Tuesday, December 8, 2015

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி தமிழகத்தில் நியமனம்! ---- .சின்னதுரை

http://siragu.com/?p=18940



சா.சின்னதுரை

prithika_yashiniசேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாசினி ஓர் திருநங்கை. பி.சி.ஏ பட்டதாரி. தனது இருபதாவது வயதில் பெண்ணாக மாறினார். வீட்டை விட்டும் வெளியேறினார். தன் வாழ்க்கை திசை மாறியதில் தளர்ந்துவிடாமல் போராட ஆரம்பித்திருக்கிறார் பிரித்திகா. விடுதிக் காப்பாளர், தொண்டு நிறுவன ஊழியர், ஹார்மோன் சிகிச்சை ஆலோசகர் என தொடர்ந்த பணிகளுக்கிடையில் தமிழினப் படுகொலைக்கு எதிரான போராட்டம், திருநங்கை திருமணம், வேலை வாய்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து செய்தார்.
தன் தளராத முயற்சியினால் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தல் முதல் நியமன ஆணை பெற்றது வரை ஒவ்வொரு கட்டமாக போராடி தடைகளைக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற வரலாற்றையும் படைத்திருக்கிறார். அவர் கடந்து வந்த கடினமான பாதைகளைக் காணலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா யாஷினி. காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை பிரித்திகா தான். ஆனால் பிரித்திகாவின் விண்ணப்பத்தை சீருடை பணியாளர் தேர்வாணையம் நிராகரித்தது. காரணம் அவரது கல்விச் சான்றிதழ்களில் ஆண் பெயர் இருந்தது. பின்னர் அவர் தனது பெயரை சட்டப்படி சான்றிதழ்களில் மாற்றினார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.
muthal thirunangalai kaavalமனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. ஆகஸ்ட் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடைபெற்ற அந்த தேர்வுக்கான அழைப்பு, 2 ஆம் தேதி இரவுதான் பிரித்திகாவுக்கு வந்தது. முன் பயிற்சிகளின்றி அந்தத் தேர்வில் பிரத்திகா கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்தத் தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிரித்திகா யாசினி குறித்த வழக்கு நவம்பர் 5-ம் தேதி, இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தேசிய சட்டப்பணி ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசுப் பணிகளில் திருநங்கைகளை 3-வது இனம் என்று குறிப்பிட்டு, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று 2014-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், உதவி ஆய்வாளர் பதவிக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 8-ந் தேதிதான் வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை, உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் அமல்படுத்தி இருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 3-ம் நபர் என்ற பிரிவை உருவாக்கியிருந்தால், அந்தப் பிரிவினருக்குரிய தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு ஒரு பிரிவு உருவாக்கப்படாததால், மனுதாரர் தன்னுடைய உரிமையைப் பெற நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இப்போது மனுதாரர் தகுதியை எப்படி நிர்ணயம் செய்து, அடுத்தகட்ட தேர்வு பணியை மேற்கொள்ளலாம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 1.11 நொடிகள் காலதாமதமாக ஓடிவந்தது, உதவி ஆய்வாளர் பதவி கிடைப்பதற்கு இடையூறாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்தப் பதவிக்கான தேர்வில் அவர் பாதி தூரம் கடந்துவிட்டார். இப்போது அவரை தடுத்து நிறுத்த விரும்பவில்லை.
உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் மனுதாரரைத் தவிர, திருநங்கைகள் வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை. அடுத்த முறை காவல்துறையில் உள்ள பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, மூன்றாம் நபர் என்ற ஒரு பிரிவை திருநங்கைகளுக்காக ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிடுகிறோம்.
தற்போது, உதவி ஆய்வாளர் பதவியை பெறுவதற்கு மனுதாரர் தகுதியானவர். அவருக்கு அப்பதவியை வழங்கவேண்டும். உதவி ஆய்வாளராக பணியில் சேரும் மனுதாரர் பிரித்திகா யாசினி, பிற திருநங்கைகளுக்கும் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், இந்தப் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வார் என்று நம்புகிறோம்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு மூலம், தமிழக காவல்துறை வரலாற்றில் உதவி ஆய்வாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெயரை பிரித்திகா யாசினி பெற்றுள்ளார். ”இந்த வெற்றியை திருநங்கை சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்” என்று பிரித்திகா யாசினி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 7, 2015 இதழ்

தமிழ் வார இதழ்

No comments:

Post a Comment