மா. பொன்மாரி
முன்னுரை
உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் முக்கியப் பொழுதுபோக்குச்
சாதனமாக இருப்பது தொலைக்காட்சி ஆகும். இத்தொலைக்காட்சிகள்
பெரும்பான்மையாகத் திரைப்படங்களையும், திரைத்துறையைச் சார்ந்துமே இயங்கிக்
கொண்டிருக்கின்றன. திரைப்படங்களில் சமூகம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள்
கதைகளாக இடம் பிடித்திருக்கின்றன. இந்தக் கதைகளில் சமூகத்தின் பல்வேறு
நிலையிலிருப்பவர்கள் குறித்த செய்திகளும் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.
மூன்றாம் பாலினமாகக் கருதப்படும் திருநங்கைகள் குறித்தும் பல்வேறு
காட்சிகள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இந்தியத் திரைப்படங்களில்
திருநங்கைகள் மிக அரிதாகவே கண்ணியமானவர்களாகக் காண்பிக்கப் பெறுகிறார்கள்.
பல திரைப்படங்கள் இவர்களைக் கேலி, கிண்டலுக்குரிய பாத்திரமாகப் பதிவு
செய்துள்ளனர். திரைத்துறையில் திருநங்கைகள் பதிவு பெற்றுள்ள விதத்தினை
இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
நன்முறையில் காண்பிக்கப்பட்ட படங்கள்
திரையுலகில் திருநங்கைகளுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியவர்
இயக்குநர் மணிரத்தினம் ஆவார். இவருடைய ‘பம்பாய்’ படத்தில் கலவரச் சூழலில்
பிரிந்து வாடும் இரட்டைச் சகோதரர்களில் ஒருவன் தனியாகத் திகைத்து நிற்கும்
வேளையில், அச்சிறுவனைக் காப்பாற்றுவது தெருவோரத்தில் வசிக்கும் திருநங்கை
ஆவார். தொடர்ந்து வரும் காட்சியிலும் உயிரின் மதிப்பு குறித்து,
கலவரக்காரர்களிடம் வீரவசனம் பேசுவதாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளது.
‘தெனாவட்டு’ படத்தின் தொடக்கத்தில் தமிழகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலைக்
காட்டுகின்றனர். இறுதியில் வில்லனிடம் இருந்து கதாநாயகர்களைக்
காப்பாற்றுபவர்களாகப் பதிவு செய்யப் பெற்றுள்ளது.
‘சித்திரம் பேசுதடி’என்னும் திரைப்படத்தில் நற்குணமுள்ள கதாப்பாத்திரமாகத்
திருநங்கை படைக்கப்பெற்றுள்ளார். துணி தேய்ப்பவரிடம் காசுகேட்டுக்
கொண்டிருக்கின்ற திருநங்கையிடம் கதாநாயகி, கதாநாயகன் சென்ற வழியைக்
கேட்கிறாள். அதற்குத் திருநங்கை கதாநாயகன் சென்ற வழி தெரியவில்லை என்று
பொய் கூறுகின்றாள். அவ்வாறு கூறுவதற்குக் காரணம் கதாநாயகன் பாலியல் தொழில்
நடைபெறும் வீட்டிற்குச் செல்கிறான். பெண்கள் அவ்விடத்திற்குச்
செல்லக்கூடாது என்பதற்காக ஆகும்.
மருத்துவத் துறையில் நடக்கும் திரைமறைவு, பொருளாதார அரசியலை முதன்முறையாகச்
சுட்டிக் காட்டிய திரைப்படம் ‘ஈ’ ஆகும். அப்படத்தின் ஒரு பாடலில் ஓரமாக
ஆடிவிட்டுச் செல்லும்படிதான் திருநங்கை காட்டப்பெற்றுள்ளதைத் தவிர
அருவருப்பாகக் காட்டப்படவில்லை.
‘வானம்’ திரைப்படத்தில் திருநங்கை அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய பெருந்துன்பத்தை அனுபவிக்கின்றதை எடுத்தியம்புகின்றது.
ஒட்டுமொத்தத் தமிழ்த் திரைப்படச் சூழலில் இது போன்ற குறைந்த படங்கள்
மட்டுமே திருநங்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளன.
இத்திரைப்படங்களின் வரிசையில் ‘காஞ்சனா’ திரைப்படம் மிகவும்
குறிப்பிடத்தக்க ஒன்றாகும். திருநங்கைகளின் மன உணர்வுகளை
எடுத்துக்காட்டுவதோடு அவர்கள் கல்வி கற்று முன்னேற வேண்டியதன்
அவசியத்தையும் எடுத்தியம்புகின்றது. இப்படத்தில் ஒரு திருநங்கை மற்றொரு
திருநங்கையைத் தத்தெடுத்து வளர்ப்பதும், அவளை மருத்துவராக்கி, அவளுக்கென்று
ஒரு மருத்துவமனை கட்டிக் கொடுப்பதும் அவளின் கனவாக உள்ளது. இறுதியில்
அத்திருநங்கை மருத்துவராக ஆவதைக் காண்பித்தல் சிறப்புக்குரிய ஒன்றாகும்.
இழிவுபடுத்தும் திரைப்படங்கள்
‘கட்டபொம்மன்’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி
பெண்களை வேலைக்கு ஆள் தேர்வு செய்வதாக நகைச்சுவைக் காட்சி வருகின்றது.
அக்காட்சிப்படி இரண்டு திருநங்கைகள் வேலைத் தேர்வுக்காகக்
காத்திருக்கின்றனர். அவர்களைக் கவுண்டமணி கேலி செய்து, வேலைக்குத்
திறமையற்றவர்களாகக் கருதி தரமற்ற மதிப்பீட்டுடன் வெளியேற்றுகிறார்.
இக்காட்சி ஒரு விதத்தில் திருநங்கைகளின் வேலையில்லா நிலையைக்
குறிப்பிட்டுள்ளது.
ஆண்கள் திருநங்கையாக நடித்த படங்களில் குறிப்பிட வேண்டிய முக்கியப் படம்,
வசந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘அப்பு’ திரைப்படம் ஆகும். அப்படத்தில்
திருநங்கையாகப் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அப்படத்தில் பாலியல் தொழில்
செய்பவளாக, இளம் பெண்களைத் துன்புறுத்தும் கதாபாத்திரமாகத் திருநங்கை
படைக்கப்பட்டுள்ளார்.
‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் வையாபுரி முதலில் பெண் தன்மை உள்ள ஆணாக
விஜயின் நண்பராக இருக்கின்றார். சிறிது காலம் கழித்து அவர் திருநங்கையாக
மாறிவருவதை அப்படம் கேலியாகக் காண்பித்துள்ளது.
‘சில்லுனு ஒரு காதல்’திரைப்பட்த்தில் வடிவேல் பாலியல் தொழில் நடைபெறும்
இடத்திற்குச் செல்கிறார். அங்கு உள்ளவர்கள் அனைவரும் திருநங்கைகளாக
இருக்கின்றனர். அவர்கள் வடிவேலிடம் உள்ள பணத்தை ஏமாற்றிப் பிழைக்கும்
கூட்டமாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளனர்.
‘திருடாதிருடி’ என்னும் திரைப்படப் பாடல் திருநங்கைகளைக் கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
‘வேட்டையாடுவிளையாடு’ என்னும் திரைப்படத்தின் தொடக்கத்தில் திருநங்கை,
காவல் அதிகாரியின் உதவியோடு பாலியல் தொழில் செய்பவராகக் காட்டப்
பெற்றுள்ளது. மேலும் சிறைக் கைதிகளை வித்தியாசமான முறையில் தண்டிக்க
திருநங்கைகள், கைதிகளுக்குப் பாலியல் தொந்தரவு தருவதற்குப்
பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
‘தில்’ என்னும் திரைப்படத்தில் திருநங்கைகள் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யப்படும் துன்பத்தைக் குறிப்பிட்டுள்ளது.
திருநங்கைகளை மையமாகக் கொண்ட படங்கள்
‘கருவறைப்பூக்கள்’ என்னும் திரைப்படம் வீட்டை விட்டு
வெளியேறும் திருநங்கையின் வாழ்க்கையையும், சமூகத்தால் ஏற்படும் கொடுமைகளை
எதிர்த்துப் போராடுவதாகவும் அமைந்துள்ளது. இப்படத்தில் லிவிங் ஸ்மைல்
வித்யா, பிரியா பாபு என்ற திருநங்கைகளே முக்கிய கதாபாத்திரமாக
நடித்துள்ளனர். இதன் இயக்குநர் லூர்து சேவியர்.
‘நவரஸா’ என்னும் திரைப்படம் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் உருவாக்கப்
பெற்றதாகும். இப்படத்தில் திருநங்கை பகலில் ஆணாகவும், இரவில் பெண்ணாகவும்
வலம் வரும் காட்சி பதிவு செய்யப்பெற்றுள்ளது. மேலும் கூத்தாண்டவர் கோயில்
திருவிழா சுட்டப் பெறுகின்றது.
‘நர்த்தகி’ திரைப்படத்தில் கல்கி என்னும் திருநங்கையின் வாழ்க்கை இடம்
பெறுகின்றது. இப்படத்தில் தாயம்மா நிர்வாணம், மகளாகத் தத்தெடுக்கும் சடங்கு
போன்றவை சுட்டப்பெறுகின்றன.
‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’ திரைப்படம் முதன்முறையாக திருநங்கையால் உருவாக்கப் பெற்றுள்ளது.
முடிவுரை
சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய ஊடகங்களில் மிக
முக்கியமான கருவி திரைப்படம். ஆனால் பல நேரங்களில் திரைப்படம் சுயலாபத்தை
மட்டுமே எண்ணுகின்றது. எந்த உயிரினமும் தன் இனத்தின் ஊனத்தைக் குறை
காண்பது கிடையாது. ஆனால் ஆறறிவு கொண்ட மனித இனம் மட்டுமே மனிதத் தன்மையற்று
செயல்படுகின்றது. குடும்பத்தாலும், ஒட்டுமொத்த சமூகத்தாலும்,
பொதுவாழ்க்கையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு சமூகத்தில்
சமமான இடம் கிடைக்க வேண்டியது அவசியம் ஆகும்.
*****
No comments:
Post a Comment