Wednesday, October 14, 2015

அஃறிணைகள்


http://www.cinemaexpress.com/cinemaexpress/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%83%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&artid=110394&SectionID=142&MainSectionID=142&SEO=&SectionName=Review




அஃறிணைகள்

ரயிலில் கையேந்தும் திருநங்கைகளின் தொந்தரவுகள் பற்றி பல்வேறு விதமாக நாளேடுகளில் செய்திகள் வருதுண்டு. ஆனால் ரயிலில் கையேந்தியதற்காக அவமானப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்க்கை பற்றி பலருக்குத்ம் தெரிந்திருக்காது. அப்படியே அது தெரிய வந்தாலும், திருநங்கைகளுக்கே உரிய பிரத்யேக பிரச்னைகளை எல்லோராலும் புரிந்துகொள்ளவும் முடியாது.திருநங்கைகளின் கோபம் இந்த சமூகத்துக்கு எதிரானதாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் சமூகம் அவர்களை இழிவு நிலையில் பார்ப்பது. வட மாநிலங்களில் திருநங்கைகளை வளத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் ஆசீர்வதித்தால் எல்லாம் நன்றாக நடக்கும் என்றும் நம்புகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அவர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். ஆனால், வளர்ச்சியடைந்த தமிழகத்தில், திருநங்கைகளின் நிலை பழங்காலத்தில் இருப்பதாகவே உணரமுடிகிறது. பெண்களையே சமமாக நடத்தாத சமூகத்தில் திருநங்கைகளுக்கு என்ன நேரும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திருநங்கைகளை தனி ஜந்துகள் போலவே நடத்துகிறார்கள். அவர்களின் உலகில் மூளை உழைப்புக்கும் இடமில்லை. உடல் உழைப்புக்கும் இடமில்லை. இப்படி சமூகத்தின் அனைத்து தளங்களில் இருந்தும் அவர்கள் புறந்தள்ளப்படுவதால், ஆண்கள் உலகம் அவர்கûளை எளிதில் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த அடக்குமுறைக்கு எதிரான கோபம்தான் திருநங்கைகள் கையேந்தும்போதும் மற்ற நேரங்களிலும் கடுமையான செயல்பாடுகளாக மாறுகின்றது. நியாயமாகப் பார்த்தால் அப்படித்தான் மாறவேண்டும்.சில ஆண்டுகளாக திருநங்கைகள் பேசுவதற்கும், எழுதுவதற்கும், தங்களை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இருந்தபோதும், திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் பரவலாகவில்லை. இந்தச் சூழ்நிலையில் இரண்டு திருநங்கைகளின் வாழ்க்கையை டாக்கு - டிராமா போலக் கூறுகிறது பி. இளங்கோவன் இயக்கியுள்ள "அஃறிணைகள்' குறும்படம். (டாக்கு - டிராமா எனப்படுவது ஒருவரது நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய வாழ்க்கை சம்பவங்களை சித்தரித்து எடுக்கப்படுவதாகும்.)ஏற்கெனவே "என் பெயர் வித்யா' என்ற பெயரில் "லிவிங் ஸ்மைல் வித்யா' தனது வாழ்க்கையை எழுதியுள்ளார். அவரது வாழ்க்கை பற்றிய விவரிப்புகள் ஒருபுறம் காட்சிகளாக விரிகிறது. திருநங்கை ஆக வேண்டும் என்ற உணர்வுடன் அதற்குரிய மனக்குழப்பங்களில் இருக்கும் கிளாடியின் வாழ்க்கையும் மற்றொருபுறம் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த கிளாடிதான் "மூன்றாம் பாலினம்' என்ற சான்றிதழை தமிழக அரசிடம் இருந்து முதன்முறையாகப் பெற்று, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்தவர். படத்தில் இயல்பாக கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள் அதிகம் வெளிப்படவில்லை. பாலியல் தொழில் நடைபெறும் இடத்தில், கிளாடியின் மனதில் எழும் பெண்ணாக மாறிய கற்பனை போன்ற காட்சிகள் மிக சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.காட்சிப்படுத்திய விதம், படத்தொகுப்பு இவற்றில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏற்கெனவே பதிவாகிவிட்ட விஷயங்களை, காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். அவை சலிப்பை ஏற்படுத்துகின்றன. திருநங்கை என்றாலே கையேந்த வேண்டும் அல்லது பாலியல் தொழில் செய்ய வேண்டும் என்று கிளாடிக்குத் தெரிய வரும்போது, அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சி அவ்வளவாக நம்மை பாதிக்காமல் கடந்து போகிறது. அதேபோல், வித்யா ரயிலில் அவமதிக்கப்படும் நிகழ்வும் எழுத்தில் உள்ள அளவுக்கு காட்சிகளில் இல்லை.அதேநேரம் டாக்டர் ஷாலினி கூறும், அறிவியலின் விஷயத்தைப் புரிந்துகொண்டு, அந்த அடிப்படையில் நமது பார்வை அமைய வேண்டும் என்ற உணர்வு படத்துக்கு பெரும் பலம். "திருநங்கைகளை புரிந்துகொள்ளாமல் தவறாக நடத்துவது நமக்குத்தான் அவமானம்' என்று அவர் கூறும் போது, பெரிதாக பேசப்படும் நமது பழைய இலக்கியங்கள் திருநங்கைகளை சமமாக நடத்தாததும், சமூக ரீதியில் நமது முன்னோர்கள் செய்த தவறை இனிமேலும் தொடரக் கூடாது என்பதைப் படம் வலியுறுத்திச் செல்வது அழகு. சமூகத்தின் மத்தியில் திருநங்கைகளின் நிஜவாழ்க்கை எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அவசியத்தை இப்படம் உணர்த்துகிறது. நடிகர்கள்    : லிவிங் ஸ்மைல் வித்யா, கிளாடி,     உளவியல் நிபுணர் ஷாலினிஒளிப்பதிவு    : என்.ஆர்.பழனிக்குமார்படத்தொகுப்பு    : எஸ்.ஆனந்த்இசை    : ஜேவிஇயக்கம்    : பி.இளங்கோவன் ஐ.ஆர்.ஏ.எஸ்தயாரிப்பு    : கீதா இளங்கோவன்

1 comment:

  1. ஸ்மைலியும்., க்ளாடியும்., கல்கியும்...

    https://honeylaksh.blogspot.com/2010/10/blog-post_08.html

    சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவர்கள் ... திருநங்கைகள்..


    உடலால் ஆணாகவும் உள்ளத்தில் பெண்களாகவும் உளவியல் சிக்கல்களோடு வாழ்பவர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கும் ஆவணப்படம்.. அஃறிணைகள்... CREATURES..?



    கற்கை நன்றே .. கற்கை நன்றே..

    பிச்சை புகினும் கற்கை நன்றே..

    நன்றோ.. நன்றாய்க் கற்றும் பிச்சை புகுதல்..


    தன் பாலியல் அறுவை சிகிச்சைக்காக பிச்சை எடுத்தும்., பின்பு வியாபாரம் செய்தும்., உத்யோகம் பார்த்தும்.. தற்போது டைரக்டர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் கசியவைக்கும் கவிதைதான் இது..


    பாதுகாப்பே இல்லாத சூழலில் யாரென்றே தெரியாத பலரால் அடிக்கப்படும் நிலை.. நினைத்துப்பார்க்கவே நடுங்குகிறது அல்லவா.. பார்க்கும் போது பதற்றம் ஏற்படுத்தியது அந்த இயலாமை.. அழுகை..ஓலம் என்றும் சொல்லலாம்...


    கவுன்சிலிங் கொடுத்தால் சரியாகிவிடும்.. கல்யாணம் செய்தால் சரியாகிவிடும் என பெற்றோர் தவறான முடிவெடுக்காமல் என்ன பிரச்சனை என கண்டுபிடித்து அதற்கு ஏற்றதை செய்வதே சரியாக இருக்கும்..


    டாக்டர் ஷாலினி சொல்கிறார்.. ஒவ்வொரு குழந்தையும் உருவாகும் போதே பெண்ணாகத்தான் உருவாகுது என்கிறார்.. ஆறாம் வாரத்தில்தான் அது ஆணாகவோ., பெண்ணாகவோ தீர்மானிக்கப்பட்டு ஆண் என்றால் Y க்ரோமோசோம் இணைந்து டெக்ஸ்ட்ரோன் பரவி ஆண் உறுப்புகள் உருவாகின்றன..


    ஆண்கள் பால் கொடுக்கும் தேவை இல்லாமலே மார்புக் காம்புகள் இருப்பது இதனால்தான்.. ஆண் மிருகங்களுக்கோ வேறு எந்த உயிரினத்திற்கோ இப்படி இல்லை.. இப்படி பெண் மூலம் பெண்ணாகவே உருவாகி ஆணாக பிறக்கும் ஆண்கள் இவர்களை குறைத்து மதிப்பிடுவதும்., கேலி செய்வதும் ., சம்பந்தமில்லாமல் அடிப்பதும் என்ன நியாயம்..?


    க்ளாடி முதலில் ஒரு திருநங்கையை சந்திக்கும்போது அவரின் குடிசைக்கு வரும் ஒரு வாடிக்கையாளரைப் பார்த்து நடுங்குவதும்.. திருநங்கைகள் சமூகத்தால் மட்டுமல்ல.. அவர்களுக்குள்ளே ஏற்படும் உணர்வுக் குழப்பமும் ( தான் உருவத்தில் ஆணாக இருந்தும் ஆணின் மேலேயே காதல் வருவது..) முழுமையாய் வெளிப்பட்டு சங்கடம் ஏற்பட்டது..


    எறும்பைப் போலவும் புல்லைப் போலவும் தன் அந்தரங்கம் மிதித்துச் செல்லப்படும் வலி.. என் கண்கள் கசங்கி விட்டன..


    பிறப்பில் ஏற்படும் குறைபாட்டாலும் ., ஹார்மோன்களின் குளறுபடியாலும் ஏற்படும் இந்நிலைக்கு.. முழுமையான பெண்ணாக மாற முன்பு எல்லாம் தாயம்மா முறை என்றும் அதிகாரபூர்வமற்ற மு்றையில் செய்யப்படும் அறுவை சிகிச்சையே வழியாய் இருந்தது என்றும்.. தற்போது தமிழக அரசின் திருநங்கைகள் நல்வாழ்வு மையத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளிலும் கவுன்சிலிங்குகள்., டெஸ்ட்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றும் கிளாடி சொல்கிறார்.


    நம்மைவிட நளினமாக அழகாக உடையணியும் ரோஸும்., கல்கியும்., ஆச்சர்யப்பட வைத்து இருக்கிறார்கள்.. விஜய் டிவியில் இப்படிக்கு ரோஸ் சிலமுறை பார்த்து இருக்கிறேன்.. பால் சுயம்புவின் உயிரின்நிலை குறித்த கட்டுரைகள் பத்ரிக்கையில் படித்து அசந்திருக்கிறேன்.. திறமை எங்கு இருந்தாலும் ஜெயிக்கும்.. இன்பத்துப்பாலில் விளைந்த மூன்றாம் பால் இது..

    இன்பத்துக்காக பெற்றுவிட்டு புறந்தள்ளுவது என்ன நியாயம்.. பெற்றவர்களே யோசியுங்கள்.. உங்கள் ரத்தமும் சதையும் கொடுத்து நீங்க உருவாக்கிய உயிர்

    அது.. ( அது .. இது என்று தாங்கள் அழைக்கப்படும் அவலம் குறித்து ஸ்மைலியின் வரிகள்.. கவிதைகளாய் )


    லிங்கிஸ்டிக்கில் முதுநிலை படித்த ஸ்மைலியும்., முதல் முறை கல்லூரியிலேயே தான் பெண் என்று சர்டிஃபிகேட் கொடுத்து சேர்ந்த முதல் திருநங்கை க்ளாடியும்.. அவர்களின் தன்னம்பிக்கையும்.,க்ளாடியை புரிந்து உதவி செய்த.. தோழி சபியும்.. டாக்டர் ஷாலினியும்., மதுரையில் ஸ்மைலிக்கு முதலில் வேலை தந்த நிறுவனத்தாரும்., சரவணனை.. ஸ்மைலி என தன் கதையை வெளியிட உதவிய கிழக்கு பதிப்பகத்தாரும் என்னை வியக்க வைக்கிறார்கள்..


    இதை குறும்படமாக எடுத்த என் முகப்புத்தகத் தோழி கீதாவும்., அவர் கணவர் இளங்கோவும் பாராட்டப்படவேண்டியவர்கள்.. சரியான சமயத்தில் சரியான விழிப்புணர்ச்சி கொடுத்ததற்காகவும்.. இவர்களை என் நண்பர்களாக கொடுத்ததற்காகவும் ஆணாகிப் பெண்ணாகி நின்ற ., தான் பாதி உமைபாதி என்றான கடவுளுக்கு நன்றி..


    ” உன் சுதந்திரம் வெறும்

    கண்ணாடிக் குடுவைக்குள் அடக்கம்..

    எனக்கு இந்தப் பிரபஞ்சத்தைப்போல...”


    பிரபஞ்சம் உங்கள் கையில் தோழி.. ஸ்மைலி.. பின்னென்ன..:))

    இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்..:))

    இந்த நாள்.. இனிய நாளில் என் முகப்புத்தகத்தோழி கல்கிக்கு இந்த இடுகையை பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன்.. வாழ்க வளமுடன்.. நலமுடன்.. என் அன்புத்தோழி... கல்கி..

    ReplyDelete