Wednesday, July 17, 2013
தமிழ்நாட்டு அரசு வேலையை பெற்ற முதல் திருநங்கை #குணவதி
தமிழ்நாட்டு அரசாங்க ஊழியராக அமரும் முதல் திருநங்கை #குணவதி
வேலைக்காக காத்திருக்கும் ஒரு சமூகம்:
======================================
மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை அளிப்பதன் மூலம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.
அப்படித் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ள அரசிடம் கோரிக்கை வைத்து பயன் பெற்றுள்ளனர் சிலர்.
ஆனால் அரசின் உதவிக்காக காத்திருக்கும் மனித இனத்தின் ஒரு பகுதியினர் இன்றளவும் காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த திருநங்கை குணவதி. அண்மையில் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியரை அணுகினார். அதன் விளைவு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவருக்கு குழந்தைகள் பாதுகாக்கும் பணி வழங்கப்பட்டது. மாநிலத்திலேயே முதல் அரசுப் பணி பெற்ற திருநங்கை இவரே. மறுபுறமோ, அரசுப் பணியல்ல.தனியார் பணிகூட கிடைக்காமல் பல திருநங்கைகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
மனிதர்களுக்கு நிகராய் இவர்களை நடத்த நம் சமூகம் பல நேரங்களில் தவறிவிடுகிறது என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வரும் நிலையில், சமூகத்தின் ஏளனப் பார்வையால் வேலை ஏதும் கிடைக்காமல் பெரும்பாலான திருநங்கைகள் பணத்திற்காக கையேந்தி நிற்கின்றனர். இந்த நிலையை மாற்ற, தங்களுக்கு நிரந்தர ஊதியம் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோருகின்றனர் திருநங்கைகள். அதற்கான யோசனையையும் கூட அவர்களே முன்வைக்கின்றனர்.தற்போது பிரபலமடைந்து வரும் தமிழக அரசின் அம்மா உணவகத்தில் பணிவாய்ப்பு கோருவதுதான் அது.
அம்மா உணவகம் வழிக் கொடுக்குமா?
அம்மா உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளர் உட்பட 12 பெண்கள் பணியமர்த்தப்படுகின்றனர். சிக்கன மற்றும் நாணய சங்கம் சார்பில் தேர்வு செய்யப்படும் பெண் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் திருநங்கைகளுக்கும் வாய்ப்பளித்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment