Monday, October 26, 2015

பத்மபாரதியின் ‘திருநங்கையர் சமூகவரைவியல்’ நூலறிமுகம், விமரிசகனின் பரிந்துரை September 11, 2015

இந்தியாவை பல்லினக்குழுக்களின் அருங்காட்சியகம் என்று சொல்வார்கள். மிகச்சிறிய நிலப்பகுதிக்குள்ள்ளேயே முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைப்பரப்புகள் பண்பாட்டுவெளிகள் காணக்கிடைக்கின்றன. எழுபதுகளில் நாட்டாரியல் முறையாக இங்கே அறிமுகமாகும்வரை அவ்வாழ்க்கைத் தளங்களை இலக்கியம் மட்டுமே அவ்வப்போது எடுத்து முன்வைத்துக் கொண்டிருந்தது. விதிவிலக்காகவே பிலோ இருதயநாத், நா.வானமாமலை போன்றவர்களைச் சொல்லவேண்டும்
நாட்டாரியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் நம் கல்விநிறுவனங்களில் அறிமுகமானபோது அவற்றை ஆராய்வதற்குரிய ஆய்வுமுறைமைகள் உருவாகிவந்தன. ஆய்வுக்குரிய நிதியும் பல்கலைகளால் வழங்கப்பட்டது. ஏராளமான மாணவர்கள் நாட்டாரியலை தங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். ஆனால் நம்முடைய நாட்டாரியல் ஆய்வுகளில் மிகக்கணிசமானவை ஆய்வறிஞர் பட்டத்தை எப்படியேனும் பெறும் நோக்குடன் அவசரக்கோலத்தில் செய்யப்பட்டவை.
நண்பர் நிர்மால்யாவின் நண்பர் ஒருவர் ஊட்டியில் நடைபாதை வணிகர். தோடர்களின் வாழ்க்கையில் ஆர்வமுடையவர். முக்கியமானவராகக் கருதப்படும் ஒரு மானுடவியலாளர் அவரிடம் கடிதமெழுதியே தகவல்களைக் கேட்டு கள ஆய்வுசெய்ததாக அறிவித்து நூல் ஒன்றை எழுதியதைப்பற்றிச் சொல்லி அவருக்கு தான் எழுதிய கடிதங்களையும் பதில்களையும் காட்டி வருந்தினார். கணிசமான ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவரே அந்தப்பேராசிரியர்தான்.
20051108-narikuravar_front
நம் நாட்டாரியலாய்வுகளில் பொருட்படுத்தக்கூடியவையே குறைவு. இன்னமும்கூட நம் சிறிய சாதிகள்,பழங்குடிகள், நாடோடிச்சமூகங்கள், விளிம்புநிலை வாழ்க்கைகள் முறையாக ஆவணப்படுத்தப்படாமலேயே உள்ளன. சொல்லப்போனால் பணி தொடங்கப்படவே இல்லை. விதிவிலக்காகச் சொல்லப்படவேண்டிய முக்கியமான பெயர் கரசூர் பத்மபாரதி. தமிழ்ச்சூழலில் ஒரு பெண்ணுக்கு இருக்கக்கூடிய அனைத்து சமூகத்தடைகளையும் கடந்து துணிச்சலாக விளிம்புநிலை மக்களிடையே சென்று உடன் வாழ்ந்து அவர் பதிவுசெய்த வாழ்க்கைச்சித்திரங்கள் தமிழுக்கு மிகமிக முக்கியமானவை. தன் எல்லைகளை கடும் உழைப்பாலும் ஆர்வத்தாலும் கடந்துசெல்லும் பத்மபாரதி போன்றவர்களே ஒரு சூழலின் முன்னுதாரணங்களாக இருக்கமுடியும்.
பத்மபாரதியின் முதல்நூல் ’நரிக்குறவர் இனவரைவியல்’ அவரது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டின் நூல்வடிவம். தமிழினி பதிப்பாக வெளிவந்த இது தமிழின் அறிவியக்கத்தில் பரவலான கவனத்தைப்பெற்றது. பொதுவாக முனைவர் பட்டத்திற்காக ஆய்வுசெய்பவர்கள் அதன்பின்னர் ஆய்வில் இறங்குவதில்லை. முதல் ஆய்வுக்களம் அளித்த அனுபவஞானத்துடன் பத்மபாரதி செய்த இரண்டாவது ஆய்வு ’திருநங்கையர் சமூக வரைவியல்’. தமிழ் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் ஒரு சாதனை என்றே இந்நூலை எந்த ஐயமும் இன்றி சொல்லமுடியும்.
வெறும்செவிவழிச்செய்திகளைக் கொண்டு அடித்தளமக்களின் வாழ்க்கையைப் பற்றிய இலக்கியப்பதிவுகளை உருவாக்குவது ஒரு பொதுப்போக்காக இன்று மாறிவருகிறது. காமம், வன்முறை இரண்டையும் சித்தரிப்பதற்கான ஒரு களம் என்பதற்குமேல் இவ்வெழுத்தாளர்களுக்கு அவ்வுலகம் மீது ஆர்வமில்லை. அவர்களைப்போன்றவர்கள் கவனிக்கவேண்டிய நூல் இது. ஓர் கறாரான ஆய்வுநூல் அவர்கள் உருவாக்கும் சமூகசித்திரங்களை எல்லாம் எத்தனை எளிதாகக் கடந்துசெல்லும் என்பதைக் காணலாம். ஒரு மாய உலகம்போல கவர்வது, விதவிதமான திறப்புகளை அளித்தவ்படி விரிவது இந்நூல்
திருநங்கையர் எனப்படும் மூன்றாம் பாலினத்தவரை வரலாற்றில். மொழியில், பண்பாட்டில், உயிரியலில் வைத்து வரையறைசெய்துகொள்ளும் இனவரலாறு என்னும் முதல் அத்தியாயமே இந்நூலுக்காகச் செய்யப்பட்டுள்ள உழைப்பைச் சுட்டிக்காட்டுவதுஇந்தியா முழுக்க மூன்றாம்பாலினத்தவர் எவ்வகைச் சொற்களால் அழைக்கப்படுகிறார்கள், பண்பாட்டில் அவர்களின் இடம் என்ன, அவர்களைப்பற்றிய இலக்கியப்பதிவுகள் என நீள்கிறது இது.
திருநங்கையர் ஒரு சமூகமாகவே நெடுங்காலமாகச் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் கோதி அல்லது கோட்டி என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. அத்தொழிலுக்காக தங்களை திருநங்கையராக ஆக்கிக்கொண்டவர்களும் உண்டு. குஜராத் பகுதிகளில் பாவையா என இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பஹுசரா என்னும் மாதாவை வணங்குபவர்கல். தென்னிந்தியாவில் ஜோகப்பா என்று இவர்கள் குறிக்கப்படுகிறார்கள். ரேணுகா எல்லம்மா போன்ற தெலுங்குநிலத் தெய்வங்கள் பால்மாறும் வல்லமைகொண்டவை. ஆகவே பெண்ணென தன்னை ஆக்கிக்கொண்ட ஆண் பூசகர்களே அவர்களை வழிபடவேண்டும். அதற்காக உருவான சமூகம் இது. இயல்பான மூன்றாம்பாலினத்தவரும் குறிநீக்கம் செய்துகொண்டவர்களும் அடங்கியது.
thirunangai-samuka-varaiveyal-54882
இத்தகைய தகவல்களின் வழியாக விரியும் ஒரு அகன்ற பகைப்புலத்தில் பத்மபாரதி சமகாலத்து மூன்றாம்பாலினத்தவரின் வாழ்க்கையைப்பற்றிய ஆய்வுக்குள் செல்கிறார். மூன்றாம்பாலினத்தவரை சமகாலத்தில் எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என விரிவாகச் சொற்பட்டியலிடுகிறார் பத்மபாரதி. அப்பட்டியலே ஒரு பெரிய பண்பாட்டு ஆவணம். ஆண்மையைப்போற்றும் ஒரு சமூகத்தின் அருவருப்பு கேலி ஆகியவற்றுடன் விசித்திரமானதில் புனிதத்தைக் காணும் மதமனநிலையையும் அதில் கான்ணமுடிகிறது . ஒன்பது, பொன்ஸ், கீரைவடை, கொவம், பொட்டை, பொட்டைமறி, கீரைச்சட்டி, சங்காண், உஸ்ஸ்புஸ் பொப்பிங்கா பிண்டகுமுக்கு தடிமுழுங்கி என நீளும் இச்சொற்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் நிலைப்பட்டுப்போன ஒரு மனநிலை உள்ளது.
மூன்றாம்பாலினத்தவர் தங்களுக்கென புராணங்களையும் வரலாறுகளையும் உருவாக்கிக்கொள்வதன் நுணுக்கமான சித்திரத்தை பத்மபாரதி அளிக்கிறார். சிவனும் மோகினி வடிவில் வந்த விஷ்ணுவும் கூடியபோது பிறந்தவர்களே மூன்றாம்பாலினத்தவர் என ஓரு தொன்மம், புகழ்பெற்ற அரவான் தொன்மம். போத்ராஜ் மகாராஜாவின் வழிவந்தவர்கள் என ஒரு வரலாறு. இவ்வாறு வாசித்துச்செல்லும்போது எழும் கேள்வி ஒன்றுதான். இந்த தொன்மங்களும் வரலாறுகளும் இவர்களுக்கு எதற்காகத் தேவைப்படுகின்றன? இவற்றினூடாக இவர்கள் கட்டி எழுப்புவது எதை? ஓர் சமூக அடையாளத்தையா? கூட்டான ஆளுமையையா?
மூன்றாம்பாலினத்தவர் பற்றிய அரசுக்கணக்கீடுகள் முதல் வெவ்வேறு வகையான புள்ளிவிவரங்களை தொகுத்து இந்திய சமூகக் கட்டுமானத்தில் அவர்களின் இடமென்ன என்று காட்டுகிறார் பத்மபாரதி. மூன்றாம்பாலினத்தவரின் தனிச்சமூக அமைப்பு குறித்த அவரது விவரணை தமிழில் மிக அரிதான ஓர் ஆவணப்படுத்தல். வடநாட்டில் பூனாவாலி, லாலன் வாலி ,புல்லாக்வாலி, டோங்கரிவாலி, லஸ்கர்வாலி சக்கலக் வாலி ,பேடிபஜார் என ஏழு குழுக்களாக இவர்கள் வாழ்கின்றன. ஹைதராபாதில் கௌரியம்மா ராஜம்மா என்னும் இருவரால் உருவாக்கப்பட்ட பெரியவீடு சின்னவீடு என்னும் பிரிவுகள் உள்ளன. தமிழ்நாட்டில் படாவாலி, சோட்டாவாலி என்னும் இரு பிரிவுகள். இவை கிட்டத்தட்ட சாதிப்பிரிவுகளேதான். பிரிவுகளுக்கிடையே போட்டியும் மேல்கீழ் நிலையும் உண்டு. அபூர்வமாக பூசல்களும். இப்பிரிவுகளை உருவாக்கிய முன்னோடிகளை காந்தாள் என்று கூறுகிறார்கள்.
மூன்றாம்பாலினத்தவர் ஒரு தனிச்சமூகம் என்பதனாலேயே தங்களுக்கென தனிமொழியையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். தாதகுரு, தாதி [பாட்டியின்தாய்] நானகுரு நானி [ பாட்டி] குரு [தாய்] சேலா [மகள்] என பலமொழிகளிலிருந்து வந்துசேர்ந்த சொற்கள் அடங்கிய அவர்களின் தனிமொழியை பதிவுசெய்கிறார் பத்மபாரதி. பதுவா[ சாபம்] பண்டாய்தல் [கேலி] சீசா [நியாயம்] அக்குவாப்பொட்டை [விரை நீக்கம் செய்யாத அரவானி] என விரியும் அந்த மொழி விசித்திரமான ஒரு உலகை நமக்குக் காட்டுகிறது.
மூன்றாம்பாலினத்தவரின் உறவுமுறைகளைப்போலவே அவர்களின் சடங்குகளும் தனித்தன்மைகொண்டவை. விரைநீக்கம் செய்துகொள்ளுதலே முதன்மைச்சடங்கு. முதிய மூன்றாம்பாலினத்தவர் இளையவர் ஒருவரை மகள்போல தத்தெடுத்துக்கொள்ளும் சடங்கும் உண்டு. அவர்களின் சடங்குமுறைகள் நம்பிக்கைகள் ஆசாரங்கள் அவர்களின் விடுகதைகள் என விரிவாக பத்மபாரதி பதிவுசெய்கிறார். அரவான் விழாக்கொண்டாட்டம் பற்றிய மிகவிரிவான சித்தரிப்பு உள்ளது. தமிழகம் முழுக்க திருவிழாக்களில் மூன்றாம்பாலினத்தவருக்கான பங்களிப்பை வட்டார வாரியாகப் பதிவுசெய்திருக்கிறார். தமிழகத்தில் அவர்களின் தொழில்கள், பொருளியல்நிலை ஆகியவற்றையும் தரவுகளின் அடிப்படையில் வரையறைசெய்திருக்கிறார். தமிழகத்தில் மூன்றாம்பாலினத்தவர்கள் தாங்களே தங்கள் வாழ்க்கையைப்பற்றி எழுதிய பதிவுகள் உள்ளன. ஆனால் அவை எவற்றிலும் இல்லாத அளவுக்கு விரிவான களஆய்வின் விளைவான செய்திகள் இந்நூலில் உள்ளன. இனிவரும் நூல்கள் அனைத்திற்கும் இது ஒரு முன்னுதாரணம்.
முழுமையான ஒரு உலகை காட்டும் அரியநூல் இது. பதிவுசெய்யப்படாத ஒரு வாழ்க்கையைச் சொல்லும் முதன்மைநூல் என்றவகையில் ஆய்வுத்துறையில் இது முக்கியமானது. தமிழகத்தின் சமூகசித்திரத்தின் இருண்டபகுதி ஒன்றின் சித்திரம் என்றவகையில் இலக்கியரீதியாகவும் முக்கியமானது. அத்துடன் சமூகப்பரிணாமம் பற்றிச் சிந்திப்பவர்களுக்கும் அரிய வினாக்களையும் ஆய்வுப்புலத்தையும் அளிக்கும் நூல் இது. ஒரு மக்கள்திரள் தன்னை தனியாகத் திரட்டியாக வேண்டிய சூழல் உருவாகும்போது அது தனிமொழியை, தனியான ஒழுக்கநெறிகளை, தனித்த தொன்மங்களை, தங்களுக்குரிய வரலாற்றை எப்படி உருவாக்கிக்கொள்கிறது என்பதை இந்நூல் காட்டுகிறது. அவ்வகையில் மானுடசமூகப்பரிணாமத்தின் ஒரு சிறிய துளி இதில் உள்ளது.

http://www.jeyamohan.in/78586#.Vi5oMm4xE3o

No comments:

Post a Comment