3-வது பாலினமாக அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு திருநங்கைகள் மீண்டும் கோரிக்கை
தங்களை 3-ம் பாலினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநங்கைகளை 3-ம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்களை மூன்றாம் பாலினமாக
அங்கீகரிப்பதாக பிஹார் மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது.
திருநங்கைகளுக்கான உரிமைகளை அங்கீகரிப்பதில் முன்னணியில் இருப்பதாக
கருதப்படும் தமிழகத்தில் இன்னும் இதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த திருநங்கை சுதா கூறும் போது, “தமிழக அரசு
‘திருநங்கைகள் தினம்’ என்று அறிவித்த ஏப்ரல் 15-ம் தேதிதான் உச்ச நீதிமன்ற
தீர்ப்பு வெளியானது. தமிழகத்தின் நடவடிக்கைகளை நாடே உற்று கவனித்துக்
கொண்டிருக்கும் நிலையில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவிக்க அரசு
நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. திருநங்கைகளுக்கு சலுகைகள்
வழங்கினால் மட்டும் போதாது. அங்கீகாரமும் தேவை. குறைவான எண்ணிக்கையில்
இருப்பதால் திருநங்கைகளுக்கான தனி அமைச்சகம் வேண்டாம் என்று சமூக நலத்துறை
அமைச்சர் கூறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது” என்றார்.
‘சவுத் இண்டியா பாசிடிவ் நெட்வொர்க்’ (எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கான அமைப்பு) தலைவரான திருநங்கை எஸ்.நூரி கூறியதாவது:
திருநங்கைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்மாதிரி மாநிலமாக திகழும்
தமிழகம், அவர்களை மூன்றாம் பாலினமாக சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதில்
முன்முயற்சி எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. சட்டப்பூர்வ அங்கீகாரம்
பெற்றால்தான் அவர்களுக்கான கல்வியும் வேலையும் உறுதிப்படுத்தப்படும்.
திருநங்கைகளைவிட குறைவான எண்ணிக்கையில் உள்ள ஆங்கிலோ இந்தியர்களுக்கு கூட
சட்டப்பேரவையில் ஒரு இடம் இருக்கிறது. ஆனால், திருநங்கைகளுக்கு இல்லை.
2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட திருநங்கைகளுக்கான வாரியம் கடந்த சில ஆண்டுகளாக
செயல் படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
‘ப்ராவோ’ என்ற அமைப்பின் நிறுவனரான திருநங்கை ஆல்கா கூறும்போது,
‘‘மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்
கூறினாலும், அதற்கான சரியான வழிகாட்டுதல் அந்தத் தீர்ப்பில் இல்லை. சமூக
கலாச்சார அணுகுமுறையுடன் வெளிவந்திருக்கும் அந்தத் தீர்ப்பு, ‘திருநங்கைகள்
பிறரை ஆசீர்வாதம் செய்வார்கள், பிச்சை எடுப்பார்கள்’ என்று புராணங்களில்
குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டு கிறது. இந்த அணுகுமுறை, திருநங்கைகளை
சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை மட்டுமே மற்றவர்களிடம் உருவாக்கும்.
ஆனால், சமூக அறிவியல் அணுகுமுறைதான், திருநங்கைகளை சமமாக நடத்த வேண்டும்
என்ற மனப்பான்மையை ஏற்படுத்தும்’’ என்றார்.
http://tamil.thehindu.com/tamilnadu/
No comments:
Post a Comment