Wednesday, October 14, 2015

எனக்கு தெரிந்த திருநங்கைகள்

எனக்கு தெரிந்த திருநங்கைகள் (அரவாணிகள்) !

லிவிங்க் ஸ்மைல் வித்யாவை பதிவுகள் வழியாக அறிந்திருக்காவிடில் இந்த 'அரவாணி' என்ற சொல் பலருக்கும் அருவெறுப்பாகவே இருக்கும், தமிழ்மணத்தில் இணைவதற்கான முதல் முயற்சியில் புதிய பதிவர்கள் சேர்க்கைப் பட்டியலில் அவரது பதிவு பற்றிய குறிப்பும், எழுதும் தான் ஒரு அரவாணி என்றும் குறிப்பிட்டு இருந்தார், 'பரவாயில்லையே...இவர்களில் கூட பதிவு எழுதுபவர்கள் இருக்கிறார்களா ?' என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அடுத்த நாட்களில் அந்த பதிவு சேர்க்கைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. அதற்கான காரணம் தெரியவில்லை. பிறகு இருவாரம் கழித்தே அவரது பதிவின் பெயர் சேர்க்கைப் பட்டியலில் மீண்டும் வந்து அதன் பிறகு தமிழ்மணத்தில் பதிவுகள் திரட்டப்பட்டு வந்தது, முதலில் சேர்த்து பிறகு ஏன் திரட்டாமல் விட்டார்கள் என்பதற்கான காரணமாக நான் நினைத்தது, 'போலிப் பெயர்களில்' வரும் வழக்கமான பதிவாக (சோதனை செய்து) இருக்கக் கூடும் என்று நினைத்து பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு நண்பர் பாலபாரதி போன்றோர் முயற்சியால் சேர்த்திருப்பார்கள் என்றே நினைத்தேன். நிகழ்வை வைத்து இது எனது ஊகம் தான். ஆனால் முதலில் பட்டியலில் வந்து பிறகு திரட்டாமல் போனக் காரணம் எனக்கு சரியாகத் தெரியவில்லை.

*******

அரவாணிகள் பற்றி முதன் முதலில் அறிந்து கொள்ளும் போது வயது 7 இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கூரிலிருந்து நாகூருக்குச் செல்லும் சந்தனக் கூடு பத்து நாள் திருவிழாவின் போது, நாகையில் இருந்து நாகூருக்கு நடைப் பயணமாக சாலையில் கப்பல்கள் இழுத்துச் செல்லும் மாலை நேர நிகழ்வில், மாறுபட்ட பெண் நிறைய பவுடர் மேக்கப் உடன் ஆடிக் கொண்டே செல்வார், வயசுப் பசங்கள் அவளைச் சீண்டுவார்கள், அதன்பிறகு அருகிலும் வீட்டிலும் பேசிக் கொண்டு இருந்ததை வைத்து அவர் ஆண்தான் பெண்ணாக உடை அணிந்திருக்கிறார், என்று தெரியவந்தது...அந்த பெண்ணை கோஷா என்று சொல்வார்கள். 10 - 15 ஆண்டுகளாக அந்த கோஷாவை ஆண்டு தோறும் முழு மேக்கப்படில் அதே நிகழ்வில் பார்த்து இருக்கிறேன். முதன் முதலில் இளமையாக இருந்தவர் 50 வயது மேல் கன்னங்கள் ஒட்டியபடி இருந்தாலும் முழு மேக்கப் உடன் உற்சாகம் குன்றாமல் ஆண்டு தோறும் பலரை மகிழ்வித்தப்படி ஊர்வலத்தில் செல்வார்.

அதன்பிறகு 7 ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியின் (நடராஜன் தமயந்தி மேல் நிலை பள்ளி) அருகே புளியமரம் என்ற இடத்தில் சைக்கிள் சுற்றுதல் என்ற நிகழ்ச்சி நடைபெறும், 10 நாள் ஒருவர் கீழே இறங்காமல் சுற்றிவர மாலை 7 முதல் இரவு 11:30 வரை கலை நிகழ்ச்சிகள், பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கு ஆடுவார்கள், ரெக்கார்ட் டான்ஸ் அளவுக்கு மோசமாக இருக்காது, அதில் பெண்களாக ஆடுபவர்கள் அனைவரும் அரவாணிகளாக இருந்தனர். நிகழ்ச்சியின் போது பெண்களைப் போல் மேக்கப் போட்டு இருப்பார்கள், காலையில் அந்த பகுதிவழியாகச் செல்லும் போது பார்த்தால் கைலி மற்றும் மேலே ஒரு சட்டைப் போட்டு, கொண்டையுடன் இருப்பார்கள், முகத்தில் முடி மழித்த அடையாளம் இருக்கும்.

எங்கள் ஊரில் அரவாணிகளை யாரும் கேலி செய்வது கிடையாது. முன்பெல்லாம் நாகூர் / நாகைப் பகுதியில் அரவாணிகள் வீட்டு வேலை செய்வார்கள். பொது இடங்களில் பார்ப்பது அரிதுதான். எனக்கு ஒரு 18 வயது இருக்கும் போது, வீட்டின் அருகே இருக்கும் டீ கடையில் ஒரு அரவாணி வேலை செய்தது அதற்கு ஒரு 16 வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன், டீ கடைக்கு தேவையான தண்ணீரை எடுத்துச் செல்ல எங்கள் வீட்டு தண்ணீர் பம்புக்குத்தான் வரும், இடுப்பில் தண்ணீர் குடத்தை சுமந்து பெண்ணைப் போன்ற நளினத்தில் வரும், பெண்ணுடை எதையும் அணிந்திருக்காது, கைலியும் மேலே முண்டா பணியுனும் போட்டு இருக்கும், பேச்சுக் கொடுத்தால் பேசும். நாங்கள் யாரும் எதிரே கிண்டல் செய்வது கிடையாது, பின்னால் அதன் நடையைப் பார்த்து சிரிப்போம், அது அதை கவனித்துவிட்டால், கட்டைக் குரலில் 'என்னப் பார்க்கிறிங்க...நான் ஒம்போது அப்படித்தான் நடப்பேன்...எங்க கட்டை வேகுற வரைக்கும் இப்படித்தான்...' என்று சொன்னதும் அதுவே தன்னை இப்படிச் சொல்லிக் கொள்கிறதே என்ற திகைப்பும் பரிதாபமும் வந்தது. அதன் பெயர் நடராஜன், ஆனால் அதனை ஒருமுறை பார்ப்பவர்கள் மீண்டும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய தனிப்பட்ட கை கால் அமைப்பு இருந்தது, கை, கால்களில் ஆறு ஆறு விரல்கள், இரண்டு கையும் சேர்த்து 12 விரல்கள், அதே போல் கால்களில் மொத்தம் 12 விரல்கள். விரல் அமைப்புகளி பார்ப்பத்தற்கு வேறுபாடு தெரியாது, எண்ணிப் பார்த்தால் மட்டுமே கூடுதலாக இருப்பது தெரியும் அளவுக்கு 6 விரல்களும் வரிசைப்படி இருந்தது. 'பெண்ணாக நடந்து கொள்வதை திருத்துவதற்காக உடலில் சூடுபோட்டாங்க, கட்டி வச்சி உறிச்சாங்க அதான் ஓடிவந்துவிட்டேன்' என்று அதன் கதையைச் சொல்லியது,
('அது' என்று இங்கே குறிப்பிட்டு இருப்பது அஃறினை பொருளில் அல்ல, நான் அப்போதைய நினைவில் இருந்து எழுதி இருக்கிறேன்) கிட்டதட்ட ஒரு மூன்று மாத காலம் இருக்கும், அதன் பிறகு நடராஜனைக் காணவில்லை. அங்கே உள்ள பசங்களை விசாரித்தால், அதைப் பல இளவட்டங்கள் இரவில் வட்டமிடுவதால் கடைக்காரர் துறத்திவிட்டார் என்று சொன்னார்கள். அதுவும் சில சிலுமிஷங்களைச் செய்ததாக நெருங்கிய நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.

ஈராண்டுகள் கழித்து சென்னையில் வேலைக்குச் சென்ற பிறகு ஒரு ஞாயிறு மாலை தி.நகரில் நடந்து கொண்டு இருக்கும் போது, பேருந்து நிலையம் எதிரே அரவாணிகள் கூட்டம் ஒன்று கடைகடையாக ஏறி இறங்கினார்கள், ஒரு அரவாணியை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று பார்த்தேன்...அட நடராஜன்...கைகால்களில் 12 விரல்கள்...ஆனால் சேலையில் இருந்தது. '....நடராஜன் இங்கே எப்படி ...?' என்று நான் கேட்பதைத் திரும்பிப் பார்த்துவிட்டு .....வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடியது...'ஏன் ஓடுரே...நடராஜன் நில்லு ஓடாதே...'. நிற்காமல் வேகமாக ஓடி மற்ற அரவாணிகளையும் இழுத்துக் கொண்டு கடைக்குள் சென்றுவிட்டது, அதற்கும் மேல் செல்ல எனக்கும் தயக்கம், மூன்று அரவாணிகளும் தவறாக புரிந்து கொண்டு என்னை தாக்கிவிட்டால் அங்கிருந்து கடந்து சென்றேன். எனக்கு சிறுது ஏமற்றம் தான். சும்மா விசாரிக்கலாம் என்று நினைத்தால் 'அது சென்னையில் தான் இருக்கிறது என்று சொல்லிக் காட்டிக் கொடுத்துவிடும் அதனுடைய ஊர் காரன்' என்று நினைத்து ஓடி இருக்கும் என்றே நினைத்தேன்.

*******

1992 வாக்கில் பெங்களூரில் வேலை செய்தபோது சு.சமுத்திரம் அவர்களின் 'வாடாமல்லி' தொடர் ஆனந்தவிகடனின் வந்தது, அந்த வாரத்தில் அந்த கிழமை எப்போது வரும் என்று காத்திருந்து ஆவலுடன் படிக்கும் அளவுக்கு அந்த தொடர் அமைந்து இருந்தது, அப்பொழுதுதான் அரவாணியாக (சுயம்பு என்ற பாத்திரம்) மாறும் ஆண் உடலில் ஏற்படும் மாற்றம், அவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல், அடைக்கலம் தேடி ஓடுவது, அவர்களின் மும்பய், டெல்லி வாழ்க்கை, ஆண் உறுப்பை அகற்றிக் கொள்ளும் சடங்குகள், அவர்களைப் புரிந்து கொள்ளாத சமூக அவமானத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர நினைத்து துடிப்பது போன்றவற்றையெல்லாம் அந்த நாவல் வழியாகவே அறிந்து கொண்டேன். அந்த தொடர் கதையைப் படித்து முடித்த பிறகு நான் 'அதுவாக' நினைத்துக் கொண்டு இருந்த அரவாணிகளை 'அவளாக' நினைக்க ஆரம்பித்தேன்.

அரவாணி என்ற பெயருக்கு பதிலாக திருநங்கை என்ற சொல் பயன்படுத்துகிறார்கள், அரவாணி என்ற பெயரை விட திருநங்கை என்ற பெயரே பொருத்தமானது, மதச் சார்பற்றது. மூன்றாம் பாலினமாக அவர்கள் கேட்கும் அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். திருநங்கைகள் பற்றிய சமூகப் பார்வை மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்று சித்தாந்தம் பேசுகிறோம், ஆனால் அப்படி சமமாக இருப்பவர்களை மதிக்கிறோமா என்ற கேள்வியாகவே அரவாணிகள் நிற்கிறார்கள். பிச்சைகாரர்கள் கூட இவர்களை ஏளனமாகப் பார்க்கும் இழிநிலை மாறிவருகிறது என்பது ஆறுதலான ஒன்று.


அரவாணிகள் - உடலியல், மொழியியல், வாழ்வியல் என்ற நூலை தற்பொழுது வாசித்துக் கொண்டு இருக்கிறேன். சகோதரி லிவிங் ஸ்மைலின் கட்டுரைகள் கூட அதில் இருக்கிறது. தொகுப்பாசிரியர் மகாராசன். அதுபற்றி பிறகு எழுதுகிறேன். 
 
http://govikannan.blogspot.in/2008/11/blog-post_4604.html

No comments:

Post a Comment