Wednesday, October 14, 2015

கல்கி சுப்பிரமணியம்: தன்னை செதுக்கிய வெற்றி திருநங்கை!

கல்கி சுப்பிரமணியம்: தன்னை செதுக்கிய வெற்றி திருநங்கை!


கல்கி சுப்பிரமணியம், தன் மெல்லிய குரலில் என்னிடம் உற்சாகமாக தொலைப்பேசியில் பேச தொடங்கினார். நடிகர், எழுத்தாளர், திருநங்கை ஆர்வலர், தொழில்முனைவர் போன்ற பன்முகங்களை கொண்டவர் இவர்.
கல்கி எப்படிப்பட்டவர் என்பதற்கான சுருக்கமான விளக்கத்தை அவரிடம் கேட்டால், உடனே பதில் நமக்கு கிடைக்கிறது, "பெண்ணாக இருப்பதில் பெருமை அடையும் கல்கி, ஆண்- பெண் சமத்துவம், மற்றும் திருநங்கைகள் உரிமைகளுக்காக போராடும் ஆர்வலர் இவர். தற்போதைய நாகரீக பெண்களை போல நடந்துக்கொண்டாலும், மனதளவில் கிராமிய சிந்தனைகளோடு வாழ்ந்து வருபவர். ஒரு கலைஞராக இருப்பதோடு தொழில்முனைவராகவும் இருக்க விருப்பம் கொண்டவர், நல்ல கவிதாயினி, சுமாரான சமையல்காரர், எளிதில் கோபம் அடையக்கூடிய இளம் பெண். சில சமயம் ஞாபக மறதியில், தலையிலேயே மூக்கு கண்ணாடியை வைத்து, மற்ற இடங்களிலும் தேடிக்கொண்டு இருப்பவர்." என்று தன்னை பற்றி அழகாக அறிமுகப்படுத்தி கொண்டார் கல்கி.
ஆணாக பிறந்து, 16 வயதில் தான் யார் என்ற குழப்பத்திலிருந்து இன்று வரை, கல்கி பல சோதனைகளையும், சவால்களையும் கடந்து வந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இருப்பினும், தன்னுடைய சோதனைமிக்க நாட்களில், எல்லாம் நன்மைக்கே என்று அவர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையும், நேர்மறை சிந்தனைகளும் கல்கியை இன்றுவரை பயணித்து கொண்டு வந்துள்ளது. "ஒரு ஆண், கதாநாயகியாக மாற முடியும் என்றால், இந்த உலகத்தில் அனைத்தும் சாத்தியமே. அதற்கு தேவை தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் தீர்க்கமான குறிக்கோள்." என்று எல்லோரிடமும் சாதாரணமாக கல்கி சொல்லுவதுண்டு.
திருநங்கையாக இருப்பதில் வெட்கம் கொண்ட பல பேருக்கு மத்தியில், தன்னை திருநங்கை என்று தைரியமாக அடையாள படுத்திக்கொண்டது மட்டுமல்லாமல், அவ்வாறு இருப்பதில் வெட்கப்பட தேவையில்லை என்றும் விளக்கினார். இதுவே அவருக்கு பெரிய சவாலாகவும் அமைந்தது. "மற்றவர்களை போல, எங்களை போன்றவர்களாலும், இந்த சமூகத்திற்கு பல வழியில் உதவியாக இருக்க முடியும்." என்கிறார் கல்கி.
இன்று இவர் அடைந்திருக்கும் இடத்திற்கு வந்த பாதையில் நிறைய தடைகளும், கஷ்டங்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 16 வயதில் தன்னுடைய உடலளவில் இருந்த அடையாளத்திற்கும், மனதளவில் இருந்த வேறொரு அடையாளத்திற்கும் இடையே கல்கி போராடியது தான் அவருடைய முதல் மற்றும் பெரிய பிரச்னையாகவும் கருதுகிறார். தன்னுடைய உண்மையான அடையாளத்தை கண்டறிவதில் இருந்த சிரமத்தை பகிர்ந்துக்கொள்ளும் போது, "பள்ளியில், பெண் தன்மையுடன் இருந்த ஆணாக குழம்பிய நிலையில் இருந்தேன். அது தான் என்னுடைய கடுமையான காலம்." என்று கூறுகிறார் கல்கி.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும், இத்தகைய குழப்பத்தோடு இருக்க முடியாது என்று சிறுவனாக இருந்த போதே உணர்ந்து கொண்டார் கல்கி. தன்னுடைய உடலிற்கும், மனதிற்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருப்பதை உணர்ந்து சற்று அதிர்ந்தும் போயிருந்தார். குடும்பத்தார் , இந்த நிலையில் தன்னையும் தன் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகமும், குழப்பமும் பல முறை இவரை தற்கொலை முயற்சி எண்ணத்தில் ஆழ்த்தியுள்ளது என்கிறார். இருந்தாலும், அது போல் செய்யாமல், திடமாக முடிவெடுத்து தன்னுடைய உண்மையான பாலினத்தை பற்றியும் தான் உணர்ந்ததையும் குடும்பத்தாரிடம் தைரியத்தை வரவழைத்து கொண்டு சொன்னார். "நான் சொன்னதை கேட்டதும், என் பெற்றோர்கள் உடைந்தே போனார்கள். அவர்கள் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்க என்னால் முடியவில்லை. என்னை அப்படியே ஏற்றுக்கொண்டால், அவர்களை பெருமையாக்குவேன் என்று சத்தியமும் செய்தேன். அதன் படி, எனக்கு அவர்கள் வாய்ப்பும் அளித்தார்கள். அதற்காக கடினமாக உழைத்து என் சத்தியத்தை நிறைவேற்றியுள்ளேன் என நினைக்கையில் சந்தோஷம் அடைகிறேன்" என்கிறார்.
கல்கி அடைந்த வளர்ச்சியின் பட்டியல் சற்று நீளமானது. ஒரு நண்பரின் மூலம் தொழிலில் முதல் அடி வைப்பதற்கு கல்கிக்கு வாய்ப்பமைந்தது. அந்த இளம் கலைஞர், தன்னுடைய இசை வாத்தியங்களையும், கலையையும் தொழில் மூலம் சந்தைபடுத்த அவரிடம் உதவி கேட்டார். ஒரு சிறு உதவியாக தன்னுடைய சிறு முதலீட்டை செய்த கல்கி, அந்த இளைஞருடன் இணையம் மூலம் அப்பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினார். "பிராண்ட் கல்கி நிறுவனம்" (Brand Kalki Enterprises) பிறந்தது அப்போதுதான். "இந்த தொழில் மூலம் நன்றாக சம்பாதித்தது மட்டுமல்லாமல், எனக்கு லாபமும் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது. தற்போது, என்னுடைய நண்பரும் சொந்தமாக இந்த தொழிலை தனியாக எடுத்து பல நாடுகளில் நடத்தி வருகிறார்."
அதுமட்டுமல்லாமல், "கல்கி ஆர்கானிக்" (Kalki Organic) என்ற நிறுவனத்தையும் தொடங்கி, ரசாயனங்கள் கலக்காத இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சுத்தமான சோப்பு, மற்றும் அன்றாடத்திற்கு தேவையான சுகாதார பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கவிருக்கிறார்.
இது தவிர, கல்கி கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருநங்கைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சமத்துவத்தை பற்றி எழுதி வருகிறார். கவிதைகளின் மீது காதல் கொண்ட கல்கி தன் முதல் தமிழ் கவிதை தொகுப்பான 'குறிஅறுத்தேன்" புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதை பற்றி கல்கி கூறுகையில்,
"எனது கவிதைகள், என்னைப் போன்ற பெண் அல்லாத பெண்களுடைய பயணத்தை பற்றி துல்லியமாக விளக்கும். என்னுடைய முதல் இலக்கியமே எனக்கு ஒரு பெயரை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், எனக்கு எழுத்தாளர் என்ற ஒரு அங்கீகாரத்தையும் தந்துள்ளது. தற்போது, என்னுடைய இரண்டாவது தமிழ் புத்தகம் மற்றும் ஆங்கில புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்துகிறேன்."
கௌரவமான வாழ்க்கை, சமூகத்தில் ஒரு அங்கம், அடிப்படை வாழ்வாதாரம் இதற்காக மட்டுமே நம் நாட்டில் திருநங்கைகள் போராடிய வண்ணம் இருக்கின்றனர். "எங்களில் பல பேர், தங்களுடைய சொந்த குடும்பங்களை விட்டே துரத்தப்படுகின்றனர். தவிர போதிய கல்வி இல்லாமை, நல்ல இருப்பிடம், மருத்துவ வசதிகள் என்று எந்தவொரு பிடிப்பும் இல்லாமல், எப்படி வாழ்வது என்று தெரியாமல் பாதுகாப்பற்ற ஒரு எதிர்காலத்தோடு வாழ்ந்து வருகிறோம்." என்கிறார் கல்கி. இதற்காக, இந்தியாவில் சட்டப்பூர்வமாக திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவருகிறார். சட்டத்திற்கு தங்களுடைய உரிமைகளை எடுத்து விளக்குவது, கல்வி துறையில் எந்தவொரு பேதமும் இன்றி சமமாக கல்வி அளிக்க வேண்டும் என்ற முழக்கம், இதனால் ஒரு ஆரோக்கியமான கல்வி சூழலை உருவாக்கி தருவது போன்ற பல சமூக அக்கறையுடன் திருநங்கைகளுக்காக கல்கி போராடி வருவது குறிப்பிடத்தக்கது. சமூகத்திலும், சட்டத்திலும், பொருளாதாரத்திலும் ஒரு முக்கிய உரிமையை இவர்களுக்கு அளிக்க முனைப்புடன் செயல்படும் "சஹோதரி" ஃபவுண்டேஷனுடன் இணைந்திருக்கிறார் கல்கி. "சஹோதரியின் மூலம் திருநங்கைகளுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும்." என்று தன்னுடைய முயற்சிகளை பற்றி விவரிக்கிறார் கல்கி.
தன்மேல் இருக்கும் நம்பிக்கையையும், சுயமரியாதையையும் ஒரு உத்வேகமாக எடுத்துக்கொண்டிருக்கும் கல்கி, "நான் கொஞ்சம் வித்தியாசமானவள் தான், இருந்தாலும் எல்லோரிடம் இருக்கும் நல்ல குணங்கள் என்னிடமும் உண்டு. அந்த நல்ல விஷயங்களை இன்னும் சிறப்பாக மாற்றிக்கொள்ள தான் நான் முயற்சித்தி வருகிறேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுத்தர வாழ்க்கை தவறுவதில்லை." எங்கிறார். திருநங்கைகளுக்காக கல்கி எடுத்து வைத்த அடுத்த அடி, 2009ம் ஆண்டில் இவர் வடிவமைத்த திருநங்கைகளுக்கான திருமண இணையத்தளம். தவிர, 2011ம் ஆண்டில் 'நர்த்தகி' என்ற தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடித்தார். திருநங்கைகள் சமூகத்தை பற்றி அழகாக விளக்கிய இந்த படத்தின் மூலம், கல்கிக்கு விமர்சகர்கள் மற்றும் உலகளாவிய மக்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது.
இவருடைய வெற்றி பாதையில் குடும்பத்தினரும் நண்பர்களும் பெரும் பங்கு வகிகின்றனர், இவருக்கு வந்த கஷ்டங்களை தாண்டி இருந்த தைரியம் தான் கல்கியை முன்நோக்கிச் செல்ல உறுதுணையாக இருந்தது. "ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தைரியமாக எழுந்து, அந்த கஷ்டமான சூழலை மாற்ற முயற்சிக்க வேண்டும். விரக்தி என்பது தோல்வியால் வரக்கூடிய விஷயம் அல்ல. சூழலை எதிர்க்கொள்ளாத பயத்தின் விளைவு தான் விரக்தி. எனக்கு, என்னுடைய குடும்பத்தினருடைய அன்பும், அரவணைப்பும் தான் மிகப்பெரிய பலம். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயமும் கூட."
கல்கிக்கு இருக்கும் இந்த அசாதாரண தைரியம் புத்தகங்கள் மூலமாகவே வந்தது. "எனக்குள் உருவாகியுள்ள தைரியம், நான் தேர்ந்தெடுத்து படித்த புத்தகங்களால் உண்டானது. என்னுடைய வாழ்க்கையை நான் படித்த புத்தகங்களிலிருந்து கிடைத்த அறிவு மூலம் வடிவமைத்துக்கொண்டேன்." என்று பகிர்ந்துக்கொள்கிறார் கல்கி.
'விதியைஎழுதினேன்' என்ற இவரின் கவிதைத்தொகுப்பு, திருச்சி பிஷப் ஹெப்பர் கல்லூரியில் (Bishop Heber College) பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அவரின் வெற்றி பயணத்தை பாராட்டியபோது, "நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். இன்று நான் நானாக இருப்பது ஒரு ஆசிர்வாதமே." என்கிறார் கல்கி தன்னடக்கத்துடன்.

http://tamil.yourstory.com/read/d92780ae68/kalki-subramaniam-carved-itself-transgender-win-

No comments:

Post a Comment