Wednesday, October 14, 2015

திருநங்கை ( அரவாணிகள் ) - துரத்தும் வாழ்க்கை

திருநங்கை ( அரவாணிகள் ) - துரத்தும் வாழ்க்கை




நமக்கு வாழ்க்கையில் சோகம் ஆனால் சோகமே இவர்களுக்கு வாழ்க்கை - திருநங்கை நான் வித்யா

ஆரம்பமே அதிர(இ)டியாக உள்ளது. சரவணனாக இருந்து வித்யா என்ற பெண்ணாக மாறுவதற்கு என்ன ஒரு தீவிரம், உயிரையே பணயம் வைக்கும் தைரியம், துணிச்சல். நிர்வாணம் என்னும் அந்த முதல் அத்தியாயத்தை படிக்கும்போதே நமக்கும் அந்த வலியை உணர முடிகிறது.

சமீபத்தில் சன் நீயூஸில் அரவாணிகளைப் பற்றி ஒரு தொகுப்பில் ஒரு டாக்டர் பேசிய போது சுகாதாரமற்ற மருத்துவமனைகளில் ஆணிலிருந்து பெண்ணாக மாற அரவாணிகள் ஆபரேஷன் செய்துக்கொள்ளும்போது உடலளவில் பெறும் வேதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் சிலர் உயிர் இழந்துவிடுவதையும் பற்றி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறந்து கொண்டிருந்த நிலையில் ஆண் குழந்தையாக வறுமையான குடும்பத்தில் சரவணனாக வித்யா பிறந்ததை படிக்கும்போது, பரவாயில்லை அவர் தந்தை அவனை நன்றாக வளர்ப்பார் என்று எதிர்பார்ப்பு ஏமாற்றமானது.

ஐந்து வயது வரை வீட்டில் அவனுக்கு ஏகப்பட்ட செல்லம். சரவணனை நன்கு படித்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்த அவன் தந்தைக்கு அதுவே ஒருகட்டத்தில் வெறியாகவே மாறிபோகிறது. முதல் வகுப்பில் சரவணன் முதல் ராங்க் வாங்கியபோது இருந்த சந்தோஷம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவனை படி, படி, என்று வதைக்கத் தொடங்குவது நம்மையே வதைப்பது போன்று உள்ளது.

பள்ளி இறுதிவரை இப்படி ஏகத்துக்கும் அடிப்பட்டு வெறுத்து ஒருகட்டத்தில் தந்தையையே திருப்பி அடிக்க கை ஓங்கி விடுகின்றான். மென்மையான குணம் கொண்ட அவன் அடிமனதில் தன்மேல் இவ்வளவு கோபம் இருக்கிறது அன்றுதான் உணர்கின்ற அவர் அன்றிலிருந்து அவனைஅடிப்பதில்லை.

சிறுவயதிலிருந்தே பெண்கள் உடையை அணிந்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் அவன் ஆடுவதில் அலாதி ஆனந்தம் அடைவதும், தனிமையில் தன்னை பெண்ணாக பாவித்துக் கொள்வதுமே அவனுக்கு திருப்தியை தந்தது.

தனிமை நடனம் அவனுக்குள் இருக்கும் பெண்மையை வெளிப்படுத்துகிறது.
வளர வளர இது அவனை சுற்றிலுமுள்ளவர்களின் கிண்டலுக்கு உள்ளாகிறது.

பள்ளியில் சக மாணவர்களுடனும், மாணவிகளுடனும் சேரமுடியாமல் தவிப்பதாகட்டும். உறவினர்களும் அண்டை வீட்டுகாரர்களும் கேலியும், கிண்டலும் அவனை நரகத்துக்குள்ளாக்குகின்றன.

பள்ளி முடிந்து கல்லூரி சென்று பட்டம் பெறுவதாகட்டும், முதுகலை எம்,ஏ (மொழியியல்) படிக்க கல்லூரியில் சேர தந்தையிடம் போராடி வெற்றி பெறுவதாகட்டும். கல்லூரியில் நாடகத்தில் தன்னை ஈடுபடுததிக் கொள்வதாகட்டும். அவனுடைய சளைக்காத முயற்சி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பொதுவாக இதுப்போன்ற திருநங்கைகள் தங்கள் வாழ்வில் பள்ளியின் இறுதி ஆண்டை தாண்டுவதே பிரம்ம பிரயத்தனமாக இருக்க இவனோ இவற்றையெல்லாம் அனாவசியமாக தாண்டுகிறான்.

கல்லூரியில் அவ்வளவாக கிண்டல்கள் எதுவும் இன்றி படித்து முடிப்பதும். இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும் திருநங்கைகளின் தொடர்புகள் அவளையும் அவர்ளைப் போன்று தன்னை மாற்றிக் கொள்ள விரும்புவதும். இதற்க்காக வீட்டை விட்டு வெயியேறிவிடுகிறான்.

திருநங்கைகள் அனைவருக்கும் ஏற்ப்படும் பிரச்சனை இதுபோலும். இவர்களை வீட்டில் ஏற்றுக் கொள்ள மறுப்பதாலும் சமுதாயமும் இவர்களுக்கு வேலை தர முன்வராததாலும இவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

முக்கியமாக வீட்டில் இருப்பவர்கள். ஆணாக இருப்பவர்கள் பெண்ணாகவோ அல்லது பெண்ணாக இருப்பவர்கள் ஆணாகவோ தங்களை மாற்றிக்கொள்ளவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. மேலும் அவர்கள் அப்படி தங்களை மாற்றிக் கொள்ள முயலும்போது வீட்டை விட்டு வெளியேறும்படி நேறுகிறது.

இங்கிருந்து தன்னை முழுவதும் பெண்ணாகவே பாவிக்கிறாள். நன்பர்கள் உதவியுடன் சென்னைக்கு வந்து திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்களுக்கு சென்று அவர்களுடன் சேர முயற்ச்சிக்கும்போது ஏற்கனவே ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் சிலர் அவளிடம் எங்காவது பணி புரிந்து கொண்டு தங்களுடன் தங்கலாம்.
என்று கூறும் அறிவுரை கூறுகிறார்கள்.

திருநங்ககைளே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு, திருநங்கை ஆவதில் உள்ள கஷ்டங்களை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

யார் எவ்வளவு கூறியும் விடாப்பிடியாக மறுத்து நீங்களெல்லாம் பெண்ணாக மாறி இருக்கும்போது நான் ஆக முடியாத என்று வித்யா தனக்குள் பொறுமுவதும். பெண்ணாக மாற அதற்குண்டான ஆபேரேஷன் பணத்திற்க்காக புனே சென்று திருநங்கைகளுடன் தங்கி பிச்சை எடுப்பதில் செல்கிறது.

திருநங்கைகளுக்கென்று உள்ள கட்டுப்பாடு மற்றும் அவர்கள் உறவுநிலையைப் பற்றி இங்கு விரிவாக விவரிக்கிறார். இது திருநங்ககைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

வீட்டைவிட்டு வெளியேறிய வித்யாவை அவள் வீட்டில் தேடுகிறார்கள். நண்பர்கள் மூலம் செய்தி அறிந்த வித்யா நடுவில் சென்னை வருவதும். தந்தை மற்றும் உறவினர்களை கண்டு திகைக்கிறாள். அவர்கள் மறுபடியும் அவளை மாற சொல்வதும். அவள் தன் முடிவில் பிடிவாதமாக இருந்து விடுகிறாள். மறுபடியும் பூனே திரும்புகிறாள்.

முதுகலை படித்துவிட்டு பிச்சை எடுப்பதில் ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்ப்பட்ட சிறிய தயக்கத்தை கூட பெண்ணாக ஆக வேண்டும் என்ற வெறியில் உதறிவிட்டு கடை, கடையாக, ரெயில், ரெயிலாக பிச்சை எடுக்கிறாள்.

பிச்சை எடுக்கும்போது ஏற்ப்படுகின்ற அவமானங்களும், திட்டுகளை விட ஒருமுறை ரவுடிகளிடம் மாட்டிக்கொண்டு, அவர்கள் அவளை பெல்ட்டால் ரவுண்டு கட்டி அடிப்பதை படிக்கும்போது. நிர்வாண ஆபரேஷனை படிக்கும்போது ஏற்ப்படுகின்ற வலி இங்கேயும் ஏற்ப்படுகிறது.

திருநங்கைகள் ஏன் பிச்சை எடுக்க நேரிடுகிறது என்பதை தன்னுடைய அனுபவத்தில் கண்டதை மிகுந்த மனவேதனையுடன் விவரிக்கிறார். சமுதாயம் தங்களை ஏன் ஒதுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிறார்.

திருநங்கைகள் நடந்துக் கொள்ளும் விதம் பற்றி சமுதாயம் அவர்கள் மீது சாற்றும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில் அது அவர்கள் இயல்பல்ல என்றும். அவர்கள் தங்கள் தற்காப்பிற்காகவே அவ்வாறு நடந்துக் கொள்கிறார்கள் என்பதை மிகவும் அழுத்தமாக கூறியுள்ளார்.

ஒருவழியாக பிச்சை எடுத்து பணம் சேகரித்து கொண்டு கொடுரமான அந்த ஆபரேஷனையும் அதற்க்கு பின் 40 நாட்கள் அந்த வலியையும் பொறுத்துக் கொண்ட பின்னர் அவளுக்கு திருநங்கைகளுக்கான சடங்கு நடத்தப்படுகிறது.

அந்த சடங்கில் அவளுக்கு தான் பெண் என்ற அங்கிகாரத்தினால் கிடைக்கும் ஆனந்தம் இத்தனை நாட்கள் அவள் பட்ட வேதனைகளுக்கு மருந்தாகிறது.

திருநங்கை ஆனால் முடிந்ததா? வயிறு என்று ஒன்று இருக்கிறதே திருநங்கைகள் முறைப்படி யாராவது ஒரு நானி எனப்படும் மூத்த திருநங்கைக்கு கீழ் மறுபடியும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை.

முன்பு திருநங்கை ஆவதற்க்காக இருந்த வெறி நிறைவேறி விட்டதால் இப்பொழுது பிச்சை எடுப்பதில் நாட்டம் இல்லாமல் போகிறது.

சரி ரயிலில்தான் பிச்சைதான் எடுக்கவேண்டுமா? ஏன் தொழில் செய்யக்கூடாது என்று முடிவுசெய்து கீ-செய். பர்ஸ். டார்ச்லைட் என்று விற்க்கப்போனால் பிச்சை எடுக்கும்போது காசு கொடுத்தவர்கள் கூட இப்பொழுது வாங்க மறுத்தார்கள்.

திருநங்கைகள் தங்கள் சொந்த முயற்சியினால் முன்னேற முயல்வதற்க்கு சமுதாயம் உதவ தவறுவதை இங்கு மிகவும் ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

பிச்சை எடுக்கும் வாழ்க்கை வெறுத்துப்போய் நானியிடம் இருந்து தப்பித்து திரும்ப சென்னை வருவது என்று அவளுடைய வாழ்க்கைக்கு சிறிதும் ஓய்வில்லாமல் செல்கிறது.

சென்னையிலிருந்து தன் சொந்த ஊரான தஞ்சாவூர் சென்று தன் தமக்கையின் வீட்டில் தங்குகிறாள். வயிற்று வலி ஏற்பட்டு மறுபடியும் ஒரு ஆபரேஷன் செய்து கொள்கிறாள். அவளுடைய தமக்கையும் அவள் கணவரும் ஆபரேஷன் செலவுக்கு உதவுகிறார்கள்.

அதற்கு மேல் அவர்களால் அவளுக்கு உதவ முடியவில்லை. அவர்களுக்கு தொந்தரவாக இருக்க விருமபாத வித்யா மறுபடியும் நண்பர்கள் உதவியுடன் வேலை தேடி அலைய வேண்டியதாகிறது.

திருநங்ககைகளுக்கு இருக்க இடம் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. எங்கு சென்றாலும் உதாசீனம் ஒருவழியாக வித்யாவிற்க்கு ஒருவழியாக அவர்கள் நண்பர்கள் மூலமாக வேலை கிடைத்து இடமும் கிடைக்கிறது.

வித்யா என்ற தன் பெயர் மாற்றத்திற்க்காக அரசு அனுமதியை வேண்டி இன்னும் அலைந்துக் கொண்டிருக்கிறார். அதில் ஏகப்பட்ட சிக்கல் வேறு. படித்த தன்னைப் போன்ற திருநங்கைகளுக்கே இந்த நிலைமை என்றால், படிக்காத பாமர திருநங்கைகளின் நிலையை எண்ணி வருந்துகிறார்.

மொத்தத்தில் திருநங்கைகளின் பிரச்சனைகளை தன் வாழ்க்கையின் ஊடே அருமையாக விவரித்திருக்கிறார் வித்யா. அவருடைய கேள்விகளுக்கான விடைகள் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.

http://prathipalipaan.blogspot.in/2008/12/blog-post_15.html

No comments:

Post a Comment