ஓவியங்களை விற்று திருநங்கைகளை படிக்கவைக்கிறேன் - திருநங்கை கல்கி
இன்று நூற்றுக்கணக்கான
திருநங்கைகள் கல்வியை இழந்து நல்லதொரு வாழ்க்கையை இழந்து தவிப்புடன்
உண்மையான அன்புக்காகவும், மரியாதையான வாழ்க்கைக்காவும் ஏங்குகிறார்கள்.
கடந்த பத்துவருடங்களாக திருநங்கைகளின் ஓலக்குரலை என் எழுத்திலும், கவிதையிலும், திரைப்படத்திலும், ஓவியங்களிலும் ஒலிக்கிறேன்.
ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கிறேன்.
அங்கெல்லாம் மாற்றுப்பாலினர் ஒருசிலர் மட்டுமே கல்விகற்பதை காண்கிறேன்.
மற்றவர்களெல்லாம் தெருவில் அன்றாட தேவைகளுக்காக இருக்கிறார்கள்.
சமுதாயத்தின் எத்தனை பெரிய அவலம் இது?
கல்வி மறுக்கப்படும்போது நல்லதொரு சிறப்பான எதிர்காலம் மறுக்கப்படுகிறது.
வீட்டைவிட்டு துரத்தப்படும் அல்லது வெளியேறும் திருநங்கைகளும்,
திருநம்பிகளும் அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளுக்காகவே போராடும் போராட்ட
வாழ்க்கையில் கல்வி புறந்தள்ளப்படுகிறது. அந்தக்கல்வியை திருநங்கைகளுக்கு
மீண்டும் வழங்க நிதிஆதாரங்கள் தேவை. அரசாங்கம் செய்யும் என்றெல்லாம்
காத்திருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
கடவுள் என்னை திருநங்கையாக படைத்து எனக்கு ஏராளமான திறன்களையும் வரங்களாக வழங்கியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
எனது ஓவியத்திறனை முழுவதுமாக பயன்படுத்த தொடங்கியுள்ளேன். அது எனக்கு ஒரு
தெய்வீக, திவ்ய பயணமாக அனுபவமாக இருக்கிறது. இன்று எனது ஓவியங்களை விற்று
திருநங்கைகளுக்கு கல்வி வழங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதில் வெ
ற்றியும் பெற்று வருகிறேன்.
ஓவியப்பணியில் கல்கி |
வரும் நவம்பரில் ஒரு அற்புத மாலைப்பொழுதில் எனது ஓவியங்கள் விற்ற தொகையை கல்வி கற்க விரும்பிய நான் தேர்ந்தெடுத்த என் திருநங்கை சகோதரிகளுக்கு வழங்குவேன்.
நான் ஒரு திருநங்கை என்பதில் எள்ளளவும் எனக்கு குறையில்லை, கவலையுமில்லை.
பெற்றவர்களின் அரவணைப்புப்பெறுவது திருநங்கைகளுக்கு அவ்வளவு எளிதான விஷயம்
அல்ல. அதிலும் அவர்களை பெருமைப்படுத்தும் அளவுக்கு நம் செயல்களையும்
வாழ்க்கையையும் உயர்த்தவேண்டும்.
'புறக்கணிப்பு' என்ற கல்கியின் ஓவியம் |
என்னைப்போன்றோருக்கு உதவும் கலைத்திறமையுடன் என்னை படைத்திருக்கிறார்
என்பதே பெரிய வரம். கல்வியே பெரும் சொத்து, மூலதனம், வாழ்க்கையை மாற்றும்
மந்திரச்சாவி. அந்தக்கல்வியை வழங்கும் எனது பணிகளை தொடருவேன்.
எனது ஓவியங்கள் விற்பனைக்குள்ள இணையதளம் காண கிளிக் செய்யுங்கள் www.fueladream.com/home/campaign/278.
எனது வலைத்தளம் காண www.kalkisubramaniam.com