Wednesday, October 14, 2015

திருநங்கைகள்

திருநங்கைகள்

திருநங்கைகள் பங்கு பெற்ற நீயா நானா பார்த்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் டிவி இணைப்பு இல்லாமல் இருப்பதில் உள்ள சவுகரியம், நல்ல நிகழ்ச்சி என்று தெரிந்தபின் மெதுவாகப் பார்க்கலாம். ஊரடங்கிய பிறகு இப்படி ஒரு பதிவிடலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு நீயா நானா நிகழ்ச்சி வெற்றிகரமான ஒன்றாக இருப்பதற்கு அவ்வப்போது கிடைக்கும் இது போன்ற முத்துகளும் காரணம். இது ஒரு விவாதமாக இல்லாமல் அவர்கள் மட்டுமே பேசிய அவர்களின் உலகத்தைத் திறக்கும் கதவாக இருந்தது. பேசட்டுமே, அவர்களுக்கு காலங்காலமாக மறுக்கப்பட்ட மேடையை முழுக்கத் தந்தமைக்கு விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள்.
திருநங்கைகள் குறித்த பொதுமக்களின் பார்வைக்கு சினிமாக்கள், அதைத் திரும்பத் திரும்ப காமெடி என்ற பெயரில் ஒளிபரப்பிய டிவிக்கள் ஒரு காரணம். இது போன்ற மேடைகளை நிறையத் தந்து அவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகளை சென்சார் போர்டு தடை செய்யலாமே? இது குறித்த விவாதம் ஒன்றும் அவசியம்.
அவர்கள் பணம் வசூலிக்கிறார்கள் பொது இடங்களில் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று எதிர்கேள்வி கேட்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர்கள் யாராவது பதில் சொல்லலாம். “ஒரு கணக்கெடுப்பில் இந்தியாவில் குடும்பம் சாராது வாழும் திருநங்கைகளின் எண்ணிக்கை 4,90,000 என்று சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சிறுவயதில் வீட்டை விட்டு ஓடியவர்கள். ஆனால் இதன் பொருட்டு குழந்தைகள் காணாமல் போனதாக ஒரு புகாராவது பெற்றோரிடம் இருந்து பதிவாகி இருக்கிறதா?”
– ஷான்

http://kanavudesam.com/myblog/?p=3147

No comments:

Post a Comment