிவிக்கிறார் அடையாறு மண்டலத்தின் துணை வருவாய் அதிகாரியான தமிழ்.
சதீஷ் பேண்டு வாத்தியக் குழு என்ற குழுவின் மூலம் இரண்டு திருநங்கைகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் கேட்டதால், திருநங்கைகளை அழைத்துவந்ததாக அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இது மனித மாண்புக்கே எதிரானது என்கிறார் தோழமை அமைப்பைச் சேர்ந்த தேவநேயன். வீட்டைக் காலி செய்வதற்காக வீட்டின் உரிமையாளர் குரங்கு, பாம்பு, பூனை போன்ற விலங்குகளை குடியிருப்பவர் வீட்டிற்குள் விடுவதைப் போல, மாநகராட்சியும் நடந்துகொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

"புனிதமான செயல்"

திருநங்கைகள் மீது ஏற்கனவே சமூகத்தின் பார்வை தவறாக இருக்கும் நிலையில், அவர்களை இப்படிப் பயன்படுத்துவது சரியா என வருவாய் அதிகாரியிடம் கேட்டபோது, "அவர்கள் வரி வசூல் செய்யும் புனிதமான செயலில்தானே ஈடுபடுத்தப்பட்டனர்" என்று பதிலளித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் மாநகராட்சியின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது திருநங்கைகளை கொச்சைப் படுத்தும் செயல்; இது கடுமையான மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது மிக மோசமான செயல் என்கிறார் திருநங்கையான பிரியா பாபு. சமூகத்தில் திருநங்கைகள் குறித்து இருக்கும் பிம்பத்தை மாநகராட்சி பயன்படுத்திக்கொள்கிறது என்கிறார் அவர்.
இந்த நடவடிக்கையை தொடர்வது குறித்து மாநகராட்சி ஆணையர்தான் முடிவுசெய்ய வேண்டும் என்கிறார்கள் மண்டல அதிகாரிகள்.
திருநங்கைகளை வைத்து வரி பாக்கியை வசூல் செய்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்திருக்கும் நிலையில், இது குறித்து கருத்தைப் பெற சென்னை மாநகராட்சி ஆணையரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உடனடியாகப் பலனளிக்கவில்லை.

http://www.bbc.com/tamil/india/2015/02/150207_transgender

வாடகை வீடு கிடைக்காமல் திருநங்கைகள் திண்டாட்டம்: எல்.ரேணுகாதேவி


Published: July 2, 2014 

சென்னையில் இலவச வீடு கட்டித் தர அரசுக்கு கோரிக்கை

 
கோப்பு படம்
கோப்பு படம்
சென்னையில் வாடகை வீடு கிடைக் காமல் திருநங்கைகள் தவிப்பது தொடர் கதையாகி வருகிறது. மற்ற மாவட்டங்களில் இருப்பதுபோல சென்னையிலும் திருநங் கைகளுக்கு இலவச வீடுகள் அமைத்துத்தர தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்கின்றனர் திருநங்கைகள்.
திருநங்கைகளை பெற்றவர் கள்கூட புறக்கணிக்கும் நிலை பரவலாக காணப்படுகிறது. குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ளாததால் தனித்து விடப்படும் திருநங்கை களுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பது மிகமிக சிரமமாக இருக்கிறது.
இதனால் திருநங்கைகள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து, வாடகைக்கு இருக்கின்றனர். நுங்கம்பாக்கம், சைதாப் பேட்டை, வியாசர் பாடி, கீழ்ப்பாக்கம், ரெட்ஹில்ஸ் போன்ற இடங்களில் இதுபோல திருநங்கைகள் பலர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
அந்த வீடுகளும் அவர்களுக்கு போது மானதாக இல்லை. 50 சதுர அடி மட்டுமே கொண்ட வீடுகளில்கூட பல திருநங்கைகள் வசிப்பதைக் காணமுடிகிறது. ஒரு பீரோ, டிவி வைத்தால் பாதி இடம் போய்விடும். இதுபோன்ற வீடுகளில் சமையல் செய்ய தனியாக இடம் கிடையாது. கழிப்பறை, குளியல் அறை பொதுவாக இருக்கும். 3 குடும்பங்கள் சேர்ந்து பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கூறுகையில், ‘‘எங்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை. பாலியல் தொழில், பிச்சை எடுப்பதை நம்பியே பிழைப்பு நடத்து கிறோம். சிறிய வீடு என்றாலும் மாத வாடகை ரூ.3 ஆயிரம். மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வரை வசூலிக்கின்றனர்.
இதுபோன்ற வீடுகளும் சாதாரணமாக கிடைப்பதில்லை. திருநங்கைகள் என்றால் வீடு தர மறுக்கின்றனர்.
திருநங்கைகள் என்றால் கேலிக்குரியவர்கள், பிரச்சினை களை உருவாக்குபவர்கள் என்பது போன்ற தவறான கருத்துகளை திரைப்படங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் எங்களுக்கு வீடு கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது’’ என்றனர்.
கைகொடுக்குமா சமூகம்?
எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் பிரியா பாபு கடந்த 3 மாதங்களாக வாடகை வீடு தேடி அலை கிறார். எங்கும் வீடு கிடைக்காததால் தோழிகளின் வீடுகளில் தங்கியுள்ளார். அவர் கூறும்போது, ‘‘திருநங்கைகளும் மனிதர்கள்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். சமூகத் தில் திருநங்கைகள் பல துறைகளில் சாதனை புரிந்து வரு கின்றனர். அவர்கள் மீதான தவறான பார்வை மாறவேண்டும். சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ திரு நங்கைகள் விரும்புகிறார்கள். சமூகம் கைகொடுக்க வேண்டும்’’ என்றார்.
பல ஆண்டுகளாக சென்னையில் வசித்துவந்த நடிகையும், சகோதரி அமைப்பு நிறுவனருமான கல்கி, வாட கைக்கு வீடு கிடைக்காத தால் தற்போது பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னையில்தான் திருநங்கைகளுக்கு வாடகை வீடு கிடைப்பதில்லை. வீடு இல்லாமல் தெருவில் நிற்கவேண்டிய சூழ்நிலையில்தான் பாண்டிச்சேரிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’’ என்றார்.
முடங்கிய நலவாரியம்
கடந்த திமுக ஆட்சியில் திருநங்கையர் நலவாரியம் மூலம் திருநங்கைகளுக்கு இலவச வீடு கட்டித்தரப்பட்டது. திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல் போன்ற சில மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளது.
திருநங்கை களுக்கு என்று ஏற்படுத்தப்பட்ட இந்த நலவாரியம் தற்போது செயல்படாமல் உள்ளது.
இந்த வாரியத்தின் முன்னாள் உறுப் பினர் திருநங்கை ஜீவா கூறுகையில், ‘‘திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தருவதற்காக கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டம் தற்போது செயல்படாமல் உள்ளது.
சென்னையில் உள்ள திருநங்கை களுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் வீடு கட்டி தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது’’ என்றார்.
காப்பகத்துக்கு இடம் தேர்வு
திருநங்கைகளுக்கு தற்காலிகக் காப்பகம் ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சில நாட்களுக்கு முன்புஅறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அண்ணா நகரில் இடமும் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் இந்த இடம் அம்மா உணவகத்துக்குக் கொடுக்கப்பட்டது. தற்போது புதிய இடம் தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
பாலியல் தொழில், பிச்சை எடுப்பது போன்ற நிலையில் இருந்து திருநங்கைகள் விலகி புதிய, முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு அரசின் கவனம் தேவை. அதற்கு, மாநிலத் தலைநகரில் திருநங்கைகளுக்கு புதிய வாழ்விடங்களை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே திருநங்கைகளின் எதிர்பார்ப்பு! 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article6168900.ece

விஜய் டிவி நீயா நானா குழுவினர் மீது திருநங்கைகள் குமுறல்











தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும், சிறப்பு அழைப்பாளராகவும் இருக்கும் எழுத்தாளர் பிரியா பாபு அண்மையில் விஜய் டிவியின் நீயா, நானா நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
”அன்புத்தோழமைகளுக்கு…

சில தினங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியின் ’நீயா? நானா?’ நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் நீண்ட வற்புறுத்தலாலும், எனது தோழிகள் என் வருகையை விரும்பியதாலும் சென்று கலந்து கொண்டேன். ஆனால் தற்போது அந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதை குறித்து வெட்கப்படுகிறேன். என் வாழ்வில் கலந்துகொண்ட மோசமான நிகழ்வாக இதைக் கருதுகிறேன் இந்நிகழ்வினாலும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாலும் காயம்பட்ட, மனஉளைச்சலுக்கு ஆளான என் திருநங்கை தோழிகள் மற்றும் எங்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுகின்ற சில தோழமைகளிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்.
பல திருநங்கைகளை மாவட்டத்தின் பலப்பகுதிகளிலிருந்தும் நிகழ்வில் பங்கேற்க வரச்செய்துவிட்டு துளி கூட மனசாட்சி இல்லாமல் திருப்பி அனுப்பியதையும், ஒரு திருநங்கைத் தோழியை நிகழ்வில் அமரவைத்துவிட்டு கீழே இறக்கியதையும், நடனப் பள்ளி நடத்தும் ஒரு தோழியின் பள்ளியிலிருந்து சில சிறுமிகளை வரச்செய்துவிட்டு, நிகழ்வில் அவர்களை பங்கேற்க விடாமல் செய்தது என திரைமறைவில் நிகழ்ந்த பல சம்பவங்களைக் கேட்டு அதிர்ந்து போனேன்.
ஒரு தோழி, தான் அவமானப்படுத்தப்பட்ட விதத்தை நேற்று தொலைபேசியில் என்னிடம் பேசுகையில், தன் வாழ்க்கையில் இதுவரை இப்படி அவமானப்படுத்தப்படுத்தப்பட்டதில்லை என கதறி அழுதார்.
அந்த திருநங்கை தோழி, அந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய  குடும்பம் தன்னை ஏற்றுக்கொண்ட கதையை சமூகத்தின் முன்னால் விளக்க, தன் சகோதரியையும் அழைத்து வந்திருந்தார். இன்னோரு தோழிக்கோ, அழுகையை அடக்கிக்கொண்டு பேச முடியாமல் வார்த்தைகள் சிக்கித் தவித்தன.
நிகழ்வில் கலந்துக்கொண்ட சில திருநங்கைகளும் தங்களின் வாழ்வையோ ,வலிகளையோ இந்த நிகழ்ச்சி சரியாக பதிவு செய்யவில்லை என குமுறினர்.
நானும் அதைத்தான் நினைக்கிறேன். இப்படித் தெரிந்திருந்தால் கண்டிப்பாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கவே மாட்டேன்.
ஏற்கனவே ஒடுக்கப்பட்ட,விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட, திருநங்கைகளின் கண்ணீரில் காசு பண்ண நினைக்கும், இதுபோன்ற நிகழ்ச்சி ஒருங்கணைப்பாளர்களே. வேண்டாம் எங்கள் உணர்வுகளோடு ஒரு விளையாட்டு!”



மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜி என்ற திருநங்கையின் குமுறல் :
”விஜய் டிவியா ? இல்லை வியாபார டிவியா?
திருநங்கைகளின் கண்ணீரிலா காசு பண்ணனும்?
திருநங்கைகள் குறித்து நீயா? நானா நிகழ்வின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள நானும், என் சகோதரியுடன் சென்றேன்.நான் குடும்பம் ஏற்றுக்கொண்டு வாழும் திருநங்கை.உண்மையிலே அதிர்ந்து போனேன். என்னை நிகழ்வில் உட்கார வைத்துவிட்டு காரணம் சொல்லாமல் இறக்கிவிட்டார்கள்.



அத்தோடு நிகழ்வில் ஒவ்வோரு திருநங்கையும் தன் வலி மிகுந்த வாழ்வை பதிவு செய்கையில் நிகழ்ச்சிக்கு பின் அரங்கில் நிகழ்ச்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் அமர்ந்துக்கொண்டு எங்கள் உணர்வுகளை சொல்லமுடியாத வார்த்தைகளால் கேலிகிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் முக்கிய ஒரு பெண் பிரபலத்தை எங்கள் சார்பாக பேச வரச்சொல்லிவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். குறைந்த பட்ச ’ஸாரி’ கூட கேட்க அவர்கள் மீடியா பலமும்,ஆள் பலமும் தடுக்கிறதோ?.
எத்தனை திருநங்கைகளை மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரச்செய்துவிட்டு, போக்குவரத்து செலவுக்குக் கூட காசு கொடுக்காத அவலம்?
எங்கள் துயரங்களை உலகுக்குச் சொல்லுகிறோம் என்ற விளம்பரத்துடன் எடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் இத்தகைய செயல்பாடுகள் இவர்கள் உண்மையில் படித்தவர்கள் தானா? பண்பாளர்கள் தான? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது.
எங்களை கொச்சை படுத்தியது போலவே தான் ஏனைய  எல்லா நிகழ்வுகளிலும் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் நடந்திருப்பார்கள் போல?
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தொகுப்பாளர் ,ஒருங்கிணைப்பாளர் தேவையா? வெட்கக்கேடு.
நிகழ்வில் கலந்துக்கொண்ட பல திருநங்கைகள் சொல்லமுடியாத காயங்களுடன் தான் உள்ளார்கள்.
எங்கள் குமுறல்கள் கண்டிப்பாக உங்களை தண்டிக்கும்.”
இவை குறித்து நீயா நானா நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆண்டனியிடம் தொடர்பு கொண்டு அவரது கருத்தைக் கேட்டோம்.



“பொய்யான அவதூறுகளுக்கு பதில் தர விரும்பவில்லை” என்று முடித்துக் கொண்டார்.

http://www.seythigal.com/?p=3877



வானம் வசப்படட்டும் --- நாம் நண்பர்கள் ஜானி

செவ்வாய், 15 ஏப்ரல், 2014



இன்று வாழ்வின் சக தோழிகள் ஆன திருநங்கைகள் தினம் .

பெயர்காரணம்: 

திருநங்கை என்று அழைக்க படும் தோழிகள் பிறப்பால் ஆண் என்று அடையாள படுத்த பட்டு பின் தன்னை பெண்ணாக உணர்ந்து வாழ முற்படுவரை குறிக்கும் சொல்லாக இன்று பயன் படுகிறது .

திருநங்கைகள் தினம் தொடங்கிய விதம்: 

உலகம் முழுவதும் சமத்துவம் ,விடுதலை ,சகோதரத்துவம் வேண்டி பல்வேறு விழாக்கள் கொண்டாட படுகிறது ,அப்படி திருங்கைகளின் சமத்துவம் சம உரிமை ,சம வாய்ப்பு இவை போல  மற்றும் பல உரிமை வேண்டி 2008ஆண்டு அரவாணிகள் நலவாரியம் தோற்றுவிக்க பட்டது தமிழ்நாட்டில்.ஏப்ரல் 15ம் தேதி ,அதே  தினத்தை தமிழக அரசு அரசாணை மூலம் 2011ம் அண்டு முதல் திருநங்கை தினம் ஆக அறிவித்தது .அன்று முதல் தமிழ் நாட்டில் திருநங்கைகள் தினம் கடை பிடிக்க படுகிறது .


சமூக நோக்கில் திருநங்கைகள் : 

இன்றைய காலத்தில் திருநங்கைகள் பற்றி ஒரு அளவு புரிதல் ஏற்பட்டு இருப்பது ஆரோக்கியமான சூழ்நிலை என்றாலும் மிக அதிக இடங்களில் இன்னும் திருநங்கைகள் 
கேவல படுத்தபட்டு ஒடுக்க பட்டே வருகின்றனர் என்பது கண்கூடு.திருங்கைகள் குறித்த புரிதல் நமது வீடுகளில் இருந்து தொடங்கி ஆக வேண்டும் ,வீடுகள் முதலில் ஏற்றால் தான் சமூகம் ஏற்க்கும் .ஆனால் மிக பெரும்பான்மையாக குடும்பங்கள் நிராகரிக்கின்றன்ர்  .அதனால் பெற்றவர் உறவினர் பிரிந்து கண்ணீர் விடும் திருநங்கைகள் இன்று ஏராளம். குடும்ப அரவணைப்பு அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்யும், இதனால்  திருநங்கைகள் தங்கள் வாழ்வில் சிறந்த இடம் அடைய முயற்சித்து வெற்றி பெறுவர்.பெற்றவருக்கு எல்லோரும் பிள்ளைகள் தானே .அந்த எண்ணம் எல்லா பெற்றவர்களிடம் வந்தாக வேண்டும் .உறவுகளும் மதிக்க வேண்டும் .

முழு சமூக அங்கீகாரம் இன்னும் கிடைக்காத நிலையிலும் கலைத்துறை ,எழுத்து துறை ,ஊடகம் மற்றும் சமூக பணி ,சொந்த தொழில் செய்து வந்தாலும் பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் அல்லது கடை கேட்டல் என்னும் நிலைக்கு தள்ள பட்டுள்ளதே இன்று காண கிடைப்பது. பாலியல் அடையாள சிக்கல் காரணம் ஆக இவர்களுக்கு எந்த ஒரு சமூக நீதியும் இங்கு நடப்பாக்கவில்லை இந்த தேசம் .இப்படி செய்து விட்டு இந்த சமூகம் திருநங்கைகளை குறை வேறு சொல்கிறது ,தவறை தன் மேல் வைத்து கொண்டு தான் ஒடுக்கும் இனத்தின் மீது தவறை சமைக்கும் கேவல எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த பாலின ஒடுக்குமுறை .


இனி செய்ய வேண்டியவை:

 நெடும் காலமாக புறக்கணிக்க பட்டு வந்த சமூகம் ஆன திருங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து தார வேண்டும்,அது போல் தனியார் துறையிலும் திருநங்கைகள் பணிவாய்ப்பு அளிக்க பட வேண்டும் ,வேலை செய்யும் இடங்களில் பாலின வேற்றுமை களைய பட வேண்டும் இது தான் முக்கியம் திருநங்கைகள் வாழ்வை முன்னேற்றம் 
செய்ய வேண்டிய முக்கிய பணியாகும் .  பல்வேறு வெளிநாட்டு நிறுவனம் பல நாடுகளில் திருநங்கைகளை பணி வாய்ப்பு வழங்கி இருக்கிறது,இந்தியாவில் அந்த நிலைமை வர வேண்டும் .



ஊடகம் எப்போதும் திருநங்கைகளை மிக கேவலமாக சித்தரிப்பு செய்தே வருகிறது ,பெண்களை போக பொருள் போல் சித்தரிப்பு செய்யும் ஊடகம் திருங்கைகளை கேவலமாக சித்தரிப்பு செய்வதில் வியப்பு இல்லை என்றாலும் சமத்துவம் வேண்டி போராடும் எல்லோரும் இவ்விடயத்தில் ஒன்றாக வேண்டியதும்  எதிர்க்க வேண்டியதும் அவசியம் . 
இதுவரை கனடா நாட்டில் மட்டுமே திருநங்கைகள் எல்லா உரிமையும் பெற்று சமத்துவ வாழ்க்கை வாழுகின்றனர் ,அந்த நிலமை நமது தேசத்தில் வர உறுதி எடுக்க பட வேண்டும் .



என் தெரிந்த அளவில் சமூக போரட்டம் செய்யும் திருநங்கைகள் 
1.கல்கி சுபிரமணியன் 
சகோதரி அமைப்பின் நிறுவனர் .தன் வாழ்வை போராட்டத்தை லிவிங் ஸ்மைல் வித்யா என்ற நூல் மூலம் சமூகத்துக்கு சொன்ன எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்,நடிகை ,திருநங்கைகளுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி வழக்கு பதிவு செய்தவரில் ஒருவர்  .சமூக போராளி 
2.ரோஸ் வெங்கடேசன் 
விஜய் தொலைகாட்சி இப்படிக்கு ரோஸ் நிகழ்வை தொகுத்து வழங்கியவர் ,பாப் ஆல்பமும் வெளியிட்டு உள்ளார் .
3.ரேவதி 
மிக சிறந்த எழுத்தாளர் ,திருங்கைகளை பற்றி உணர்வும் உருவகமும் என்ற நூலை எழுதி உள்ளார் .சமூக போராளி 
4.பிரியா பாபு 
கண்ணாடி அமைப்பின் நிறுவனர் மற்றும் மிக சிறந்த சமூக போராளி 
5.நர்த்தகி நடராஜ் 
பிரபல பரத நாட்டிய கலைஞர்,முதல் பெண் என்று  இந்திய கடவு சீட்டு பெற்ற முதல் நபர் .பல்வேறு விருதுகளுக்கு சொந்தகாரர் .   
6.பாரதி கண்ணம்மா 
தனது பாரதி கண்ணம்மா அமைப்பு மூலம் திருநங்கைகள் பொருளாதரம் உயர வேண்டி போராடும் சமூக போராளி ,மதுரையின் சுயேட்சை வேட்பாளர் (எம் பி ஏலக்சன் )
7.சுவப்னா கார்த்திக் 
அருமை தங்கை மிக சிறந்த சமூக போராளி,மதுரையின் எல்லா மக்கள் நல போராட்டத்திலும் உடன் நிற்கும் சகோதரி .தேர்வு எழுதும் உரிமையை போராடி பெற்று முதல் வகுப்பில் தேர்வு செய்ய பட்ட அன்பு தங்கை ,மாவட்ட ஆட்சியர் ஆவர் என்று எதிர்பார்க்க படுகிறவள் .
சமத்துவம் வேண்டி நாம் திருநங்கைகள் உடன் நிற்போம் ,சமத்துவம் படைப்போம் ,இந்நாள் அதை நமக்கு சொல்லவே ஏற்படுத்த பட்ட பொன்நாள் . 

http://nanban-anbudan.blogspot.com/2014/04/blog-post_15.html